ட்ரைடென்ட் நடவடிக்கை

1971 போரில் கராச்சி துறைமுகம் தான் பாக் கடற்படையின் தலைமையகமாக இருந்தது.அதன் பெரும்பாலான கப்பல்கள் அனைத்தும் அங்கு தான் நிலை கொண்டிருந்தன.மேலும் பாகிஸ்தான் கடல்சார் வணிகம் அனைத்திற்கும் அது தான் தலைமையிடம்.அந்த நேரத்தில் இந்தியக் கடற்படை போர்க்கப்பல்கள் அந்த துறைமுகத்தை சுற்றி பாதுகாப்பான இடத்தில் கடல் தடை ஏற்படுத்த அது பாகிஸ்தானுக்கு பெரும் இடியாக விழுந்தது.கராச்சி துறைமுகத்தின் பாதுகாப்பே பாகிஸ்தான் தலைமைக்கு மிக முக்கியம்.அதனால் கடற்வழி தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதலுக்கு உள்ளாகதவாறு கடற்படையின் அனைத்து சக்திகளும் அதை காக்க நிறுத்தப்பட்டிருந்தன. துறைமுகத்தின் வான்பரப்புகளை காக்க அருகில் இருந்த விமானத் தளத்தில் தாக்கும் விமானங்கள் நிறுத்தப்பட்டு முழு துறைமுகமும் பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தது.

1971 ன் இறுதியில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் பதற்றம் அதிகரித்திருந்தது.நவம்பர் 23 அன்று, பாகிஸ்தான் நாடு தழுவிய எச்சரிக்கையை (national emergency) அமல்படுத்தியிருந்தது.இந்தியக் கடற்படை தனது வித்யுத் வகை ஏவுகணைக் கப்பல்களை கராச்சிக்கு அருகே உள்ள ஓகா பகுதியில் ரோந்து செல்ல களமிறக்கியது. அதே போல் பாக் தனது நீர்மூழ்கிகள் மற்றும் கப்பல்களை களமிறக்கி (ஹங்கொர் நீர்மூழ்கி ) ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தது.இந்திய கடற்படை ,பாக் கடற்பகுதிக்குள் செல்லாதவாறு வரையறை செய்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.இந்த ரோந்து பணிகளால் இந்தியக் கடற்படை அந்த பகுதிகள் குறித்து நன்கு அறிந்து கொண்டது.டிசம்பர் 3,அன்று பாக் விமானப் படை, இந்திய விமானப்படை தளங்களை தாக்கியதும் ,இந்தியா -பாக் போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

போர் தொடங்கியதும் இந்தியக் கடற்படை கராச்சியை தாக்க முடிவு செய்தது. இந்தியக் கடற்படை தலைமையும்(டெல்லி),இந்தியக் கடற்படையின் மேற்கு பிரிவுத் தலைமையும் (மும்பை) இணைந்து ஒரு பிரத்யேக தாக்கும் கப்பல் குழுவை உருவாக்கினர்.இந்த தாக்கும் குழு மூன்று வித்யுத் வகை ஏவுகணைக் கப்பல்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டன.இந்த வித்யுத் கப்பல்கள் ஏற்கனவே கராச்சிக்கு வெளியே ஓகா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தன.அவர்கள் அந்த பகுதி பற்றி நன்கறிந்திருந்தனர்.ஆனால் இந்தவகை கப்பல்கள் வெறும் ரோந்துக்கு பயன்படுத்தப்படுபவை.அதனால் குறைந்த தூரம் செல்பவை மற்றும் இவற்றின் ரேடார் கண்காணிக்கும் தொலைவும் குறைவு.இதை தவிர்க்க இவைகளுடன் மேலும் மூன்று துணைக்கப்பல்கள் அந்த தாக்கும் குழுவில் இணைக்கப்பட்டன.கராச்சி தாக்கும் குழு
( Karachi Strike Group ) என பெயரிடப்பட்ட அந்த குழுவில் மூன்று வித்யுத் வகை ஏவுகணைக் கப்பல்களான INS நிபட், INS நிர்கடன்ட் , INS வீர் இருந்தன.அவைகள் ஒவ்வொன்றும் நான்கு சோவியத் தயாரிப்பு SS-N-2B ஏவுகணைகளை கொண்டிருந்தன.அவை 74கிமீ வரை சென்று தாக்கும் ஆற்றல் கொண்டவை.

இவைகளுடன் இரண்டு ஆர்நாலா வகை நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்களான INS கில்டன் மற்றும் INS கட்சல் இணைக்கப்பட்டன.மேலும் ஒரு டேங்கர் கப்பலான ( fleet tanker)  INS போஷாக் கப்பலும் இணைக்கப்பட்டது. இந்த குழுவிற்கு 25வது ஏவுகணை கப்பல் ஸ்குவாட்ரானின் கமாண்டிங் அதிகாரியான கமாண்டர் பப்ரு பான் அவர்கள் தலைமை தாங்கினார்.

