2021ல் செய்யப்பட உள்ள ஏவுகணை சோதனைகள்

இந்தியா 2021ல் தொடர் ஏவுகணை சோதனைகள் நடத்த உள்ளது. குறிப்பாக பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ,ஏர் இண்டிபெண்டன்ஸ் புரோபல்ஷன் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றுடன் 800 கிலோமீட்டர் செல்லக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணையும் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இவற்றில் மிக முக்கியமாக ஏர் இண்டிபெண்டன்ஸ் புரோபல்ஷன் சோதனை ஆகும். இந்தியா தற்போது கட்டிவரும் 6 ஸ்கார்பின் ரக நீர்மூழ்கிகளில் இந்த ஏ.ஐ.பி அமைப்பு பொருத்தப்பட உள்ளது. நீர்மூழ்கி கப்பல்கள் நீண்டநேரம் நீருக்குள் இருக்க இந்த ஏ.ஐ.பி அமைப்பு உதவும்.

இதன்பிறகு எதிரியின் ஏவுகணைகள், அணுஆயுத ஏவுகணைகள், விமானங்கள் ஆகியவற்றை வானில் வைத்தே அழிக்கக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையின் வான் பாதுகாப்பு அமைப்பின் இரண்டாம் கட்ட சோதனை 2021 இல் நடைபெறும். இது தவிர ரஸ்டம் 2 ஆளில்லா விமானம் 2021ல் முதல் ஆறு மாதத்திற்குள் சோதனை செய்யப்பட உள்ளது.

நவீன கால போர் முறைக்கு ஆளில்லா விமானங்கள் எந்த அளவு முக்கியம் என்பதை தற்போது நடந்து முடிந்த அஜர் பைஜான் -அர்மீனியா ராணுவ மோதல் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அந்தவகையில் இந்தியாவும் பல்வேறு ரக ஆளில்லா விமான மேம்பாட்டு சோதனையில் ஈடுபட்டு உள்ளது.

இதைத்தவிர 800 முதல் 1000 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய நிர்பயா குரூஸ் ஏவுகணையும் சோதனை செய்யப்பட உள்ளது. மேலும் 800 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கக்கூடிய பிரமோஸ் ஏவுகணையும் 2021 நடுப்பகுதியில் சோதனை செய்ய உள்ளது. 400 கிலோ மீட்டர் வரை சென்று தாக்க கூடிய பிரம்மோஸ் ஏவுகணை சோதனை ஏற்கனவே செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.