இந்தியா-பாக் கடற்படை போர் 1971 பாகம் 2

பாகிஸ்தானின் கிழக்கு கடற்படை (இன்றைய வங்கம்) தலைமையகம் 1969ல் உருவாக்கப்பட்டது.அதன் முதல் தலைமை அதிகாரியாக ( Flag officer ) ரியர் அட்மிரல் முகம்மது ஷாரிப் நியமிக்கப்பட்டார்.கிழக்கு கடற்படையால் நடத்தப்படும் அனைத்து ஆபரேசன்களுக்கும் நிர்வாகி அவரே.அவரது தலைமையின் கீழ் பாகிஸ்தான் மரைன் படை,எஸ்எஸ்ஜியின் கடற் பரிவு, சீல் படை ஆகியவை உருவாக்கப்பட்டன.இந்த படைகள் கிழக்கு கடற்படையின் கீழ் பல்வேறு ஆபரேசன்களில் இரகசியமாக ஈடுபட்டன.

ஆனால் இந்தியா போன்ற பெரிய கடற்படையை எதிர்க்க அவர்களிடம் போதிய போர்க்கப்பல்கள் இல்லை.அது இரண்டு முனைகளிலுமே (மேற்கு மற்றும் கிழக்கு) சரி தான்.மற்றும் படையில் இருக்கும் மற்ற போர்க்கப்பல்களை இந்தியக் கடற்படையின் விமானப் பிரிவிடமிருந்தும்,இந்திய விமானப் படையிடமிருந்தும் பாக் விமானப் படை காக்க முடியாத நிலையில் இருந்தன. மேலதிகப்படியாக, பாக் கடற்படை தளபதி மற்றும் துணைத் தளபதி அனைத்து போர்க்கப்பல்களின் திறன்களையும் மேற்கு முனையில் அதிகப் படியாக பயன்படுத்த ஆணையிட்டிருந்தனர். அட்மிரல் ஷாரிப் வேண்டுதலின் பேரில் பாக்கின் ஒரு நாசகாரி போர்க்கப்பல் (Destroyer ) PNS சைலெட் மட்டும் கிழக்கு கடற்படை தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு பணியை தொடர்ந்தது.

போரின் போது, பாக் கிழக்கு கடற்படையின் துறைமுகங்கள் பாதுகாப்பு இல்லாமல் இருந்தன.மேலும் கிழக்கு பாகிஸ்தானில் இருந்த பாக் இராணுவப்படை ,பாக் கடற்படை துணையில்லாமலேயே போரை நடத்த துணிந்தது.  போர் தொடங்கிய போது அது பெரும்போராக தொடங்கிய போதும், பாக் கடற்படை போர்க்கப்பல்கள் (மேற்கு பகுதி) துறைமுகத்தை விட்டு நகரவில்லை.

மறுபுறம் கிழக்கு பகுதியில் பாக் கடற்படை தனது இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட கப்பல்களை மட்டுமே நம்பியிருந்தது.கிழக்கு கடற்படை ரியர் அட்மிரல் முகம்மது ஷாரிப்பின் நேரடிக் கட்டளையில் இயங்கியது.அவர் பாக் இராணுவத் தளபதியான  நியாசியின் வலது கையாக இயங்கினார்.கிழக்கு பகுதியில் ,பாக் கடற்படையில் 4 பெரிய இயந்திர துப்பாக்கி பொருத்தப்பட்ட கப்பல்கள் இருந்தன.அவை PNS ஜெஸ்ஸோர்,ராஜ்ஷாஷி,கோமிலா, மற்றும் சைலெட் ஆகியவை ஆகும். இந்த கப்பல்கள் அதிகபட்சமாக மணிக்கு 37கிமீ வேகத்தில் செல்லக் கூடியவை.இதை 29 வீரர்கள் இயக்கினர்.இவற்றை பாக் கடற்படை பழுப்பு நிற படை என அழைத்தது.இந்தக் கப்பல்களில் சில வகையான ஆயுதங்கள் மற்றும் பெரிய இயந்திர துப்பாக்கி பொருத்தப்பட்டிருந்தது.
இவற்றை அவர்கள் ரோந்து மற்றும் தீவிரவாத எதிர்ப்பு ஆபரேசன்களுக்கு பயன்படுத்தி வந்தனர்.

