இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் அஜித் குமார் தோவல்

  • Tamil Defense
  • January 20, 2021
  • Comments Off on இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் அஜித் குமார் தோவல்

இவரைப் பற்றி அறிமுகம் தேவையில்லை நமக்கு.முன்னாள் உளவுத் துறை அதிகாரி,முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி,முன்னாள் சட்டம் ஒழுங்குத் துறை அதிகாரி மற்றும் இந்தியாவின் ஐந்தாவது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்.மேலும் இன்டலிஜன்ஸ் பீரோவின் முன்னாள் இயக்குனராக பணியாற்றியவர்.மேலும் அதன் நேரடி நடவடிக்கை பிரிவின் தலைமையாக பத்தாண்டுகள் பணியாற்றியவர்.

2014 முதல் இந்தியாவின் (பிரதமரின் ) பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிவருகிறார்.உத்ரகண்ட்டில் 1945 ல் பிறந்தவர்.இதுவரை காவல்துறை விருது , குடியரசு தலைவரின் காவல்துறை விருது மற்றும் கீர்த்தி சக்ரா விருது பெற்றவர்.இவரின் அப்பா இந்திய இராணுவ அதிகாரி ஆவார்.தனது ஆரம்ப கால படிப்பை அஜ்மீர் இராணுவப் பள்ளியில் படித்தார்.

1967 ல் ஆக்ரா பல்கலையில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.1968ல் ஐபிஎஸ் ஆக தனது பணியை தொடங்கினார்.மிசோரம் மற்றும் பஞ்சாப்பில் நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு ஆபரேசனில் மிக தீவிரவாக செயல்பட்டவர்.

1999ல் இந்திய விமானம் ஐசி-814 கடத்தப்பட்ட கந்தகார் சம்பவத்தின் போது தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய மூவரில் இவரும் ஒருவர்.1971 முதல் 1999 கடத்தப்பட்ட 15 இந்திய பயணிகள் விமான சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வந்ததில் இவரின் பங்கு அளப்பரியது. அதன் பின் இன்டலிஜன்ஸ் பிரோ எனப்படும் ஐபியில் 10 வருடங்கள் பணியாற்றினார்.மேலும் மல்டி ஏஜென்ஸி சென்டர் என்ற பிரிவை உருவாக்கியவர்.

மிசோ தீவிரவாதம் பெருகிவந்த போது  அதைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு ஆற்றினார்.மிசோ தேசிய முன்னனி கமாண்டர் 7 பேரில் 6 பேரை வென்றவர்.சீரிய முயற்சியால் பின் அது அரசியல் இயக்கமாக மாறி மிசோரம் மாநிலம் உருவாகி அதன் ஆட்சியைப் பிடித்தது எல்லாம் தனி வரலாறு.சீனாவிற்குள் பணியாற்றினார்.பர்மாவின் அரக்கானில் மிசா தீவிரவாதிகளுடன் மறைந்தே வேலைபார்த்தவர்.சிக்கிமை இந்தியாவின் மாநிலமாக மாற்றியதில் பெரும்பங்கு வகித்தவர்.

இவருக்கு முன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம் கே நாராயண் அவர்களின் கீழ் பல்வேறு தீவிரவாத எதிர்ப்பு ஆபரேசன்களில் பணியாற்றியவர்.பஞ்சாப்பில் ரோமானியன் டிப்ளோமட் லிவியு ராடு அவர்களை மீட்டதிலும், பொற்கோவிலுக்குள் ஆபரேசன் பிளாக் தன்டருக்கு முன் சில முக்கிய ஆவணங்களை கோவிலுக்குள் இருந்து சேகரித்தார்.இந்த தகவல்களின் உதவியால் தான் பின்னாளில் ஆபரேசன் பிளாக் தன்டர் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றி பல முக்கிய தகவல்களை சேகரித்தவர்.1990களில் காஷ்மிருக்கு சென்று தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.இவரின் தொடர்ந்த சீரிய முயற்சியால் தான் காஷ்மீரிலேயே குகா பரே என்று அழைக்கப்பட்ட முகமது யூசுப் பலே என்பவர் உதவியால் இந்திய ஆதரவு தீவிரவாத இயக்கத்தை தொடங்கினார்.

