மேஜர் ரிஷி அவர்களின் வீரக்கதை

ஒரு ராணுவ அதிகாரியின் வீரக்கதை !!

மேஜர் ரிஷி நாயர் நமது அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான இவர் கேசிபி மற்றும் ஏர் இந்தியா போன்ற நிறுவனங்களில் கிடைத்த வேலைகளை உதறிவிட்டு இந்திய ராணுவத்தில் இணைந்தார்.

பயிற்சிக்கு பின் மேஜர். ரிஷி நாயர்
இந்திய ராணுவத்தின் காலாட்படை ரெஜிமென்ட்டுகளில் ஒன்றான (மெக்கனைஸ்ட் இன்பாஃன்டரி- Mechanised Infantry = MECHINF ) அதாவது இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பிரிவில் லெப்டினன்டாக நியமணம் செய்யப்பட்டார்.

பின்னர் ஜம்மு காஷ்மீர் ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் படைப்பிரிவில் அனைத்து வீரர்களும் பணியாற்ற வேண்டும் என்ற விதியின்படி ராஷ்டிரிய ரைஃபிள்ஸ்ஸில் இணைந்தார். குறைந்த அளவே வார்த்தைகளை உபயோகிப்பவராக இருந்தாலும் மிக எளிதில் எவருடனும் நட்புறவை ஏற்படுத்தி கொள்வதில் வல்லவர்.
இவருடைய இந்த குணமே ட்ரால் பகுதியில் இந்திய ராணுவத்திற்கு பெரிய நட்பு வட்டாரத்தை உருவாக்கி இருந்தது.
ட்ரால் பகுதி மக்கள் இவரை அன்புடன் “கான் சாஹிப்” என அழைக்கிறார்கள்.அதாவது “மரியாதைக்குரிய நண்பர்” என பொருள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ட்ரால் பகுதி இவர் பணியாற்றி வந்த 42வது ராஷ்டிரிய ரைஃபிள்ஸ்ஸின் கீழ் வருகிறது.
ட்ரால் பகுதி மிகவும் பதற்றம் நிறைந்த பகுதியாகும் . இது புல்வாமா மாவட்டத்தில் உள்ளது. புல்வாமா அனைவரும் நன்கு அறிந்த ஊர் என நினைக்கிறேன்.இந்த பகுதி ஹிஸ்புல் மூஜாஹீதின் பயங்கரவாதிகளின் முக்கியமான முகாம் . இந்த பகுதியை சார்ந்தவன் தான் பர்ஹன் வானி. இவனை ராணுவம் கொன்ற போது ட்ராலை சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கர கலவரம் பல மாதங்களுக்கு நீடித்தது ஆனால் ட்ராலில் ஒரு சிறிய கல் கூட வீசப்படவில்லை . அனைத்தும் மேஜர் ரிஷியின் மேல் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை மற்றும் மரியாதை காரணமாக தான். சிறுவர்களும் மக்களும் இந்த பகுதியில் ராணுவம் ரோந்து செல்லும் போது வரவேற்கும் அளவுக்கு நிலைமை மிகவும் சீராக இருந்துள்ளது. மேலும்
மேஜர் ரிஷிக்கு அந்த பகுதி மக்கள் அடிக்கடி பயங்கரவாதிகள் பற்றிய துப்பு கொடுத்து உதவியதால் இந்திய ராணுவம் பல பயங்கரவாதிகளை வீழ்த்தி உள்ளது.

மார்ச் 4, 2017, மாலை தனது தாயாருடன் தொலைபேசியில் பேசிய மேஜர். ரிஷி “அம்மா நான் மிகவும் முக்கியமான பணிக்கு செல்கிறேன் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” எனக்கூறி இணைப்பை துண்டித்து விட்டு பணிக்கு செல்கிறார்.
ட்ரால் பகுதியில் ஒரு வீட்டில் நீண்ட காலமாக ராணுவத்திடம் இருந்து தப்பி வந்த உள்ளூர் பயங்கரவாதி அக்விப் மற்றும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதியான பாகிஸ்தானை சார்ந்த ஃபர்ஸானும் பதுங்கி இருப்பதாக மேஜர் ரிஷிக்கு தகவல் கிடைக்க , தனது உடனடி நடவடிக்கை குழுவை (Quick Response Team – QRT) தலைமை தாங்கி அந்த பகுதிக்கு சென்று குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைத்து முற்றுகை இட்டார்.

