இந்தியா-பாக் கடற்படை போர் 1971 – பாகம் 3

பிஎன்எஸ் காஸி பாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பல் அழிந்த மர்மம்.

PNS காஸி நீர்மூழ்கி பற்றி இங்கு அனேகம் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இன்று அந்த நீர்முழ்கி வீழ்ந்த கதையை பாரக்கலாம்.

பிஎன்எஸ் காஸி பாகிஸ்தானின் நீர்மூழ்கி ஆகும்.1971 போரில் இந்த நீர்மூழ்கி 90 பேருடன் நீரில் மூழ்கியது.

மூழ்கிய மர்மம்:

இந்த நீர்மூழ்கியை இராஜ்புத் போர்கப்பல்தான் மூழ்கடித்தது என இந்திய கடற்படை கூறிவருகிறது.ஆனால் பாகிஸ்தானோ “இல்லை இது நீர்மூழ்கியினுள் ஏற்பட்ட வெடிவிபத்தினாலோ அல்லது விசாகப்பட்டிணம் கடற்பகுதியில் கண்ணிவெடிகள் வைக்கும் போது ஏற்பட்ட விபத்தினாலோ வெடித்துவிட்டது” என கூறிவருகிறது.

தொடக்கம்

INS விக்ராந்த்

1971 போரில் இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளையகத்தின் கீழ்செயல்பட்ட விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலின் தலைமையில் கிழக்கு பாகிஸ்தானில் கடல்வழிகள் அடைக்கப்பட்டு மேற்கு பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தானை பிரித்தது விக்ராந்த் போர்க்கப்பல் குழு.

PNS காஸி உள்நுழைவு

இந்த கடல்வழித் தடுப்பை உடைக்க பாகிஸ்தான் கண்டெடுத்த மிகச் சிறந்த நீர்மூழ்கியான காஸியை அனுப்பி வைத்தது பாகிஸ்தான்.

இந்த நீர்மூழ்கி இரு முக்கிய குறிக்கோளை நிறைவேற்ற அனுப்பி வைக்கப்பட்டது.

ஒன்று,விக்ராந்தை மூழ்கடிப்பது .இரண்டாவதாக விக்ராந்தை மூழ்கடித்தாலும்,மூழ்கடிக்காவிட்டாலும் இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் கண்ணிவெடிகளை அதாவது ஆங்கிலத்தில் மைன்ஸ் என்று கூறுவார்கள் , மைன்ஸ் வெடிகளை நட்டுவைப்பது(கடலுக்கடியில் பதுக்கி வைப்பது.இதை கப்பல்கள் அல்லது நீர்மூழ்கிகள் கடக்கும் பட்சத்தில் வெடித்துச்சிதறும்).

காஸியின் வரலாறு

PNS காஸி, அல்லது USS டையாப்ளோ,(அமெரிக்கா) என்பது அமெரிக்காவின் இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கி ஆகும்.இது 31 மார்ச் 1945ல் அமெரிக்க கடற்படையில் இணைக்கப்பட்டது.பின்பு இது பாகிஸ்தானுக்கு 4வருட குத்தகைக்கு வழங்கப்பட்டது. 1964,ல் பாகிஸ்தான் கடற்படையில் இணைக்கப்பட்டு USS டையாப்ளோ என்பது PNS காஸி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.இதுவே பாகிஸ்தானின் முதல் நீர்மூழ்கி ஆகும்.

1965 போரில் PNS காஸி தனது எதிரியான INS விக்ராந்தை வேவு பார்க்கும் பணியில் அமர்த்தப்பட்டது .போர் முடிந்த பின் பழுது நீக்கம் மற்றும் மெருகூட்டும் பணிக்காக துருக்கி சென்றது.

காஸியின் கடைசி பயணம்

காஸி யை தவிர வேறு எந்த கப்பலாலும் விக்ராந்தின் கடல்வழி தடுப்பை தடுக்க முடியாது என பாக் அறிந்திருந்தது.மேலும் வேறு பழைய நீர்மூழ்கிகளை அனுப்பினால் ஆபத்து அதிகம் எனவும் உணர்ந்திருந்தது.

நவம்பர் 14, 1971ல் சத்தமில்லாமல் கராச்சி துறைமுகத்தை விட்டு விக்ராந்தின் கடல்வழி தடுப்பை உடைக்க கிளம்பியது பாகிஸ்தானின் ஒரே நீண்ட தூரம் செல்லும் நீர்மூழ்கியான காஸி.இதுவே அதன் கடைசி பயணம்.

இந்தியக் கடற்படைக்கு இந்த செய்தி எவ்வாறு தெரியும்?

