தனது கடைசி மூச்சு வரை நாட்டுக்காக போராடி வீரமரணம் அடைந்தவர்.நாட்டு மக்கள் மறந்த தியாகி.1971 போரில் கிழக்கு பகுதி போர்முனையில் போரிட்டு பரம்வீர் சக்ரா பெற்ற ஒரே வீரர்.
எதிர்கால புத்தகங்களில் நிச்சயம் இடம்பெற வேண்டிய வரலாற்று சம்பவம் இது. லான்ஸ் நாய்க் ஆல்பர்ட் எக்கா இன்றயை வங்கதேசத்தின் கங்காசாகர் பகுதிதியில் அவர் செய்த வீரதீர சாகசங்கள் நிச்சயம் எதிர்கால புத்தகங்களில் இடம்பெற வேண்டும்.1971 போரில் மிக வீரத்துடன் போரிட்டு இந்தியாவின் மிகஉயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்.
ஆல்பர்ட் அவர்கள் டிசம்பர் 27,1942 அன்று இன்றைய ஜார்க்கண்டில் உள்ள ஸாரி கிராமத்தில் பிறந்தார்.மலைப்பகுதி ஆதிவாதி என்பதால் வில் அம்புடன் வேட்டையாடுதல் செய்தே வளர்ந்தார்.விளையாட்டை அவர் இயல்பாகவே வளர்த்துகொண்டார்.
தனது 20வது அகவையில் பீகார் ரெஜிமென்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.1968ம் ஆண்டு 14வது கார்ட்ஸ் படைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.இந்தப் படை வடகிழக்கு பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.1971ல் வங்கதேச விடுதலைப் போர் தொடங்கியவுடன் கார்ட்ஸ் படை நேரடியாக போருக்கு அனுப்பப்பட்டது.
டிசம்பர் 3, 1971, இந்த இள பட்டாலியன் கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய வங்கதேசம்) இருந்த பாகிஸ்தானின் அரணாக இருந்த கங்காசாகர் பகுதியை கைப்பற்ற அனுப்பப்பட்டது.இந்த பகுதி இன்றயை திரிபுரா மாநிலத்தின் தலைநகராக அகர்தலாவின் மேற்கு பக்கம் 6.5கிமீ தொலைவில் தான் அமைந்திருந்தது.
பாகிஸ்தான் படைகளுக்கு அரணாக அமைந்திருந்த கங்காசாகரை கைப்பற்றுவது இந்திய படைகளுக்கு மிக முக்கியம் ஆகும்.கங்காசாகர் கைப்பற்றப்பட்டால் அடுத்து பாகிஸ்தானின் அரணாக விளங்கிய அகவுரா நகரத்தை கைப்பற்ற முடியும்.அவ்வாறு அகவுரா கைப்பற்றப்பட்டால் இந்தியப் படைகள் டக்காவை நோக்கி செல்ல எளிதாக இருக்கும்.
டிசம்பர் 3,1971 காலை , 14வது கார்ப்சின் இரு கம்பெனி இராணுவ வீரர்கள் படை கங்காசாகர் புகைவண்டி நிலையத்ததை தாக்கினர்.மேலும் இரு கம்பெனி வீரர்கள் நகரின் மற்ற பகுதிகளை தாக்கி கைப்பற்றினர்.புகைவண்டி நிலையத்தை தாக்கிய வீரர்கள் படைக்கு அதற்கு முன்னால் ஆபத்தும் தடைகளுமே நிறைந்திருந்தன.
“எதிரிகளின் முதன்மை பாதுகாப்பு பகுதி புகைவண்டி நிலையத்தை சுற்றி உயர்நிலத்தில் அமைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தது.சுற்றி இருந்த சதுப்பு நிலப்பகுதிகளில் அதிக அளவில் டாங்க் எதிர்ப்பு மற்றும் வீரர்கள் எதிர்ப்பு கண்ணிவெடிகளால் நிறைத்து வைக்கப்பட்டிருந்தது.முதன்மை பாதுகாப்பு பகுதியை சுற்றி கடுமையான முறையில் கம்பிசுருள் போடப்பட்டிருந்தது” என கலோனல் வி கனபதி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் படைகளின் பாதுகாப்பு பகுதிகளை அடைவதற்கு 100யார்டு தொலைவு இருந்த போது பாக் வீரர்கள் நமது வீரர்கள் மீது தானியங்கி இயந்திர துப்பாக்கி மூலம் மிக கடுமையாக தாக்கினர்.
தானியங்கி துப்பாக்கிகள்,கண்ணிவெடிகள்,கம்பிச்சுருள் மூலம் நமது படை வீரர்கள் இறந்தாலும் காயம்பட்டாலும் ஒரு வழியாக நமது வீரர்கள் தொடர்ந்து முன்னேறி பாக் வீரர்களை நெருங்கி கைகளால் சண்டையிட தொடங்கினர்.
சண்டை நடந்துகொண்டிருக்கும் போதே பாக்கின் இலகு ரக இயந்திர துப்பாக்கிக்கு நமது வீரர்கள் தொடர்ந்து பலியாவதை பார்த்தார் லான்ஸ் நாய்க் ஆல்பர்ட்.
