இந்தியாவின் முதல் பரம் வீர் சக்ரா பெற்ற மேஜர் சோம்நாத் சர்மா அவர்களின் வீரவரலாறு

  • Tamil Defense
  • November 3, 2020
  • Comments Off on இந்தியாவின் முதல் பரம் வீர் சக்ரா பெற்ற மேஜர் சோம்நாத் சர்மா அவர்களின் வீரவரலாறு

“எதிரிகள் வெறும் 50யார்டு (45மீ) தொலைவில் நெருங்கிவிட்டனர்.நம்மை விட அதிக ஆட்பலம் கொண்டுள்ளனர்.எங்களை கடுமையாக தாக்குகின்றனர்.நாங்கள் ஒரு இன்ச் கூட நகரப்போவதில்லை.நாங்கள் கடைசி வீரர் உயிரோடு இருக்கும் வரை போராடுவோம்”-மேஜர் சோம்நாத் சர்மா(பரம் வீர் சக்ரா)

இவை தான் பிரைகேடு தலைமையகத்திற்கு மேஜர் கடைசியாக கூறிய வார்த்தைகள்.

இந்தியா வீரத்திற்கு சிறிதும் பஞ்சம் இல்லாத நாடு.அது பல மாவீரர்களை உருவாக்கியுள்ளது.பல வீரர்கள் நம் நாட்டிற்காக வீரமரணம் அடைந்துள்ளனர்.இன்று மேஜர் சோம்நாத் சர்மா அவர்களின்  வீரவரலாற்றை  காணலாம்.

இது இந்தியாவின் மிக உயரிய இராணுவ விருதான பரம்வீர் சக்ரா பெற்ற மேஜர் சோம்நாத் சர்மா அவர்களின் வரலாறு

மேஜர் சோம்நாத் அவர்கள் ,31 ஜனவரி 1923ல் ஹிமாச்சலின் கங்ரா மாவட்டத்தில் உள்ள தாத் என்னுமிடத்தில் பிறந்தார்.அவரது அப்பா மேஜர் ஜெனரல் அமர்நாத் சர்மா ,இந்திய இராணுவத்தின் மருத்துவ சேவை பிரிவின் முதல் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றியவர்.அதே போல அவரது அங்கிள் கேப்டன் வசுதேவா , இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் படைகளிடமிருந்து ஸ்லிம் ஆற்றில் கட்டப்பட்டிருந்த பாலத்தை காக்கும் பொருட்டு வீரமரணம் அடைந்தவர்.இவர்களால் உந்தப்பட்ட சோம்நாத் அவர்கள் சிறுவனாக இருந்த போதே இராணுவத்தில் இணைய வேட்கை கொண்டார்.
ராயல் இராணுவக் கல்லூரியில் இணைந்த அவர் பிப்ரவரி 22, 1942 ல் இந்திய இராணுவத்தின் 19வது ஹைதரபாத் ரெஜிமென்டின் 8வது பட்டாலியனில் ( பின்பு 4வது பட்டாலியன் ,குமான் ரெஜிமென்ட் என மாற்றப்பட்டது) இணைந்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது கலோனல் திம்மையா ( பிறகு தளபதியாக பதவி வகித்தவர்.உலகப் போரில் இன்பான்ட்ரி பிரைகேடுக்கு தலைமை வகித்த ஒரே இந்தியர்) அவர்களின் கீழ் பர்மாவின் அரக்கான் பகுதியில் போர் புரிந்தார்.போரில் காட்டிய வீரதீரம் காரணமாக  ‘Mention-in-Despatches’ விருது பெற்றார்.அதன் பின்னர் 4வது குமான் ரெஜிமென்டின் டெல்டா கம்பெனியில் மேஜராக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது தான் அக்டோபர் 22,1947ல் பாக் படைகள் காஷ்மீரில் ஊடுருவின.அடுத்த நாள் காலை இந்திய இராணுவம் களத்தில் குதித்தது.இராணுவ தளவாடங்கள்,வீரர்கள் விமானங்கள் வாயிலாக ஸ்ரீநகர் விமான தளத்திற்கு அனுப்பப்பட்டனர்.அவ்வாறு அனுப்பப்பட்ட படைகளுள் மேஜர் சோம்நாத் சர்மா அவர்களின் கம்பெனியும் ஒன்று.

அந்த நேரத்தில் மேஜரின் வலது கை அடிபட்டு கட்டு போடப்பட்டிருந்ததது.ஹாக்கி விளையாடியதில் அடிபட்டிருந்தது.அதனால் அவர் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டார்.எனினும்  அவர் தனது கம்பெனியை வழிநடத்த அனுமதி கேட்டார்.அனுமதி வழங்கப்பட்டது.அவர்கள் என்ன செய்ய வேண்டும் என தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருந்தது.காஷ்மீர் சமவெளியை காப்பது, வந்த பாகிஸ்தானியர்களை விரட்டுவது,புதிதாய் உருவான காஷ்மீர் மாநிலத்தை காப்பது தான் அவர்களின் பணி.

நவம்பர் 3 அன்று , பாகிஸ்தானியர்கள் பட்கம் என்ற சிறிய நகரத்தை அடைந்திருந்தனர்.அந்த நகரம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து சிறிது மைல் தொலைவில் தான் இருந்தது.இதை அறிந்த இராணுவத்தின் 161வது இன்பான்ட்ரி பிரைகேடின் பிரைகேடியர்  L.P. போக்கி சென் , மேஜர் சோம்நாத் அவர்களின் கம்பெனியை பட்கமிற்கு அனுப்பி வைத்தார்.