திட்டமிட்டது போலவே, 4 டிசம்பர் அன்று தாக்கும் குழு கராச்சியிலிருந்து 290 மைல் தொலைவு பகுதியை அடைந்திருந்தது.அது பாகிஸ்தான் விமானப் படையின் ரோந்து விமானங்கள் செல்லும் வான் பரப்பிலிருந்து பாதுகாப்பான தொலைவில் இருந்தது.1971 சமயங்களில் பாக் விமானப்படை விமானங்களில் இரவில் குண்டுவீச தேவையான தொழில்நுட்பங்கள் இல்லாதிருந்தது.எனவே இந்தியக் கடற்படை இரவில் கராச்சியை நெருங்கி தாக்க முடிவு செய்திருந்தது. பாகிஸ்தான் நேரப்படி இரவு 10.30, இந்தியத் தாக்கும் கப்பல் குழு காராச்சிக்கு 210 மைல் பகுதியை நெருங்கியது.கராச்சியை நெருங்கியதும் இலக்குகள் உறுதிப்படுத்தப்பட்டன.அவைகள் பெரும்பாலும் பாக் போர்க்கப்பல்கள்.

INS நிர்கத் முன்னோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து பாகிஸ்தானின் PNS கைபர் நாசகாரி போர்க்கப்பல் மீது ஸ்டைக்ஸ் ஏவுகணையை ஏவியது.கைபர் இதனை இந்திய விமானப் படை தாக்குதல் என நினைத்து தனது விமான எதிர்ப்பு அமைப்புகளை செயல்படுத்தியது.நிர்கத் ஏவிய ஏவுகணை கைபர் கப்பலின் வலது பகுதியில்  மின்னனு வல்லுநர்கள் இருக்கும் தளத்தை 10:45க்கு தாக்கியது.இதனால் கைபரின் முதல் கொதிகலன் அறை வெடித்தது.இதனால் கப்பலின் உந்துவிசை அமைப்பு (propulsion) செயல்படாமல் கப்பல் நின்று போனது.கப்பல் முழுவதிலும் புகை கிளம்பி வானில் பரவியது.உடனே கைபர் தலைமையகத்திற்கு அவரச தகவல் அனுப்பியது.”எதிரி விமானம் எங்களை தாக்கியுள்ளது.கொதிகலன் சேதமடைந்து கப்பல் நின்றுபோனது”(“Enemy aircraft attacked in position 020 FF 20. No. 1 boiler hit. Ship stopped”).

கப்பல் தாக்கப்பட்டதில் பீதியடைந்த வீரர்கள் பாக் கடற்படை தலைமையகத்திற்கு கப்பலின் தற்போதைய நிலை (இருப்பு நிலை குறித்த ஒருங்கிணைந்த குறியீடு) குறித்த தகவலை தவறாக அனுப்பினர்.இதனால் பாகிஸ்தான் அனுப்பிய காப்பாற்றும் குழு கப்பலை அடைய தாமதமானது.கப்பல் இன்னும் மிதப்பதை அறிந்த நிர்கத் மற்றுமொரு ஏவுகணையை கைபர் நோக்கி செலுத்தியது.அது கப்பலின் இரண்டாது கொதிகலனை வெடித்து சிதறடித்தது.இதனால் கைபர் மூழ்கியது.கப்பலில் இருந்த 222 பாக் வீரர்களும் வீழ்த்தப்பட்டனர்.

இந்தியக் கப்பல் குழு அடுத்து 11 மணிக்கு இரு இலக்குகளை அடையாளம் கண்டுகொண்டது.ஒன்று பொருள் ஏற்றிச் செல்லும் கார்கோ கப்பலான எம்வி வீனஸ் சேலஞ்சர்.அது பாக் படைகளுக்கு தேவையான படைத் தளவாடங்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது.மற்றொன்று அதை காவல் காத்து சென்ற நாசகாரி போர்க்கப்பலான ஷாஜகான்.இந்த இரண்டு கப்பல்களையும் கண்டு கொண்ட நிபட் அவைகளை நோக்கி இரண்டு ஏவுகணைகளை செலுத்தியது.முதல் ஏவுகணை வீனஸ் சேலஞ்சர் கப்பலை தாக்கியது.இதில் அந்த கப்பல் மூழ்கியது.இரண்டாவது ஏவுகணை ஷாஜகானை தாக்கியது.இதில் அந்தக் கப்பல் கடும் சேதத்திற்கு உள்ளானது.அடுத்து இரவு 11.20க்கு  PNS முகாபிஸ் என்ற கண்ணிவாரிக் கப்பலை ஐஎன்எஸ் வீர் தாக்கியது.கப்பலின் இடது புறத்தை தாக்கிய ஏவுகணை ,கப்பல் தலைமையகத்திற்கு தகவல் தெரிவிக்கும் முன்னரே மூழ்கியது.அதிலிருந்த 33வீரர்களும் வீழ்த்தப்பட்டனர்.