தன்னுடைய உயிரை சிறிதும் மதிக்காமல்,பயம் துளியும் இன்றி எதிரி பங்கர் நோக்கி முன்னேறி அங்கு பங்களில் இலகு ரக துப்பாக்கியை இயக்கிய இரு பாகிஸ்தான் வீரர்களை தனது துப்பாக்கி முனையில் இருந்த கத்தியால் குத்தி வீழ்த்தினார்.இந்த சண்டையில் அவர் படுகாயமடைந்திருந்தார்.ஆனால் பின்வாங்கவில்லை.ஒரு மைல் தூரமே இலக்கு.அச்சமற்ற தைரியத்தின் மூலம் ஒவ்வொரு பங்கராக தனது சக வீரர்களோடு இணைந்து கைப்பற்றினார்.
இலக்கின் வடக்குப்புற எல்லையை நெருங்கும் வேளையில் நன்கு கட்டமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்த பாக் இராணுவத்தின் நடுத்தர வகை இயந்திர துப்பாக்கி குழு ஒன்று நமது வீரர்களை நோக்கி சராமாரியாக சுட்டது.நமக்கு இழப்பு ஏற்பட்டதுடன் முன்னேறுதலும் தடைபட்டது.வீரமே உருவான லா/நா ஆல்பர்ட் அவரது சுயநலத்தை பொருட்படுத்தாமல் தான் காயம்பட்டிருந்த போதும் தளராமல் பங்கரை நோக்கி எதிகளின் சராமாரி துப்பாக்கி சூடுகளுக்குள் தவழ்ந்த படியே சென்று கட்டிடத்தை அடைந்து ஒரு கிரேனேடை கட்டிடத்திற்குள் வீசினார்.ஒரு பாக் வீரர் வீழ்த்தப்பட ஒருவர் காயமடைந்தார்.
ஆனால் நடுத்தர இயந்திர துப்பாக்கி தொடர்ந்து சுட்டுக்கொண்டிருந்தது.உட்சபட்ச தைரியத்துடன் லா/நா ஆல்பர்ட் பக்க சுவர் வழியாக பங்கருக்குள் நுழைந்து எதிரி வீரரை தனது துப்பாக்கி முனையில் உள்ள கத்தியால் குத்தி வீழ்த்தினார்.அதோடு இயந்திர துப்பாக்கி சத்தம் ஓய்ந்தது.இதனால் நமது படைக்கு மேற்கொண்டு இழப்பு தவிர்க்கப்பட்டது.
முதல் இலகுரக துப்பாக்கியை வீழ்த்தும் போதே அவருக்கு படுகாயம் ஏற்பட்டிருந்தது.அவருக்கு வயிற்றில் குண்டடி பட்டிருந்தது.தனது தன்னம்பிக்கை மிக்க தைரியம் தான் அவரை மேற்கொண்டு தனது வீரர்களோடு பயணிக்க வைத்தது.
அதன்பிறகும் அவர் படைக்களத்தை விட்டு மீட்கப்பட மறுத்துவிட்டார்.அந்த இடைரக இயந்திர துப்பாக்கியை தகர்ப்பதால் மட்டுமே நமது படைவீரர்களுக்கு மேற்கொண்டு சேதம் ஏற்படாது என்பதை புரிந்து வேகத்துடன் அதையும் செய்துமுடித்தார்.
முடிந்த பிறகே தன் கண்களை மூடி வீரமரணம் அடைந்தார்.தன் உயிரையும் பொருட்படுத்தவில்லை.போர்க்களத்தில் இருந்து தான் மீட்கப்படவும் அனுமதிக்கவில்லை.தன் சகவீரர்களை கொன்ற அந்த இயந்திர துப்பாக்கி பங்கர்களை மவுனிக்க தன்னுரையும் தன் காயத்தையும் பொருட்படுத்தவில்லை.அவர் வீரமரணத்தை தழுவிய பிறகு அவருக்கு பின்னாள் வந்த சக இந்திய வீரர்கள் கங்காசாகரை கைப்பற்றி பாக் படைகளை விரட்டி அடித்தனர்.
இதனால் பாகிஸ்தான் படைகள் மேற்கொண்டு அகர்தலா (திரிபுரா மாநில தலைநகர்) வரை முன்னேற முடியாமல் தடுக்கப்பட்டது.லான்ஸ் நாய்க் ஆல்பர்ட் அவர்களின் வீரம் போற்றுதலுக்குரியது.
அவரின் வீரதீரம் காரணமாக இந்தியாவின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கி நெகிழ்ந்தது இந்திய இராணுவம்.
2000ம் ஆண்டில் 50வது குடியரசு தினத்தன்று அவர் நினைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
அவரை கௌரவிக்கும் பொருட்டு ஜார்க்கண்ட் அரசு ராஞ்சியை இணைக்கும் முக்கிய சாலைக்கு லான்ஸ் நாய்க் ஆல்பர்ட் அவர்களின் பெயரை சூட்டியது.
வங்கதேச அரசு அவரின் தியாகத்தை கௌரவிக்கும் பொருட்டு அவருக்கு
‘Friends of Liberation War Honour’ என்ற விருதை வழங்கியது.
திரிபுரா மாநில அரசு தன் தலைநகரை காத்த ஆல்பர்ட் அவர்களின் பெயரை ஒரு பொது பூங்காவிற்கு அவரின் பெயரை சூட்டியது.
லான்ஸ் நாயக் ஆல்பர்ட் மற்றும் பத்து இந்திய இராணுவ வீரர்களின் திருவுடல்கள் அகர்தலாவிற்கு தென்பகுதியில் 15கிமீ தொலைவில் உள்ள கிராமமான ஸ்ரீபள்ளியில் புதைக்கப்பட்டுள்ளது.
லான்ஸ் நாய்க் ஆல்பர்ட் மற்றும் அவருடன் போரிட்ட அனைத்து வீரர்களுக்கும் வீரவணக்கம்