பரம் வீர் சக்ரா பெற்ற வீரத்திருமகன் ராம ரகோபா ரானே

ராம ரகோபா ரானே ஜீன் 26,1918ல் கர்நாடக மாநிலத்தின் ஹர்வார் மாவட்டத்தில் உள்ள ஹவேரி என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது அப்பா ஒரு காவல்துறை அதிகாரி.அவர் தந்தையின் அடிக்கடி நிகழ்கிற தொடர் பணியிடமாற்றம் காரணமாக அவரின் பள்ளி படிப்பானது சீராக அமையவில்லை.

1930ல் இந்திய சுதந்திர போராட்டத்திற்காக நடத்தப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தால் பெரிதும் கவரப்பட்டார். தன்னுடைய 22 வது அகவையில் இரண்டாம் உலகப்போர் தன்னுடைய கால்களை முழுமையாக பதித்து நடந்துகொண்டிருந்த நேரத்தில் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் சேர முடிவெடுத்தார். ஜீலை10,1940 ல் அவர் பம்பாய் இஞ்சினியர்ஸ் ரெஜிமெண்டில் இணைந்தார்.பயிற்சியின் போது சிறந்த பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் நாயக் ஆக பதவி உயர்வு பெற்றார்.

பயிற்சிக்கு பின்னர் அப்பொழுது பர்மாவில் ஜப்பானியர்களோடு சண்டைக்களத்தில் இருந்த ’26 வது இன்ஃபேண்ட்ரி’ பிரிவின் ஒரு ‘இஞ்சினியரிங் யூனிட்’டான ’28 வது ஃபீல்டு கம்பனி’க்கு அனுப்பப்பட்டார். அராகன் நடவடிக்கையின் வீழ்ச்சிக்கு பிறகு அவரது பிரிவுகள் பின்வாங்குகையில் , அவரும் அவருடைய பிரிவில் இருந்த சில வீரர்களை கம்பெனி கமாண்டர் அங்கேயே இருந்து ஜப்பானியர்களின் முக்கிய சொத்துக்களை அழிக்க கூறினார்.பின்னர் அவர்களை ராயல் இந்தியக்கடற்படை உதவியுடன் பாதுகாப்பாக மீட்பதாக கூறினார்.மற்ற படைகள் பின்வாங்க அவரும் அவருடைய பிரிவுகளுடன் சேர்ந்து அருகில் இருந்த, ஜப்பானியர்களின் முக்கிய நிலைகளை அழிக்க சென்றனர்.ஆனால் பாதி வெற்றி மட்டுமே பெறப்பட்டது.இப்போது திரும்ப படைகளுடன் இணைய வேண்டும்.வரும் வழியில் ஜப்பானியர்கள் ஒரு ஆற்றுப் பகுதியில் ரோந்து செய்துகொண்டிருந்தனர். ஆற்றை கடக்க முடிவெடுத்தனர். அவர்கள் நினைத்ததை கச்சிதமாக முடித்துவிட்டு ஜப்பானிய வீர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு தங்களின் ’26வது இன்ஃபேண்ட்ரி’ பிரிவுடன் சேர்ந்து கொண்டனர். இந்த செயலுக்காக அவருக்கு ஹவால்தாராக பதவி உயர்வு கிடைத்தது.

போருக்குபின் இந்திய சுதந்திரத்தை தொடர்ந்து அவர் இந்திய இராணுவத்திற்கு மாற்றப்பட்டார். அவரின் உறுதித்தன்மை மற்றும் தலைமைப்பண்பு காரணமாக, அவர் டிசம்பர் 15, 1947ல் இரண்டாம் லெப்டினன்ட்டாக ‘த காப்ஸ் ஆஃப் இஞ்சினியர்ஸி’ல் நியமிக்கப்பட்டார்.

மார்ச் 18, 1948ல் நௌசேரா செக்டரிலிருந்து ராஜாரியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த இந்திய இராணுவப்படை டிசம்பர் 1947ல் பாக் கிடம் இழந்த ஜாங்கரை கைப்பற்றி இருந்தது.

ஏப்ரல் 8, 1948ல் 4வது டோக்ரா பட்டாலியன் ராஜாரியை நோக்கிய தன் முன்னகர்வை எடுத்தபோது நௌசேராவிற்க்கு வடக்கே 11 கி.மீ தொலைவில் உள்ள பார்வாலி முனையை தாக்கி கைப்பற்றியது.
பட்டாலியன் பர்வாலியை தாண்டி முன்னகர்ந்து செல்வது தடைபட்டது.ஏனெனில் வழி முழுக்க அதிகமான கன்னி வெடிகள் மற்றும் பாதைத் தடுப்புகளால் தடைபோடப்பட்டிருந்தது. உதவி டாங்க்குகளையும் கொண்டுசெல்லமுடியாத நிலையேற்பட்டது.

