இந்தியா-பாக் கடற்படை போர் 1971 – பாகம் 1

1971 வங்கதேச விடுதலைப் போரில் பாக் மற்றும் இந்தியக் கடற்படைகள் அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் தொடர்ச்சியாக  கடல் யுத்தம் நடத்தின.

போரின் நடுப்பகுதியில் இந்தியக் கடற்படை பாகிஸ்தானுக்கு அழுத்தம் தரும் வகையில் அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் பாக்கிஸ்தான் கடற்படை கப்பல்கள் கிழக்கு பாகிஸ்தான் ( தற்போது வங்கதேசம்) செல்லாதவாறு தன் கப்பல்களைை கொண்டு கடற்பகுதியில்  தடைகளை ஏற்படுத்தியது.இது தரையில் போரிட்டுக் கொண்டிருந்த தரை மற்றும் வான் படைகளுக்கு பேரூதவியாக இருந்தது.

இந்த வங்கதேச விடுதலைப் போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சௌதி அரேபியா,அமெரிக்கா,இங்கிலாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள்  களமிறங்கின.இந்தியாவிற்கு சோவியத் இரஷ்யா பேராதரவு அளித்தது.

இந்த மொத்த கடற்படை யுத்தத்திலும் மேற்கு கடல் முனையில் இந்திய கடற்படை இரண்டு முக்கிய பெரிய மற்றும் வெற்றிகரமான ஆபரேசன்களை நடத்தி முடித்தது.அவைதான் ஆபரேசன் ட்ரைடன்ட் மற்றும் ஆபரேசன் பைத்தான்.

1965 இந்தியா பாக் போரில் கடற்படை பெருமளவு பயன்படுத்தப்படவில்லை.அது ஒரு தரைப் படை போராக மட்டுமே இருந்தது.ஆனால் செப்டம்பர் 7 ,1965ல் பாகிஸ்தான் ஒரு கடற்படை ஆபரேசனை செயல்படுத்தியது.ஆபரேசன் த்வார்க்கா என பெயரிடப்பட்ட அந்த ஆபரேசனின் குறிக்கோள்  , கராச்சியில் (பாகிஸ்தான் துறைமுக நகரம்) இருந்து 300கிமீ தெற்கு பகுதியில் இருந்த இந்திய கடற்கரை பகுதி நகரமான த்வார்க்காவின் இருந்த இந்திய கடற்படையின் ரேடார் நிலையத்தை தாக்குவது தான்.

பாக் கடற்படையின் கம்மோடோர் அன்வர் தலைமையில் சில போர்க்கப்பல்கள் த்வார்க்காவை தாக்கினார்கள். ஆனால் அவர்களால் அந்த ரேடார் நிலையத்தை தகர்க்க முடியவில்லை.சொல்லப்போனால் அது ஒரு வீண் ஆபரேசன் தான்.இந்த தாக்குதலுக்கு பிறகு விழித்துக் கொண்ட இந்தியக் கடற்படை தனது பலத்தை பெருக்கிகொள்ள ஆரம்பித்தது.இந்தியக் கடற்படையின் பட்ஜெட் 350மில்லியன் ரூபாயிலிருந்து 1.15 பில்லியன் ரூபாய்களாக அதிகரிக்கப்பட்டது.சோவியத்திடம் இருந்து கப்பல்கள் வாங்கப்பட்டன.நீர்மூழ்கிகள் வாங்கப்பட்டன.அதில் முக்கியமானவை சோவியத்திடம் இருந்து வாங்கப்பட்ட ஆறு ஓசா வகை ஏவுகணைக் கப்பல்கள் தான்.அதே போல் இந்தியக் கடற்படையின் விமானப் பிரிவும் வலுப்படுத்தப்பட்டது.