காஷ்மீரில் இன்று ஓரளவுக்கு தீவிரவாதம் குறைந்ததற்கு இவர்களும் காரணம்.பாகிஸ்தான் மற்றும் உள்ளூர் தீவிரவாதிகளை களையெடுத்தது இவர்களே.2003ல் பாரமுல்லாவில் கிரிக்கெட் விளையாட்டை தொடங்க சென்ற போது மறைந்திருந்த தீவிரவாதிகள் தாக்கியதில் உயிரிழந்தார் குகா பரே.காஷ்மீர் அவாமி லீக் என்ற கட்சி தொடங்கி எம்எல்ஏ வாக இருந்துள்ளார் இவர்.

தோவலின் இதுபோன்ற முயற்சியால் தான் 1996ல் காஷ்மீரில் தேர்தல் நடந்தது.2005ல் தோவல் ஐபி-ல் இருந்து ஓய்வுபெற்றார்.அதன் பிறகு 2009ல் விவேகானந்தா இன்டர்நேசனல் ஃபௌன்டேசனில் இயக்குநராக பணியை தொடங்கிய போதும் மறைமுகமாக தேசியப் பாதுகாப்பு விசயங்களில் கலந்துகொண்டார்.

2014ல் இந்தியாவின் 5வது தேசியப் பாதுகாப்பு ஆலோகராக இணைந்தார்.ஈராக்கின் மொசூலை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியபோது திக்ரிக்கிலிருந்த 46 செவிலியர்களை மீட்டதில் பெரும் பங்கு வகித்தார்.இதற்காக ஜீன் 2014ல் ஈராக் சென்று ஈராக் அதிகாரிகளுடன் பலகட்டமாக பேசியுள்ளார்.அதன் பின் 5 ஜீலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் எர்பில் என்ற நகரத்தில் செவிலியர்களை விடுவிக்க ,இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்த இரண்டு சிறப்பு விமானங்கள் மூலமாக அவர்கள் இந்தியாவின் கொச்சி வந்தடைந்தனர்.அதன் பின் முன்னாள் இராணுவ தளபதியுடன் இணைந்து மியான்மிரில் தீவிரவாத எதிர்ப்பு ஆபரேசன் நடத்தினார்.இதில் 50 தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.

இவரின் மிக மிக முக்கிய செயலாக கருதப்படுவது பாகிஸ்தானை பிதுக்கியது தான்.அதாவது பாகிஸ்தான் தாக்கினால் ” தற்காப்பு ” என்ற இந்தியாவின் கண்ணோட்டத்தை மாற்றி ‘Defensive Offensive’ மற்றும் ‘Double Squeeze Strategy ஐ உருவாக்கினார்.இதன் தொடர்ச்சி தான் சர்ஜிகல் தாக்குதல்.இதற்கு முன் வீரர்கள் அரசிற்கு தெரியாமல் சிறு சிறு எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தியிருந்தாலும் அரசு அனுமதித்த பெரிய தாக்குதலாக இது உள்ளது.

அடுத்து பெரிய விசயம் டோகலாம் பிரச்சனையை போர் ஏதுமின்றி பேச்சவார்த்தைகள் மூலம் தீர்த்தது.இதில் வெளியுறவு செயலர் ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவுக்கான சீன தூதர் கோகலே அவர்களின் பங்கும் முக்கியமானது.

விருதுகள்

*Police medal ஐ மிக இளவயதிலேயே பெற்றவர் இவர் தான்.

*அதன் பிறகு president’s police medal பெற்றார்.

*1988 ல் கீர்த்தி சக்ரா விருது பெற்றவர்.காவல்துறை அதிகாரி இந்த விருதைப் பெறுவது அதுவே முதல் முறை.இதற்கு முன் அந்த விருதுகள் இராணுவ வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது .

நான் கொடுத்த தகவல்கள் அனைத்தும் அவரைப் பற்றி பொதுவெளியில் வெளியான தகவல்கள் மட்டுமே.இரசியங்கள் இரகசியங்களாகவே இருக்கும்.

இந்திய இராணுவச் செய்திகள்