இந்தியாவின் முதல் இலகுரக விமானமான தேஜாஸின் கதை !!

  • Tamil Defense
  • January 25, 2021
  • Comments Off on இந்தியாவின் முதல் இலகுரக விமானமான தேஜாஸின் கதை !!

1981ஆம் ஆண்டு இந்தியா தனது மிக்21 விமானங்களுக்கு மாற்று வேண்டும் என்பதை உணர்ந்தது. காரணம் 1990களில் ஆரம்பம் அல்லது மத்தியில் மிக்21 விமானங்கள் காலாவதி ஆகிவிடும்.

உடனடியாக இந்தியாவிலேயே மாற்று விமானம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது .அதற்கு முன்னர் மாருட் என்கிற விமானம் தயாரிக்கப்பட்டு இருந்தாலும் அப்போது அதன் தயாரிப்பு நிறுவனம் கடையை சாத்திவிட்டது..

என்ன செய்வது என யோசித்து கொண்டிருந்த நிலையில் அரசு ADA அமைப்பை இதற்கு பணித்தது. ஆனால் தகுந்த விஞ்ஞானிகள் இல்லை.

அந்த சமயத்தில் முன்னாள் DRDO விஞ்ஞானியும், அன்றைய பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகருமான திரு. வி.எஸ். அருணாச்சலம் “கோட்டா ஹரிநாரயணா” எனும் விஞ்ஞானியை இந்த பணிக்கு பரிந்துரை செய்தார்.

கோட்டா ஹரிநாரயணா ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர், இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்று பெங்களூர் இந்திய அறிவியல் கல்லூரியில் ஏரோஸ்பேஸ் பொறியியலில் சிறு படிப்பை முடித்திருந்தார். பின்னர் HAL நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

அவருக்கு அழைப்பு வர தனது பணிகளை துவங்கினார்,ஆனால் ஆரம்பம் முதலே பல சறுக்கல்கள் திறமையான விஞ்ஞானிகள் இல்லை.

ஆகவே நாடு முழுவது இருந்து 20 கல்வி நிறுவனங்கள் மற்றும் 40 ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்து சுமார் 400 அறிவியலாளர்களை தெரிவு செய்தார்.

பின்னர் வடிவமைப்பு பணிகளை மேற்கொள்ளக்கூடிய கணிணி இந்தியாவில் இல்லை அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அமெரிக்க அதிபர் ரீகனிடம் பேசி IBM390 கணிணியை பெற்று தந்தார்.

அதன் பின்னர் 90களின் ஆரம்பத்தில் வடிவமைப்பு பணிகளுக்கான பிரத்யேக CATIA சாஃப்ட்வேரை Dassault நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது.

அதன் பின்னர் படிப்படியாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பொக்ரான் அணு ஆயுத சோதனை காரணமாக அமெரிக்கா பொருளாதார தடைகள் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியது.

இருந்தாலும் மெதுவாக பணிகள் நடைபெற்று வந்தன, உலோகவியல் மற்றும் LCD திரைகள் உருவாக்கம் நடைபெற்றது.

2001-2009 வரையிலான காலகட்டத்தில் தேஜாஸ் பல விதத்தில் மேம்படுத்தபட்டு 2011ஆம் ஆண்டு சேவைக்கு தயார் என சான்றிதழ் அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு பஹ்ரைன் விமான கண்காட்சியில் தேஜாஸ் பங்கு பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தற்போது இந்திய விமானப்படையின் 45ஆவது மற்றும் 18ஆவது படையணிகளில் சேவையில் உள்ளது, மேலும் 83 தேஜாஸ் மார்க்1 ரகம் படையில் சேர்க்கப்பட உள்ளது, மேலும் தேஜாஸ் மார்க்2 பணிகளும் நடைபெற்று வருகின்றன.

விஞ்ஞானி கோட்டா ஹரிநாரயணா அவர்களுக்கு கடந்த 2002ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.