அப்போது 4வது டோக்ராவோடு இணைக்கப்பட்ட ’37வது அஸால்ட் பிரிவின்’ கமாண்டராக இருந்த ரானே பட்டாலியன் முன்னகர்வுக்கான தடைகளை அப்புறப்படுத்த முன்னே அனுப்பப்பட்டார். அவர் முன்னே சென்று கண்ணிவெடிகளை அப்புறப்படுத்தும் பணியை தனது படையுடன் செயல்படுத்தி கொண்டிருக்கும் போது திடீரென பாக் மோர்ட்டார் தாக்குதல் நடத்தியதில் அவரது படையைச் சேர்ந்த இரண்டு சாப்பர் வீரர்கள் மற்றும் ரானே உட்பட ஐந்து வீரர்கள் காயம்பட்டனர்.

இருந்தபோதிலும் மனந்தளராத ரானேவும் மற்ற வீரர்களும் ஏப்ரல் 8ஆம் தேதி மாலைக்குள் உதவி டாங்க்குகள் செல்லும் வகையில் தடுப்புகளையும் கண்ணிவெடிகளையும் அப்புறப்படுத்தினர்.ஆனாலும் இன்னும் முழுமையாக அப்புறப்படுத்தப்படவில்லை.முன்னே சென்ற பாதை இன்னும் ஆபத்தானதாகவே தோன்றியது.மேலும் அந்தப் பகுதியில் இருந்த பாகிஸ்தானியர்களும் அப்புறப்படுத்தப்படாமல் இருந்தனர்.இதற்காக அவர் அன்று இரவு முழுவதும் உழைத்தார்.அடுத்தநாள் முழுவதும் அவரது பிரிவு ஆபத்து நிறைந்த தடுப்புகளை அப்பறப்படுத்த, பாக் படையின் கடுந்தாக்குதல்களுக்கு மத்தியில் தொடர்ந்து12 மணி நேரம் அயராது முயற்சி உழைத்தது.

ஏப்ரல் 10 காலையில் சீக்கிரமே எழுந்து சென்ற நாள் இரவு நிறுத்திய அப்புறப்படுத்தும் பணியை தொடரந்தார் ரானே. இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே அந்த கடுந்தாக்குதல் சத்தங்களுக்கிடையில் ஐந்து பெரிய பைன் மரங்களாலான தடுப்பை அப்புறப்படுத்தினார். இதனால் 4 வது டோக்ரா பட்டாலியன் 13 கி.மீ அடுத்த பெருந்தடைகளை சந்திக்கும்வரை முன்னகர்ந்து செல்லமுடிந்தது.பாக் படைகள் தடைகளை ஏற்படுத்தி மலைமுகட்டின் மேல் நின்றுநமது படைகளை தாக்கினர்.பட்டாலியன் அடுத்த தடையை சந்தித்தது.ரானே அவரே ஒரு டாங்கை ஓட்டிச்சென்று அந்த பைன் மரத் தடுப்பை அடைந்து டேங்க் மறைவில் மறைந்து நின்று கண்ணிவெடி கொண்டு அந்த தடுப்புகளை வெடிக்கச்செய்து அகற்றினார்.இரவு முடியும் முன்னரே அவர் இதை செய்து முடித்தார்.

அடுத்தநாள் ராஜாரிக்கும் நௌசேராவிற்கும் இடையேயுள்ள பழைய முகல் சாலை வழியாக சிங்காஸிற்கு செல்லும் வழியில் அமைந்த தடைகளை அகற்ற பதினேழுமணி நேரம் உழைத்தார். ஏப்ரல் 8 முதல் 11ஆம் தேதிவரை ராஜாரியை நோக்கிய இராணுவத்தின் முன்னகர்வுக்கு ரானேவின் பங்கு மகத்தானது. அவரின் செயல் 500 பாக் வீரர்களின் மரணத்திற்கு மட்டுமல்லாமல் சிங்காஸ் மற்றும் ராஜாரி பகுதியிலுள்ள குடிமக்களின் உயிரை காக்கவும் காரணமானது.

ஜீன 21,1950ல் இந்தியாவில் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருது அவருக்கு வழங்கி பெருமை பாராட்டியது இந்திய அரசு. இதை இந்திய அரசிதழிலும் வெளியிட்டு மகிழ்ந்தது.போருக்குப்பின்னர் ஜீன் 25,1958ல் பணியோய்வு பெறும்வரை இந்திய இராணூவத்தில் மேஜராக இருந்தார். அவரது பணிக்காலத்தில் 5 முறை Mentioned in despatched ல் குறிப்பிடப்பட்டுள்ளார்.பின்பு அவர் இந்திய இராணுவத்தின் சிவிலியன் ஸ்டாஃப்பில் உறுப்பினராக பணியாற்றினார். 1994ல் அவர் இயற்க்கை மரணம் எய்தினார்.
 
அவரின் உருவச்சிலை அவரது சொந்த ஊரில் நவம்பர் 7, 2006ல் திறக்கப்பட்டது.

வீர வணக்கம்.