தில்லியில் உள்ள மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு கல்வி மற்றும் ஆய்வு கல்லூரியில் உள்ள ஒய்வு பெற்ற கடற்படை அதிகாரியான கமோடர் ராபி தாமஸ் ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் இந்திய கடற்படை ஒர் உண்மையான நீலக்கடல் கடற்படையாக உருமாற்றம் பெற அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் அவசியம் என கூறியுள்ளார்.
வலிமையான நீலக்கடல் கடற்படையின் அடித்தளமே அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் எனவும், இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தில் நிலவும் அதிகார போட்டியை எதிர் கொள்ளவும் இவை தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.
பொதுவாக அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் வழக்கமான டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை விட அதிக மதிப்பு கொண்டவை, ஆனால் இரண்டின் வாழ்க்கை காலத்தில் வரும் பராமரிப்பு மற்றும் பிற செலவுகளை கணக்கிட்டால் டீசல் எலெக்ட்ரிக் கப்பல்களே அதிகம் பணசெலவு ஏற்படுத்துபவை ஆகும்.
அமெரிக்க கடற்படை வெளியிட்ட ஆய்வு கட்டுரை ஒன்றில் பல டீசல் எலெக்ட்ரிக் கப்பல்களை அதிக செலவில் இயக்கினாலும் அணுசக்தி நீர்மூழ்கியோடு ஒப்பிடுகையில் பலன் மிக குறைவே.
மேலும் ஒரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பலின் வலிமை 2 முதல் 6 டீசல் எலெக்ட்ரிக் கலன்களுக்கு சமமானதாகும்.
இவற்றை வைத்து பார்க்கையில் ஒரு டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி படையானது அதே எண்ணிக்கையிலான அணுசக்தி நீர்மூழ்கி படையை விட 1.5 முதல் 3.5 மடங்கு வரை அதிக செலவு ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதை போல அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் நாட்டின் மிகப்பெரிய சொத்து ஆகும், உற்ற நட்பு நாட்டுக்கு கூட இந்த தொழில்நுட்பம் வழங்கப்படுவது இல்லை.
உதாரணமாக இங்கிலாந்து முதலாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை கட்டமைத்த போது அமெரிக்கா அணு உலை மற்றும் ட்ரைடண்ட் ஏவுகணைகளை மட்டுமே வழங்கியது.
அதை போல ரஷ்யா இந்தியாவுக்கு தனது அணுசக்தி நீர்மூழ்கியை விற்கவில்லை மாறாக குத்தகைக்கு மட்டுமே வழங்கியது.
இத்தகைய தொழில்நுட்பங்கள் பல வருடங்களாக மேம்படுத்தபடுபவை ஆகும் எந்த நாடும் அணுசக்தி நீர்மூழ்கி தொழில்நுட்பம் அல்லது அத்தகைய ஒரு நீர்மூழ்கி கப்பலை மற்றொரு நாட்டிற்கு விற்காது.
அத்தகைய சொத்துக்கள் ஒரு நாட்டின் பலத்தை சர்வதேச அளவில் பிரதிபலிக்கும் கருவிகள் ஆகும்
இந்தியா தற்போது 16 டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள், 1 அணுசக்தி பலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கி மற்றும் 1 அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி ஆகியவற்றை இயக்கி வருகிறது.