
வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் நிலவும் சீரான நல்ல பாதுகாப்பு சூழல் காரணமாக தரைப்படை தனது படைகளை விலக்க முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே 3000 வீரர்கள் விலக்கப்பட்ட நிலையில் மேலும் 7000 வீரர்களை இந்த வருட இறுதிக்குள் விலக்க தரைப்படை திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து முன்னாள் வடக்கு கட்டளையக தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஹூடா பேசுகையில் இது மிகவும் நல்ல முடிவு எனவும், கிழக்கு கட்டளையகம் எல்லையோர பகுதிகளில் அதிக கவனம் செலுத்த இந்த முடிவு வழிவகை செய்யும் என்றார்.
வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பு பொறுப்பை இனி துணை ராணுவ படைகள் மற்றும் மாநில காவல்துறைகளிடம் ஒப்படைக்க அரசு விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து படைகள் இருந்தால் சீன எல்லையில் கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும் எனவும் கருதப்படுகிறது. அதாவது ராணுவத்தின் தலையாய பணியான எல்லை பாதுகாப்பில் இருந்து திசை திருப்பி விடும் செயலாக அமையும்.
ஏற்கனவே கார்கில் ரிவியூ கமிட்டியும், பாதுகாப்புக்கான பாராளுமன்ற நிலை குழுவும் தரைப்படையை விலக்கி கொள்ள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஜம்மு காஷ்மீரில் இருந்து தற்போது வீரர்களை விலக்கும் திட்டம் இல்லை என தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே கூறியுள்ளார்.