விக்ராந்தை மூழ்கடிக்கும் முயற்சியில் காஸி ஈடுபட்டிருப்பதை பாகிஸ்தானின் கடற்படை அதிகாரிகள் கிழக்கு பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசுவதை இடைமறித்ததில் இருந்து அறிந்தனர் நமது இந்திய அதிகாரிகள்.அதாவது மேற்கு பாகிஸ்தான் கடற்படை அதிகாரி ஒருவர் கிழக்குகடற்படை பாகிஸ்தான் அதிகாரியிடம் சிறப்பு லூப்ரிகேசன் ஆயிலை தயாராகவைக்க கூறினார்.இந்தவகை ஆயில் கடற்படையின் மைன்ஸ்வீப்பர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளில் பயன்படுத்தப்படும்.ஆனால் ஆழ்ந்து பரந்த வங்காள விரிகுடாவில் இயங்குமளவுக்கு பாகிஸ்தானின் மைன்ஸ்வீப்பர் (கடற்கண்ணிவாரி கப்பல்கள் என தமிழில் கூறலாம்) கப்பல்களும் மற்ற டாப்னே வகை நீர்மூழ்கிகளும் ஏற்றதல்ல அதாவது நீண்டநெடிய பயணத்திற்கு ஏற்றவையாக இல்லை.

இது போன்ற நீண்ட நெடிய பயணத்திற்கு ஏற்ற பாகிஸ்தானின் ஒரே நீர்மூழ்கி காஸி தான்.இதன் மூலம் இந்திய கடற்படை அதிகாரிகள் காஸி களத்தில் இறக்கிவிடப்பட்டதை உறுதி செய்தனர்.

பொறியில் மாட்டிய காஸி

அந்த நேரத்தில் வைஸ் அட்மிரல் கிருஷ்ணன் தான் கிழக்கு கடற்படை கட்டளையகத்தின் தலைமை பொறுப்பில் இருந்தார். இந்த காஸியை ஒழிக்க வேண்டும் என முடிவு செய்த கிருஷ்ணண் அவர்கள் அதற்கான முயற்சிகளில் இறங்கினார்.

அவரின் கட்டளைப்படி,விக்ராந்தை பாதுகாக்கும் துணைக் கப்பல்கள் நவம்பர் 13 அன்று அந்தமானில் ‘போர்ட் எக்ஸ் ரே’ என்று அழைக்கப்பட்ட இரகசிய தீவிற்கு சென்றன.இதில் ஆச்சரியம் என்னவென்றால் கப்பலில் பணிபுரிந்த வீரர்களுக்கே தாங்கள் எங்கு செல்கிறோம் என்பது தெரிந்திருக்கவில்லை.

முதன்மை திட்டம்

கப்பல்கள் பத்திரமாக இரகசியத் தீவை அடைந்ததை அறிந்ததும் , கப்பல் படையில் இருந்து விடுவிக்கப்படுவதற்காக விசாகப்பட்டிணம் நோக்கி சென்ற பழைய இரண்டாம் உலகப் போர் காலத்து அழிக்கும் கப்பலான INS ராஜ்புத் ஐ தொடர்பு கொண்டார் கிருஷ்ணன் அவர்கள். INS ராஜ்புத் கப்பல் தன்னை INS விக்ராந்த் கப்பலாக காட்டிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு துறைமுகத்தை விட்டு வெளியேறி ஹெவி வயர்லெஸ் ட்ராபிக் ஐ உருவாக்கியது.

இந்தியக் கடற்படை விக்ராந்த்தை தொடர்பு கொண்டது.அதாவது யாரும் கண்டுபிடிக்க இயலாத இதுவரை வெளியிடப்படாத தனியார் டெலகிராம் வழியாக அனுப்பப்பட்டது.அதாவது விக்ராந்தில் உள்ள வீரருக்கு டெலகிராம் செல்கிறது. அதாவது வீரரின் அம்மாவிற்கு உடல்நலம் சரியில்லாதது தொடர்பாக.”seriously ill” என்பது தான் அந்த டெலகிராம்.

தூண்டிலில் சிக்கிய காஸி

காஸி சென்னை கடற்கரை பகுதியில் நவம்பர் 23 தேதிகளில் விக்ராந்த் கப்பலை தேடிக் கொண்டிருந்தது.ஆனால் தான் 10 நாட்கள் தாமதம் என்றும் விக்ராந்த் அந்தமான் கடற்கரை பகுதியின் அடையாளம் தெரியாத தீவிற்கு அனுப்பப்பட்டிருப்பதும் காஸிக்கு தெரிந்திருக்கவில்லை.

