இந்தியா-பாக் கடற்படை போர் 1971- பாகம் 6

அட்மிரல் S.M. நந்தா அவர்கள் அக்டோபர் 10, 1915ல் பஞ்சாபில் பிறந்தவர்.கடற்படையில் இணைவதற்கு முன் கராச்சி  துறைமுகத்தில் வேலைபார்த்தார்.

நந்தா அவர்கள் ராயல் இந்திய கடற்படையில் இணைந்து,இரண்டாம் உலகப்போரின் போது தன்னார்வமாக பணியாற்றினார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியக் கடற்படையில் இணைந்தார். 1948ல், INS டெல்லி போர்க்கப்பலில் முதல் லெப்டினன்டாக தனது பணியை தொடங்கினார். அதன் பிறகு 1951ல் INS ரஞ்சித்தின் தலைமைப் பணியை ஏற்றார்.அதன் பிறகு பல்வேறு பணிகளின் தலைமைப் பொறுப்பை வகித்தார்.பிறகு ரியர் அட்மிரலாக பதவி உயர்வு பெற்று,அதன் பிறகு 1962ல் துணை தளபதி பதவியை வகித்தார்.1962 மற்றும் 1965 போர் பெரும்பாலும் நிலத்திலேயே நடைபெற்றது.ஆனால் 1965 போரில் பாக் கடற்படை இந்தியக் கடற்படையின் த்வார்க்கா தளத்தை தாக்கியது.இதன் பிறகே இந்தியக் கடற்படை வலிமைப்படுத்தப்பட்டது.

மார்ச் 1970, ல் அட்மிரல் நந்தா 8வது கடற்படை தளபதியாக தலைமைப் பொறுப்பை ஏற்றார்.கடற்படையை  தற்காப்பு (defence ) என்ற மன நிலையில் இருந்து விடுத்து தாக்குதல் (offence )என்ற மனநிலைக்கு கொண்டுவந்தார்.இதற்கு 1971 போரை ஒரு களமாக பயன்படுத்தினார்.அந்த கடற்டை யுத்தத்தில் கடற்படை பயன்படுத்திய அனைத்து தந்திர நடவடிக்கைகளையும் செதுக்கியவர் இவரே.அந்தமான் பகுதி மற்றும் கிழக்கு பாகிஸ்தான் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிட்டார்.மேலும் கிழக்கு பாகிஸ்தானை தனிமைப்படுத்த போர்க்கப்பல்களை கொண்டு கிழக்கு பாக் துறைமுகங்களை சுற்றி கடல் தடை ஏற்படுத்தினார்.

மேற்கு பகுதியில் அவரது நடவடிக்கை கராச்சி துறைமுகத்தை தாக்கி கடற்படைக்கு மட்டுமல்ல அவர்களின் பொருளாதாரத்திற்கும்
பலத்த அடி கொடுத்தார்.ட்ரைடென்ட் நடவடிக்கை மற்றும் பைத்தான் நடவடிக்கைகளின் சூத்திரதாரி இவரே.

ட்ரைடென்ட் நடவடிக்கை

1971 போரில் கராச்சி துறைமுகம் தான் பாக் கடற்படையின் தலைமையகமாக இருந்தது.அதன் பெரும்பாலான கப்பல்கள் அனைத்தும் அங்கு தான் நிலை கொண்டிருந்தன.மேலும் பாகிஸ்தான் கடல்சார் வணிகம் அனைத்திற்கும் அது தான் தலைமையிடம்.அந்த நேரத்தில் இந்தியக் கடற்படை போர்க்கப்பல்கள் அந்த துறைமுகத்தை சுற்றி பாதுகாப்பான இடத்தில் கடல் தடை ஏற்படுத்த அது பாகிஸ்தானுக்கு பெரும் இடியாக விழுந்தது.கராச்சி துறைமுகத்தின் பாதுகாப்பே பாகிஸ்தான் தலைமைக்கு மிக முக்கியம்.அதனால் கடற்வழி தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதலுக்கு உள்ளாகதவாறு  கடற்படையின் அனைத்து சக்திகளும் அதை காக்க நிறுத்தப்பட்டிருந்தன. துறைமுகத்தின் வான்பரப்புகளை காக்க அருகில் இருந்த விமானத் தளத்தில் தாக்கும் விமானங்கள் நிறுத்தப்பட்டு முழு துறைமுகமும் பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தது.

