மேஜர் மொகித் சர்மா அவர்களின் வீரக்கதை

ஹரியானாவின் ரோடக் என்னுமிடத்தில் 13 ஜனவரி 1978 இரவு 10.30 மணி அளவில் பிறந்தது அந்த வீரக்குழந்தை.அவரது  பெற்றோரான ராஜேந்திர பிரசாத் மற்றும் சுசிலா சர்மா அவர்களின் இரண்டாவது குழந்தையாக உதித்தார் மேஜர்.அவரது குடும்பத்தார் அவரை செல்லமாக “சிண்டு” எனவும், அவரது நண்பர்கள் அவரை “மைக்” எனவும் அழைத்தனர்.

அவர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகன்,கிட்டார் நன்றாக வாசிப்பார்.

டெல்லியில் உள்ள மனவ் ஸ்தலி பள்ளியில் படிப்பை தொடங்கிய அவர், பிறகு 1988ல் காசியாப்பாத்தில் உள்ள  பள்ளியில் சேர்ந்து 1995ல் பள்ளி படிப்பை முடித்தார்.
12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் வெளியேறியவுடன்,அவரது பெற்றோர் அவரை மகாரஸ்டிராவில் உள்ள ஸ்ரீசந்த் கஜனன் மகாராஜ் பொறியியல் கல்லூரியில் சேர்த்தனர்.

என்னதான் பொறியியல் கல்லூரியில் இணைந்தாலும் அவரது மனம் நாட்டிற்கு சேவை செய்வதில் இருந்தது.பொறியியல் படிப்பை நிறுத்தி 1995ல் என்டிஏவில் இணைந்தார்.

என்டிஏவில் இந்தியா ஸ்குவாட்ரான் குழுவில் இணைந்து பயிற்சி பெற்று மிகச் சிறந்த வீரராக வெளிவந்தார்.குதிரை சவாரியில் வெற்றியாளர்.அதே போல் தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்சிங் வீரர்.நல்ல நீச்சல் வீரரும் கூட.அதன் பிறகு ஐஎம்ஏவில் இணைந்தார் மேஜர்.அங்கும் மிகச் சிறப்பான வீரராக இருந்ததால் அப்போதைய குடியரசுத் தலைவர் ஸ்ரீ நாராயண் அவர்களை சந்திக்கும் வாய்ப்பை பெற்றார்.

1999 டிசம்பர் 11ல் ஐஎம்ஏவில் பயிற்சி பெற்று ஐந்தாவது மெட்ராஸ் படைப்பிரிவில் இணைந்தார்.முதலில் ஹைதராபாத்தில் சேவை செய்தார்.அதன் பின் காஷ்மீர் பயங்கரவாத எதிர்ப்பு படையான இராஷ்டீரிய ரைபிள்ஸ் படையின்  38வது பட்டாலியனில் இணைந்து அங்கு தனது வீரத்தை வெளிப்படுத்தி தனது முதல் பதக்கத்தை பெற்றார்.2002ல்  COASM ( Chief of Army Staff Commendation Medal) விருதை பெற்றார்.

இணைந்த முதல் நாள் முதல் பாரா கமாண்டாே படையில் இணைவது அவரது லட்சியமாக இருந்தது.2003ல் முதல் பாரா கமாண்டோ பட்டாலியனில் இணைந்தார்.காஷ்மீரில் ஒரு வருடம் சிறப்பாக செயல்பட்ட மொகித் அவர்களுக்கு 2004ல் சேனா மெடல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.அதன் பின் 2005 முதல் 2006 வரை இரண்டு வருடங்கள் பெல்கமில் பாரா பயிற்சியாளராக இருந்தார்.அதன்  பின் மீண்டும் களப்பணியாற்ற காஷ்மீர் சென்றார்.

2009 மார்ச் 21, காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் ஹப்ருடா காட்டுப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைக்க மேஜர் மொகித் தனது தாக்கும் குழுவுடன் சம்பவ இடத்தை அடைந்தார்.முன்னனியில் இருந்து வீரர்களை வழிநடத்திய மேஜர் அவர்களுக்கு சந்தேகத்திற்கிடமாக நடமாட்டங்கள் தென்பட அவர் தனது குழுவினரை எச்சரிக்கை செய்த அதே நேரத்தில் பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி சராமாரியாக சுடத் தொடங்கினர்.கிட்டத்தட்ட மூன்று பக்கங்களிலிருந்தும் பயங்கரவாதிகள் சுட்டனர்.இதில் நான்கு கமாண்டாே வீரர்கள் படுகாயமடைந்தனர்.தனது உயிரை சிறிதும் பொருட்படுத்தாது காயமடைந்த தனது இரு சகாக்களையும் மீட்டார்.தனது கையில் இருந்த ஒரு கிரேனைடை எடுத்து பயங்கரவாதிகள் மீது வீச இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.அந்த இடத்தில் தனது நிலையை வலுப்படுத்த முனைந்த போது ஒரு தோட்டா அவரது நெஞ்சுப் பகுதியை தாக்கியது.ஒரு குண்டை தாங்குவது என்பது அவ்வளவு எளிதாக காரியமல்ல.ஒரு மொத்த பேருந்தும் உங்கள் மீது ஏறி செல்வது போன்றதொரு வலி அது.

ஆனால் மேஜர் தளரவில்லை.நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மேஜர் மீண்டும் எழுந்தார்.தனது குழுவினரின் பாதுகாப்புக்காக முன்னகர்ந்து மேலும் தாக்கினார்.இந்த தாக்குதலில் மேலும் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.அதே நேரத்தில் மேலும் இரு வீரர்களை காப்பாற்றினார்.ஆனால் அதீத காயம்  காரணமாக மேற்கொண்டு தொடர்ந்து நடந்த சண்டையில் அவர் களத்திலேயே வீரமரணம் அடைந்தார்.

போரில் காட்டிய வீரம்,சக வீரர்களை தன் உயிரை மதிக்காமல் காப்பாற்றியது,பயங்கரவாதிகளை வீழ்த்தியது என போரில் காட்டிய உட்சபட்ச வீரம் காரணமாக அவருக்கு அசோக சக்ரா விருது வழங்கியது இந்தியா.

மேஜர் போன்ற வீரர்களால் தான் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்.