வைஸ் அட்மிரல் கிருஷ்ணண் இராஜ்புத் கப்பலின் கேப்டனான லெப் இந்தர் சிங், அவர்களிடம்    திட்டத்தை எடுத்து கூறினார்.அதாவது பாகிஸ்தானின் காஸி இலங்கை கடற்கரை பகுதியில் தனது தேடுதல் வேட்டையை முடித்து தற்போது மெட்ராஸ் அல்லது விசாகப்பட்டிணம் கடற்கரை பகுதியில் தான் இருக்கும் என கூறினார்.மேலும் கப்பலில் (இராஜ்புத்) முழுஅளவு எரிபொருள் நிரப்பியவுடன் உடனடியாக துறைமுகத்தில் இருந்து வெளியேறிவிட வேண்டும் மேலும் தனது அனைத்து வழிகாட்டும் அமைப்புகளையும் நிறுத்திவிட்டு தான் கடற்பகுதிக்குள் செல்ல வேண்டும் என திட்டத்தை விளக்கினார் கிருஷ்ணன் அவர்கள்.

காஸியின் கடைசி மணித்துளிகள்

முதல் முறையாக 2 டிசம்பர் அன்று முழுஅளவு எரிபொருள் நிரம்பி துறைமுகத்தில் இருந்து கிளம்பயது இராஜ்புத். 3 டிசம்பர் அன்று மீண்டும் துறைமுகம் திரும்பியது.மறுபடியும் கப்பல் ஒரு பைலட் துணையுடன் துறைமுகத்தில் இருந்து கிளம்பியது. காஸி துறைமுகத்தில் வெளியே காத்திருக்காலாம் என்ற எண்ணத்தில் கேப்டன் என்ஜினை மெதுவாக இயக்கினார்.

முதல் அடி

காஸியால் விக்ராந்தை கண்டுபிடிக்க முடியவில்லை அதனால் தனது இரண்டாவது குறிக்கோளான விசாகப்பட்டிணம் கரையோரங்களில் கண்ணிவெடிகளைை பதிக்க தொடங்கியது.காஸியும் தனது வழிகாட்டும் அமைப்புகளை அணைத்து வைத்திருந்தது.

இந்த நேரத்தில் இராஜ்புத் தனது வேகத்தை அதிகப்படுத்தி துறைமுகத்தை விட்டு வேளியேறியது.இதே நேரத்தில் காஸி தன்னை நோக்கி ஒரு அழிக்கும் கப்பல் வேகமாக முன்னேறி வருவதை பார்த்தது/கேட்டது . இதைக் கண்ட காஸி நீருக்கடியில் வேகமாக மூழ்கத் தொடங்கியது.

இங்கு தான் மர்மம் வருகிறது!!

இராஜ்புத் கப்பலின் கேப்டன் நீருக்கடியில் ஒரு மாறுதல் ஏற்பட்டதாகவும் அந்த திசையை நோக்கி இருமுறை தாக்கியதாகவும் கூறினா்.இது மூழ்கிக் கொண்டிருந்த காஸியின் மேல் தாக்கியது.இதனால் மைன்ஸ் மற்றும் டர்பிடோக்கள் வைத்திருந்த அறையில் தீப்பற்றி எரிந்து கப்பல் வெடித்து சிதறியதாக கூறுகிறார் நம் கேப்டன்.

ஆனால் பாகிஸ்தான் வேறுவிதமாக கூறுகிறது.கப்பல் வருவதை உண்ர்ந்த அறிந்த காஸி தனது இருப்பு நிலையை தவறாக கணித்து நீரில் மூழ்கும் போது தான் நட்டு வைத்த கண்ணிவெடிகளுக்கிடையே சிக்கி வெடித்ததாக கூறுகிறது.இது இராஜ்புத் கப்பல் தாக்குவதற்கு 10-15 நிமிடங்களுக்கு முன்னாடியே நடந்ததாக பாகிஸ்தான் கூறுகிறது.

எனவே இது விபத்து தான் எனவும் இராஜ்புத் தாக்கியதால் ஏற்பட்டதல்ல எனவும் கூறுகிறது.

தெளிவான கருத்து இல்லை.

இதை விளக்க எவ்வளவோ கதை இருந்தாலும் அனைத்தும் முரண்படுவதாக உள்ளது.எது எப்படியோ இந்தியக் கடற்படையின் திட்டமே காஸிக்கு இறுதி பயணமாக அமைந்ததில் கருத்து இல்லை.

இந்திய இராணுவச் செய்திகள்.