அடுத்து ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை தொடங்கியது. ராணுவம் வீட்டை குண்டு வைத்து தகர்க்க முடிவு செய்கிறது. மேஜர். ரிஷி தாமாக இந்த பணியை மேற்கொள்ள முன்வருகிறார். வீட்டின் ஒரு பகுதி குண்டு வைத்து தகர்க்கப்பட பயங்கரவாதிகள் வீட்டின் மற்றொரு பகுதிக்கு நகர்கிறார்கள் இதனால் பயங்கரவாதிகள் ஒரு தந்திரபோயமான இடத்தில் மாட்டி கொள்கிறார்கள். இதை உணர்ந்து கொண்ட ராணுவம் உடனடியாக அடுத்த குண்டை வைத்து வீட்டை முழுவதும் தகர்க்க முடிவு செய்கிறது.

மேஜர். ரிஷி மறுபடியும் அந்த பணியை தாமாகவே மனமுவந்து ஏற்று கொள்கிறார். இம்முறை 10கிலோ வெடிபொருளுடன் மீண்டும் வீட்டிற்குள் புகுந்து இருட்டில் குண்டு வைக்க சரியான இடத்தை தேடும் போது
அப்போது அவரை கண்ட பயங்கரவாதி ஒருவன் மிக அருகே இருந்து (POINT BLANK RANGE) தனது ஏகே47 ரக துப்பாக்கியால் அவரை நோக்கி கண்முடித்தனமாக சுடுகிறான். இரு தோட்டாக்கள் மேஜருடைய முகத்தை துளைக்கின்றன.

மேஜர் உயிரோடு தான் இருக்கிறார் ஆனால் மிகக்கடுமையான வலி !!
முதல் தோட்டா மேஜரின் மூக்கை கடுமையாக சேதப்படுத்தி செல்கிறது.
இரண்டாவது தோட்டா அதை விட கொடுரமான காயத்தை ஏற்படுத்துகிறது, அந்த தோட்டா மேஜரின் இடதுபக்க கன்னத்தின் எலும்பில் துளைத்து வலதுபக்க தாடை எலும்பு வழியாக வெளியேறி இருந்தது.

அவரது முகம் மிகவும் கடுமையாக சிதைந்து போய் இருந்தது. மூக்கின் பெரும்பகுதி முகத்தில் இருந்து தெறித்து போய் இருந்தது. மிகவும் கடுமையான இரத்தப்போக்கும், வலியும் இருந்தது. முகம் முழுவதும் இரத்தம் , சதை பகுதிகள் முகத்தில் சிதறி கிடந்தன.

ஒரு மனிதனுக்கு இத்தகைய சூழலில் உயிர்பிழைக்க தான் தோன்றும். ஆனால் பயங்கரவாதி வீட்டிலிருந்து வெளியேறி சென்று தாக்கினால் தன் குழுவிற்கு பேராபத்து என உணர்ந்து கொண்ட மேஜர். ரிஷி தனது ஏகே47 ரக துப்பாக்கியால் அந்த பயங்கரவாதியை சல்லடையாக துளைக்கும் அளவுக்கு சுட்டுதள்ளி விட்டு ஊர்ந்தே சென்று வீட்டில் இருந்து வெளியேறுகிறார்.

இவையணைத்தும் சில நொடிகளில் நடந்த நிகழ்வுகள், ஒரு நிமிடம் உங்கள் கண்களை முடி அங்கு நடந்தவற்றை கற்பனை செய்து பாருங்கள் ..!!

வெளியே வந்த அவரை கட்டளை அதிகாரி (Commanding Officer) பாதுகாப்பான பகுதிக்கு இழுத்து சென்றதும் அந்த ரெஜிமென்ட்டின் மருத்துவ அதிகாரி (Regimental Medical Officer) உடனடியாக முதலுதவி செய்து மேஜர். ரிஷியை ஶ்ரீநகர் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்புகிறார். ஶ்ரீநகர் செல்லும் வழியில் தன்னுடன் இருந்த மருத்துவர் மிகவும் கவலையோடு இருப்பதை கண்ட மேஜர் அவரிடம் சைகையில் எனக்கு ஒன்றும் இல்லை நான் மீண்டும் திரும்பி வருவேன் என்றார். பின்னர் சிறுது நேரத்தில் ஶ்ரீநகர் வரும் வழியில் மேஜர் ரிஷி சுயநினைவை இழந்து விட்டார்.