ஏப்ரல் முதல் நாட்களில் ,கிழக்கு பாகிஸ்தான் இராணுவம் சர்ச்லைட் என்ற இராணுவ நடவடிக்கையை  தொடங்கியது.இதில் பாக் இராணுவத்திற்கு ஆதரவாக பாக் கடற்படையும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தியது.இந்த ஆபரேசனின் குறிக்கோள் வங்கதேச விடுதலை அமைப்பான முக்தி பாகினி அமைப்பை தேடி அழிப்பது.இதில் தான் 3மில்லியன் பொதுமக்கள் வீழ்த்தப்பட்டனர்.இந்த அனைத்து ஆபரேசன்களையும் ரியர் அட்மிரல் ஷாரிப் தான் ஒருங்கிணைத்தார்.ஏப்ரல் 26ல் பாக் கடற்படை பாரிசல் நடவடிக்கையை மேற்கொண்டது.இதில் முக்தி பாகினி இராணுவம் (வங்கதேச விடுதலை அமைப்பு) கைப்பற்றியிருந்த பாரிசல் என்ற இடத்தை பாக் கடற்படை மீட்டது.

இந்த நேரத்தில் தான் இந்தியா முக்தி பாகினிக்கு பயிற்சி அளிக்க தொடங்கியது.கடல் யுத்தத்தில் தேர்ந்த முக்தி பாகினி கடல் செயல் வீரர்களை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதம் வழங்கியது. கிட்டத்தட்ட 148 முக்தி பாகினி கடற்செயல் வீரர்கள் ஜாக்பாட் நடவடிக்கையை தொடங்கி கெரில்லா போர் முறையின் மூலம் பாக் கடற்படையை கடுமையாக தாக்கினர்.இவர்களின் செயல்பாடுகள் மூலம் கிழக்கு பாக் கடற்படை மிரண்டு போயிருந்தது.

பகைமை தொடங்கும் முன்னரே, பாக் கிழக்குப் பிரிவின் கப்பல்கள் சிட்டகாங் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.இந்திய விமானப்படை தனது நடவடிக்கைகளை தொடங்கியது.டிசம்பர் 4ல் இந்திய விமானப் படை விமானங்கள் பாக்கின் PNS ராஜாஷாஷி கப்பலை சேதப்படுத்தின.PNS கோமிலா மூழ்கடிக்கப்பட்டது.

டிசம்பர் 5ல் , ஹுல்னா பகுதியில் பாக் கடற்படையின் இரண்டு ரோந்து கப்பல்களை மூழ்கடித்தது இந்திய விமானப்படை. மேலும் டிசம்பர் ஆறில், PNS சைலெட் மற்றும் டிசம்பர் 9ல் பாலஹாட் கப்பலும் விமானப் படையால் மூழ்கடிக்கப்பட்டது.டிசம்பர் 11ல்  PNS ஜெஸ்ஸோர் தகர்க்கப்பட்டது. இந்த நேரத்தில் PNS  ராஜாஷாஷி மறுஉருவாக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்த கப்பலுக்கு லெப்டினன்ட் கமாண்டர் ஷிக்டெர் என்பவர் தலைமை வகித்திருந்தார்.எப்படியோ இந்திய கடற்படை கப்பல்களின் தடுப்பை கடந்து தப்பித்து டிசம்பர் 16க்கு முன் மலேசியாவை அடைந்தார்.ஆனால் அந்த நேரத்தில் இங்கு மொத்த பாகிஸ்தானும் இந்தியாவிடம் சரணடைந்திருந்து.