தீவில் சிக்கிய மீனவர்களை மீட்ட கடலோர காவல் படை

  • Tamil Defense
  • December 3, 2020
  • Comments Off on தீவில் சிக்கிய மீனவர்களை மீட்ட கடலோர காவல் படை

இரு நாட்களாக தீவில் சிக்கியிருந்த மூன்று மீனவர்களை கடலோர காவல் படை வீரர்கள் மீட்டுள்ளனர்.புரவி புயல் காரணமாக இந்திய தீபகற்பத்தின் தெற்கு முனையில் கடும் காற்று வீசி வருகிறது.இந்நிலையில் தீவு ஒன்றில் இரு நாட்களாக சிக்கி தவித்த மூன்று மீனவர்களை ஹோவர் கிராப்ட் கப்பல் உதவியுடன் கடலோர காவல் படை வீரர்கள் மீட்டுள்ளனர்.

காலை 10 மணி அளவில் மூன்று மீனவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் மனலி தீவில் சிக்கி தவிப்பதாக ஆட்சியர் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்க ,கிட்டத்தட்ட இரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற நடவடிக்கையில் வீரர்கள் மீனவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.கடந்த செவ்வாய் அன்று கடலுக்கு சென்ற அவர்களின் படகில் என்ஜின் பழுதடைந்த காரணத்தினால் மூன்று மீனவர்களாலும் கரை திரும்ப இயலவில்லை.

சூரைக்காற்று,தொடர் மழை மற்றும் கடலில் நீண்ட தூரம் பார்க்க இயலாமை ஆகிய பிரச்சனைகளையும் தாண்டி மீனவர்களை ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் வீரர்கள் மீனவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக முதலுதவி,உடை , குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு மண்டபம் கடலோர காவல்படை தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.பின்பு அவர்கள் உரிய துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் புயல் தொடர்பாக கடலோர காவல் படை தொடர்ச்சியாக கடலோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது.புயலுக்கு பிறகான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.