ஶ்ரீநகர் ராணுவ மருத்துவமனையில் மருத்துவராக இருந்தார்
மேஜர்.ரிஷியின் மனைவி கேப்டன் அனுபமா.
தனது கணவருக்கு சம்பவித்ததை பற்றி அறிந்து கொண்ட அவர் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திருந்தார்.

தனது அன்பு கணவர் வந்தது சேர்ந்ததும் ஓடோடி வந்து அவர் முகத்தை பார்த்த கேப்டன். அனுபமா மயங்கி விழுந்துள்ளார். அத்தனை கோரமாக மேஜர் ரிஷியின் முகம் இருந்தது. அன்று இரவு முழுவதும் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கிறார்கள்.

இதனிடையே 16 மணிநேரம் ட்ரால் பகுதியில் நீடித்து வந்த சண்டை இரண்டாவது பயங்கரவாதியும் கொல்லப்பட முடிவுக்கு வருகிறது.

மூன்று நாட்கள் கழித்து மேஜர். ரிஷி பேச முடியாத சுழலிலும் கையால் எழுதி பிறருடன் தொடர்பு கொண்டு இருந்தார். பின்னர் அங்கிருந்து தில்லி ராணுவ தலைமை மருத்துவமனைக்கு (Research and Referral Hospital – RR HOSPITAL)அனுப்பி வைக்கப்பட்டார்.

இதற்கிடையே தில்லி காவல்துறை மேஜர் ரிஷி இறந்துவிட்டதாக ஆலப்புழையில் உள்ள அவரது வீட்டிற்கு தவறான தகவலை அறிவிக்க ஒட்டுமொத்த குடும்பம் மற்றும் ஆலப்புழா நகரமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பின்னர் தவறான செய்தி என தெரிய வர ஆலப்புழை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஏற்கனவே மேஜர். குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வந்து குடும்பத்திற்கு தவறான தகவல் அளித்தது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியதற்கு ஒப்பானது.

மேஜர் ரிஷி நாயருடைய அசாத்திய வீரத்தினை பாராட்டி இந்திய அரசு அந்த வருடம் (2017) சுதந்திர தினத்தன்று சேனா மெடல் வழங்கி கவுரவித்தது.

மேஜர். ரிஷி தற்போது தில்லியில் உள்ள ராணுவ தலைமை மருத்துவமனையில்
(Research and Referral Hospital – RR HOSPITAL) பலகட்ட முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சைகளை பெற்று வருகிறார்.
ஒரளவுக்கு முகம் சீரமைக்கப்பட்டாலும் அவருடைய முகத்தில் ஏற்பட்ட சேதம் நிரந்தர வடுவாகவே இருக்கும்.

முகத்தில் எப்போதும் ஒரு முகமூடியை அணிந்து கொண்டு இருக்கும் மேஜர் கூடிய விரைவில் சிகிச்சையை முடித்துவிட்டு களம் காண ஆவலோடு இருக்கிறார்.ட்ரால் பகுதி மக்களும் அவரின் வரவுக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். அவ்வப்போது ராணுவ அதிகாரிகளிடம் ட்ரால் பகுதி மக்கள் மேஜர். ரிஷி நாயரின் உடல்நலம் பற்றி விசாரிக்கிறார்கள்.

இதைத்தான் நாட்டுப்பற்று என்கிறோம் ,
எத்தனை முறை காயமடைந்தாலும் சரி,
அது எத்தனை கோரமாக இருந்தாலும் சரி,
தேசத்தை நேசிக்கிறார்.

தேசத்தை நேசிக்கும் இவர் விரைவில் நலம்பெற மனதார வாழ்த்துவோம் !!

ஜெய்ஹிந்த்

வந்தே_மாதரம்

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

மேஜர். ரிஷியின் காயம்பற்றிய புகைப்படங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளன.