சியாச்சின் ஹீரோ நாய்ப் சுபேதார் பானா சிங்

  • Tamil Defense
  • January 6, 2021
  • Comments Off on சியாச்சின் ஹீரோ நாய்ப் சுபேதார் பானா சிங்

இந்தியாவில் தற்போது பரம்வீர் சக்ரா பெற்று உயிர்வாழும் மூன்று ஹீரோக்களில் பானா சிங் அவர்களும் ஒருவர்.1987 சியாச்சின் போரில் அவரது பங்கு அளப்பரியது.

சியாச்சின் இந்தியாவிற்கு இன்றியமையாதது.எந்த விலையும் அதற்கு பெரிதல்ல- ஹானரி கேப்டன் பானா சிங்

காரகோரம் மலைத்தொடரின் மேலே சியாச்சின் கிளாசியர் அமைந்துள்ளது.இரு ட்ரில்லியன் கியூபிக் அடி ஐஸ் உடன் உலகின் மிகப்பெரிய அல்பைன் கிளாசியராக சியாச்சின் உள்ளது.

உலகின் அதிக உயர மற்றும் அதிக குளிர் உடைய போர்க்களம் சியாச்சின் தான்.இங்கு -52டிகிரி செல்சியஸ் வரை குளிர் நிலவும்.நிலப்பரப்பு சிறிதும் இரக்கமின்றி காணப்படுகிறது.இங்கு தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தினர் ஒருவரை ஒருவர் நோக்கி காத்துள்ளனர்.

இங்கு தான் நாய்ப் சுபேதார் பானா சிங் போர் புரிந்து மாபெரும் வீரர் என்ற பட்டம் பெற்றார்.1987 சியாச்சின் சண்டையில் வெற்றியை இந்தியாவிற்கு சாதகமாக்கி பரம்வீர் சக்ரா விருது பெற்றவர் அவரே.

1970களில் பாகிஸ்தான் மலையேறிகளுக்கு சியாச்சின் பகுதிகளில் மலையேற அனுமதி அளித்து வந்தது.இதனால் சியாச்சின் தன்னுடையது போன்று ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் மூலம் சியாச்சினை தனதாக்கலாம் என்ற கனவை வளர்த்து வந்தது.1980களில் அந்த கனவை உறுதிப்படுத்த முடிவு செய்து அங்கு தனது பலத்தை அதிகரிக்க முயற்சி செய்தது.

பாகிஸ்தானால் இந்த கனவை நனவாக்கியிருக்கு முடியும் ஆனால் 1984ல் லன்டனை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் பாகிஸ்தான் அதிக அளவு சிறப்பு மலைசார் உடைகளை வாங்கியதை இந்திய உளவுத்துறை மோப்பம் பிடித்தது.

தன் பாதுகாப்பிற்கான ஆபத்தை உணர்ந்த இந்தியா சியாச்சினுக்கு இராணுவத்தை அனுப்பி சியாச்சின் கிளாசியர் மற்றும் சால்டோரா முகடுகளை தனது கட்டுப்பட்டுக்குள் கொண்டு வர உத்தரவு பிறப்பித்தது.ஒரு வாரத்தில் செய்தும் முடிக்கப்பட்டது.

மூன்று வருடங்களுக்கு பிறகு இந்தியா தனது மொத்த கவனத்தையும் வடக்கு பிராந்திய எல்லையில் உள்ள திபத் பகுதியில் குவித்திருந்த வேளையில் பாகிஸ்தான் ஒரு பெரிய இராணுவ நடவடிக்கை நடத்தி இந்திய வீரர்கள் இருந்த நிலையை கைப்பற்றியது.

அங்கு தனது தலைவர் ஜின்னா பெயரில் ஒரு நிலையை பிலபோன்ட் பாஸ்-க்கு அருகே ஏற்படுத்தியது.அங்குள்ள கிளாசியரில் இருந்த இந்திய பாதுகாப்பு நிலைகளை பாகிஸ்தானில் கவனிக்க முடிந்தது.அங்கிருந்து இந்திய வானூர்திகளை கவனிக்க முடிந்தது.இந்திய சப்ளை லைன்கள் மீது ஆர்டில்லரி தாக்குதல் நடத்தினர்.இந்திய ரோந்து குழுவை தாக்கினர்.

மே 1987ல் கண்காணிப்பு ரோந்து சென்ற இளம் அதிகாரியான லெப்டினன்ட் ராஜிவ் பான்டே அவர்களின் குழுவை பாகிஸ்தான் வீரர்கள் தாக்கினர்.இதில் லெப்டினன்ட் உட்பட ஒன்பது வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.மூன்று வீரர்களே உயிர்பிழைத்தனர்.அவர்களது உடல்களை கூட பல வாரங்கள் கழித்தே மீட்க முடிந்தது.

அதன்பின் ஒரு மாதத்திற்கு பிறகு 8வது ஜம்முகாஷ்மீர் லைட் இன்பாட்ரி வீரர்கள் சிலருடன் மேஜர் வரிந்தர் சிங் அவர்கள் 19,600அடி உயரமிருந்த சோனம் நிலையில் இருந்து கிளம்பினர்.ஆபரேசன் ராஜிவ் தொடங்கியது.

அவர்களது பணி செய் அல்லது செத்துமடி என்பது போன்றதுதான்.நமது வீரர்களை தாக்கி கொன்றதற்கு பழிதீர்க்க அவர்கள் அந்த பாகிஸ்தானின் குவாய்ட் நியையை தாக்கி கைப்பற்ற கிளம்பினர்.ஜீன் 23, அன்று காலை 8மணிக்கு நமது வீரர்கள் செங்குத்தான மலையின் மீது ஏற தொடங்கினர்.காலநிலை மிக மோசமாக இருந்தது.அடுத்த நாள் காலை 4மணி வரை அவர்களால் வெறும் 150மீ மட்டுமே ஏற முடிந்தது.செங்குத்தான மலை,இரக்கமற்ற காலநிலை அவர்களை வாட்டியது.அவர்களை திரும்ப அழைத்தது இராணுவம்.நமது வீரர்கள் மறுத்தனர்.அவர்கள் திரும்பினால் அவர்கள் உயிருடன் வருவது உறுதி இல்லை.

சில சாக்லெட் மற்றும் டீ அருந்திய பிறகு தங்களது வெல்லமுடியாத தைரியம் மற்றும் தன்னம்பிக்கை காரணமாக தாக்குதலை நடத்த தயாரானார்கள்.

முதலில் சிறு குழுவாக சுபேதார் ஹர்னாம் சிங் தலைமையில் வீரர்கள் குழு முதல் தாக்குதலை தொடங்கினர்.பாகிஸ்தானியர் குவாய்டு போஸ்டில் இருந்து தாக்க அவர்கள் படுகாயம் அடைந்தனர்.அடுத்து சுபேதார் சன்சார் சந்த் தலைமையில் மற்றுமொரு வீரர்கள் குழு தாக்குதலுக்கு கிளம்பியது.விரைவிலேயே அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

அதன் பின் மேஜர் வரிந்தர் சிங் நாய்ப் சுபேதார் பானா சிங் மற்றும் இரு வீரர்களை தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்த அனுப்பினார்.மேஜர் ஏற்கனவே நெஞ்சில் சுடப்பட்டிருந்தார்.

நா/சு பானா சிங் உடன் இருந்த இரு வீரர்களின் உடல்நிலை சரியில்லாமல் போக அவர் தாக்குதலை தொடங்காமல் மேலதிக வீரர்களுக்காக ஒரு நாள் முழுதும் காத்திருந்தார்.மேலும் ஐந்து வீரர்கள் வந்தனர்.

“மொத்த வீரர்களும் சோர்வடைந்திருந்தனர்.ராஜிவ் பான்டே அவர்களின் மரணத்திற்கு பழிதீர்க்க வேண்டும்.குவாய்ட் போஸ்டில் இருந்து தொடர்ந்து தாக்கிய பாகிஸ்தானியர்கள் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருந்தனர்”என பானா சிங் பின்னாளில் கூறினார்.

சிங் அவர்களின் சிறிய வீரர்கள் குழு செங்குத்தாக அமைந்த பனிமலையில் ஏறினார்.அவர்கள் வீரமரணம் அடைந்த ஒன்பது வீரர்களை கண்டு, கடந்து சென்றனர்.எங்கும் நிற்கவில்லை.நேர்த்தியாக யாரும் காணாத வண்ணம் மலைமீது ஏறினர்.

அதிஉயர போர்முறைக்கு சிறந்த உதாரணமாக அவர்கள் மலைமீது ஏறி புத்திசாலித்தனமான தாக்குதலை தொடங்கி முன்னெடுத்தனர்.அங்கு ஊடுருவியிருந்த ஒவ்வொரு பாகிஸ்தானியரையும் நொறுக்க வேண்டும் என்ற எண்ணம் தான்.லெப்டினன்ட் ராஜிவ் மற்றும் ஒன்பது வீரர்களுக்கும் பழி தீர்க்க வேண்டும்.

தங்களது பாதுகாப்பை சிறிதும் யோசிக்காமல் பாகிஸ்தான் பங்கரை நோக்கி சுட்டுக்கொண்டும்,கிரேனேடை வீசியும் தாக்க தொடங்கினர்.கிட்டே நெருங்கியதும் கையால் எதிரிகளை தாக்கவும் துப்பாக்கி முனை கத்தியால் தாக்கவும் செய்தனர்.

பானா சிங் அவர்கள் பங்கரின் கதவை நெருங்கும் போது ஒரு கிரேனேடை எடுத்து வீசி ஆறு பாகிஸ்தானியர்களை வீழ்த்தினார்.அனைத்து பாகிஸ்தானியரும் வீழத்தப்பட அவர்கள் பாகிஸ்தானின் சிறப்பு சேவை க்ரூப் எனப்படும் சஹீன் கம்பெனி சிறப்பு படை வீரர்கள் என்ற செய்தி பின்னாளில் வெளியானது.

வீரர்கள் பங்கரிலேயே உணவு சமைத்து சாப்பிட்டனர்.மூன்று நாட்களில் அவர்கள் உண்ணும் முதல் சாப்பாடு.பங்கரை பாதுகாப்பாக்கினர்.

“வெற்றியை கொண்டாட எங்களுக்கு சக்தி இருக்கவில்லை.21,000 அடி, எந்த வீரரும் பாங்ரா ஆடவில்லை அல்லது போர்க்குரலால் கத்தவில்லை.விடாப்பிடியான தைரியத்தால் வெற்றியை பெற்றோம்.நாங்கள் தயங்கியிருந்தால் இன்னும் குவாய்டு நிலை பாகிஸ்தானிடமே இருந்திருக்கும்” என பின்னாளில் சிங் கூறினார்.

நா/சு பானா சிங் மற்றும் அவரது வீரர்களுக்கு நன்றிகள்.ஜீன் 26,1987 மாலை 5 மணிக்கு நிலையில் இந்தியக் கொடி பறக்கவிடப்பட்டது.இன்று வரை பறந்துகொண்டிருக்கிறது.பானா சிங் அவர்களை கௌரவிக்கும் வகையில் அந்த நிலைக்கு “பானா டாப்” எனப் பெயரிடப்பட்டு இன்று வரை அழைக்கப்படுகிறது.

தளராக வீரம் மற்றும் சீரற்ற காலநிலையில் வீரர்களிடம் காட்டிய தலைமை காரணமாக நாய்ப் சுபேதார் பானா சிங் அவர்களுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

அமைதிக்காலத்தில் பரம்வீர்சக்ரா பெற்ற இரு வீரர்களுள் நாய்ப் சுபேதார் பானா சிங் அவர்களும் ஒருவர்.பின்னாளில் பானா சிங் அவர்களுக்கு கௌரவ கேப்டன் பதவி வழங்கப்பட்டது.

கார்கில் போர் முடிவில் இராணுவத்தில் பனியாற்றிய ஒரே பரம்வீர் சக்ரா பெற்ற வீரராக இருந்தார்.அதன்பின் தனது 32வருட தேச சேவைக்கு பிறகு ஓய்வு பெற்றார்.அதன் பின் ஜம்முவில் உள்ள தனது குடும்பத்தினருடன் சிறிய வீட்டில் தனது மகன் ராஜீந்தர் சிங் அவர்களுடன் வசித்து வருகிறார்.

அவருடையே தேச சேவைக்கு இந்திய இராணுவச் செய்திகள் சார்பாக பெரிய வணக்கங்கள்