1971 ன் இறுதியில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் பதற்றம் அதிகரித்திருந்தது.நவம்பர் 23 அன்று, பாகிஸ்தான் நாடு தழுவிய எச்சரிக்கையை (national emergency) அமல்படுத்தியிருந்தது.இந்தியக் கடற்படை தனது வித்யுத் வகை ஏவுகணைக் கப்பல்களை கராச்சிக்கு அருகே உள்ள ஓகா பகுதியில் ரோந்து செல்ல களமிறக்கியது. அதே போல் பாக் தனது நீர்மூழ்கிகள் மற்றும் கப்பல்களை களமிறக்கி (ஹங்கொர் நீர்மூழ்கி நியாபகம் இருக்கிறதா!) ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தது.இந்திய கடற்படை ,பாக் கடற்பகுதிக்குள் செல்லாதவாறு வரையறை செய்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.இந்த ரோந்து பணிகளால் இந்தியக் கடற்படை அந்த பகுதிகள் குறித்து நன்கு அறிந்து கொண்டது.டிசம்பர் 3,அன்று பாக் விமானப் படை, இந்திய விமானப்படை தளங்களை தாக்கியதும் ,இந்தியா -பாக் போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

போர் தொடங்கியதும் இந்தியக் கடற்படை கராச்சியை தாக்க முடிவு செய்தது. இந்தியக் கடற்படை தலைமையும்(டெல்லி),இந்தியக் கடற்படையின் மேற்கு பிரிவுத் தலைமையும் (மும்பை) இணைந்து ஒரு பிரத்யேக தாக்கும் கப்பல் குழுவை உருவாக்கினர்.இந்த தாக்கும் குழு மூன்று வித்யுத் வகை ஏவுகணைக் கப்பல்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டன.இந்த வித்யுத் கப்பல்கள் ஏற்கனவே கராச்சிக்கு வெளியே ஓகா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தன.அவர்கள் அந்த பகுதி பற்றி நன்கறிந்திருந்தனர்.ஆனால் இந்தவகை கப்பல்கள் வெறும் ரோந்துக்கு பயன்படுத்தப்படுபவை.அதனால் குறைந்த தூரம் செல்பவை மற்றும் இவற்றின் ரேடார் கண்காணிக்கும் தொலைவும் குறைவு.இதை தவிர்க்க இவைகளுடன் மேலும் மூன்று துணைக்கப்பல்கள் அந்த தாக்கும் குழுவில் இணைக்கப்பட்டன.கராச்சி தாக்கும் குழு
( Karachi Strike Group ) என பெயரிடப்பட்ட அந்த குழுவில் மூன்று வித்யுத் வகை ஏவுகணைக் கப்பல்களான  INS நிபட், INS நிர்கடன்ட் , INS வீர் இருந்தன.அவைகள் ஒவ்வொன்றும் நான்கு சோவியத் தயாரிப்பு SS-N-2B ஏவுகணைகளை கொண்டிருந்தன.அவை 74கிமீ வரை சென்றும் ஆற்றல் கொண்டவை.

இவைகளுடன் இரண்டு ஆர்நாலா வகை நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்களான INS கில்டன் மற்றும் INS கட்சல் இணைக்கப்பட்டன.மேலும் ஒரு டேங்கர் கப்பலான ( fleet tanker)  INS போஷாக் கப்பலும் இணைக்கப்பட்டது. இந்த குழுவிற்கு 25வது ஏவுகணை கப்பல் ஸ்குவாட்ரானின் கமாண்டிங் அதிகாரியான கமாண்டர் பப்ரு பான் அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்திய இராணுவச் செய்திகள்