இதே நேரத்தில் ஐஎன்எஸ் நிபட் கராச்சியை நோக்கி விரைந்தது.கிட்டத்தட்ட 16மைல் தொலைவில் இருந்து கராச்சியில் இருந்த கேமாரி எண்ணெய் டேங்கை தாக்கியது.இரண்டு ஏவகணை ஏவப்பட்டதில் முதல் ஏவுகணை வழிமாறியது.ஆனால் மற்றொன்று வெற்றிகரமாக எண்ணெய் டேங்கை தாக்கியது.இதில் முழுவதுமாக அந்த டேங்க் அழிக்கப்பட்டது.இதனால் பாக் கடற்படைக்கு எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டது.தாக்குதலை முடித்து இந்தியக் கப்பல்கள் பக்கத்தில் இருந்த இந்திய துறைமுக பகுதிக்கு திரும்பின.கைபரில் பிழைத்தவர்களை மீட்க பாக் கடற்படை தலைமையகம் ரோந்து கப்பல்களை அனுப்பியது.அதே போல் முகாபிஸ் தகவல் அனுப்பும் முன்னரே மூழ்கியதால் அதிலிருந்தவர்களின் விதி அவர்களுக்கு தெரிந்திருந்தது.கடலில் எரிந்து கொண்டிருந்த கப்பலில் இருந்து சில பேர் மீட்டது ரோந்து கப்பல்.

எந்த சேதமும் இல்லாமல் இந்திய தாக்கும் கப்பல் குழு இந்தியா திரும்பியது.ஆபரேசன் ட்ரைடன்ட் முழுவெற்றி அடைந்தது.

இதற்கு பழிதீர்க்க நினைத்து பாக் விமானப் படை இந்தியாவின் ஓகா துறைமுகத்தில் குண்டு மழை பொழிந்தன.அது இந்திய ஏவுகணை கப்பல்களுக்கான எண்ணெய் கிடங்கு, வெடிகுண்டு கிடங்கு ,மற்றும் கப்பல் நிறுத்துமிடம் ஆகியவற்றை சேதப்படுத்தியது.இந்தியக் கடற்படை இந்த தாக்குதலை எதிர்ப்பார்த்திருந்தது.அதனால் தான் அங்கு இருந்த ஏவுகணை கப்பல்களை வேறு இடத்திற்கு அனுப்பிவைத்திருந்தது.இதற்கு பழிதீர்க்க அடுத்த மூன்றேநாளில் பைத்தான் நடவடிக்கையை கடற்படை தொடங்கியது.இதன் பிறகு பாக் தனது முப்படைகளையும் தயார்படுத்தியது.கடற்பகுதியில் பாக் விமானங்கள் தொடர்ந்து பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டன.தொடர்ந்து பல தவறான எச்சரிக்கைகளும் கடற்படை தலைமையகத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தன.அவ்வாறு தான் 6டிசம்பர், பாக் தனது சொந்த கப்பலேயே ஒரு முறை தாக்கி சொந்த வீரர்களையே கொன்றது.வழக்கம் போல் பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாக் விமானமான போக்கர் ரோந்து விமானம் ஓரு பாக் போர்க்கப்பலை இந்திய போர்க்கப்பல் என தவறாக கணித்து தன் தலைமையகத்திற்கு தகவல் அனுப்பியது.இதனை காலை 06.45 மணியளவில் அந்த கப்பலை தாக்க பாக் விமானங்களை அனுப்பியது.பாக் விமானங்களும் அந்த PNS சுல்பிகர் கப்பலை தாக்க அந்த கப்பல் கடும் சேதத்திற்கு உள்ளனது.பல மாலுமிகளும் வீழ்த்தப்பட்டனர்.

ட்ரைடன்ட் நடவடிக்கை இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நடத்தப்பட்ட ஒரு வெற்றிகரமான நடவடிக்கை ஆகும்.இதை கொண்டாட முடிவு செய்த கடற்படை டிசம்பர் 4ம் தேதியை கடற்படை தினமாக அறிவித்தது.இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட பல்வேறு வீரர்களுக்கு வீரவிருது வழங்கப்பட்டது. குழு நடவடிக்கைக்கை அதிகாரி கேப்டன் (பின்னாளில் துணை கடற்படை தளபதி)குலாப் மோகன்லால் அவர்களுக்கு நௌசேனா விருது வழங்கப்பட்டது.நடவடிக்கையை திறம்பட திட்டமிட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்டது. தாக்குதம் குழுவை வழிநடத்தியதற்கும் சிறப்பான திட்டமிடலுக்கும் காரணமாக கமாண்டர் பப்ரு பான் அவர்களுக்கு மகாவீர் சக்ரா வழங்கப்பட்டது.

நிபட்டின் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் பகதூர் நாரிமன் கவினா, நிர்கத்தின் கமாண்டிங் அதிகாரி இந்தர்ஜித் சர்மா, வீர் கப்பலின் கமாண்டிங் அதிகாரி ஓம்பிரகாஷ் மேக்தா ஆகியோருக்கு வீர் சக்ரா வழங்கப்பட்டது.நிர்கத்தின் Master Chief M. N. சங்கல் அவர்களுக்கும் வீர் சக்ரா வழங்கப்பட்டது.