நவம்பர் 3,விடியும் சமயத்தில் மேஜரின் கம்பெனி பட்கமை அடைந்தது.எதிரியின் நடமாட்டம் ஒரு கிராமத்தின் பக்கத்தில் தென்பட்டது.உடனே மேஜர் தனது படைகளை தகுந்த இடத்தில் நிறுத்தி தாக்க தயாரானார்.ஆனால் அவர் எதிரியின் நடமாட்டத்தை சந்தேகித்தார்.இது நம்மை திசைதிருப்பி மேற்கு பகுதியில் இருந்து நம்மை தாக்க ஒரு யுக்தியாக இருக்கலாம் என சந்தேகித்தார்.கடைசியாக அவர் சந்தேகித்தது சரியாக இருந்தது.

மதியம் 2:30 , ஆயுதம் தாங்கிய 500 திண்மையான பதான் லஷ்கர்கள் , மோர்ட்டார்கள் (Mortars ) உதவியுடன்  50 வீரர்களை கொண்ட மேஜரின் கம்பெனியை தாக்கினர்.மூன்று பக்கத்திலும் சூழ்ந்த அவர்கள் மோர்ட்டார்கள் உதவியுடன் நமது படைகளை கடுமையாக தாக்கினர்.இதனால் நமக்கு பலத்த இழப்பு ஏற்பட்டது.
நமது ஒரு வீரருக்கு அவர்கள் ஏழு பேர் என்ற நிலையில் இருந்தனர்.உடனடியாக பிரைகேடியர் சென் அவர்களை தொடர்பு கொண்ட மேஜர் மேலதிக படைகளை கோரினார்.ஆனால் மேஜர் சோம்நாத் சர்மாவிற்கு அந்த இடத்தை எதிரிக்கு விட்டுத்தரக் கூடாது என்பது நன்றாகவே தெரிந்திருந்தது.அவர் நினைத்தால் பின்வாங்கியிருக்கலாம்.அவ்வாறு நடந்திருந்தால் எதிரிகள் ஸ்ரீநகர் விமானத் தளத்தை கைப்பற்றியிருக்க கூடும்.அந்த நேரத்தில் இந்தியா தனது வீரர்களை காஷ்மீருக்கு அனுப்ப ஒரே வழி ஸ்ரீநகர் விமான நிலையம் மட்டுமே.வீரர்களுக்கு தேவையான தளவாடங்கள் என அனைத்து உயிர்காக்கும் பொருள்களும் அதன் வழியே தான் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது.எதிரிகள் அந்த தளத்தை கைப்பற்றும் பொருட்டு அவர்கள் எளிதாக காஷ்மீரில் இருந்த நமது படைகளுடனான தொடர்பை துண்டித்திருக்க முடியும்.அவ்வாறு வான் வழி நடவடிக்கைகள் நடத்தமுடியாமல் போகும் பட்சத்தில் தரை வழியே படைகள்நடத்தி சென்று அவர்களை தாக்குவது ஒரு வழியில் கடினமாக இருக்கும்.

எனவே மேஜர் சோம்நாத் தனது நிலையை விட்டு அகலாமல் இருக்கும் வீரர்களை கொண்டு போரிட்டுக் கொண்டிருந்தார்.அவர் வீரர்கள் இருந்த ஒவ்வொரு நிலைக்கும் ஓடி ஓடி உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்.முன் பகுதியில் இருந்த இரண்டு பிளாட்டூன் வீரர்களும் வீரமரணம் அடைந்துவிட்டனர்.கடும் துப்பாக்கி சூடு நடந்து கொண்டிருந்தது.எதிரிகள் சிறிது சிறிதாக முன்னேறினாலும் மேஜர் தனது நிலையை விட்டு அகலாமல் இருந்தார்.

இந்த நேரத்தில் அவர் எதிரியின் கண்களுக்கு தெரிய ஆரம்பித்தார்.பொதுவாக போரின் போது கமாண்டர்கள் பின்னால் இருந்து வீரர்களை இயக்குவர்.அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற உத்தரவுகள் போடுவர்.எனவே எதிரிகள் அவர்களையே குறிவைத்து தாக்க முன்படுவர். மேஜர் இலகுரக இயந்திர துப்பாக்கிகளுக்கு தோட்டாக்கள் நிரப்பும் ( filling magazines)  பணியை அவரே செய்தார்.இத்தனையையும் அவர் தனது உடைந்த கைகளை கொண்டே செய்து கொண்டிருந்தார்.இலகு ரக இயந்திரத் துப்பாக்கிகளை கன்னர் வீரர்கள் வெறித்தனமாக உபயோகித்து தாக்கி கொண்டிருந்தனர்.நமது மற்ற வீரர்கள் உதவியுடன் அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் மேஜர் பார்த்துக் கொண்டார்.

இந்த நேரத்தில் தான் மேஜர் தனது பிரைகேடு தலைமைக்கு தனது கடைசி தகவலை அனுப்பினார்.

“எதிரிகள் வெறும் 50யார்டு (45மீ) தொலைவில் நெருங்கிவிட்டனர்.நம்மை விட அதிக ஆட்பலம் கொண்டுள்ளனர்.எங்களை கடுமையாக தாக்குகின்றனர்.நாங்கள் ஒரு இன்ச் கூட நகரப்போவதில்லை.நாங்கள் கடைசி வீரர் உயிரோடு இருக்கும் வரையிலும் துப்பாக்கியில் கடைசி குண்டு இருக்கும் வரையிலும் போராடுவோம்”

கடைசியாக மேஜர் சோம்நாத் இருந்த இடத்தில் எதிரியின் மோர்ட்டார் விழுந்ததில் அவர் அங்கேயே வீரமரணம் அடைந்தார்.அவர் போரில் காட்டிய அணையா வீரம் வீரர்களையும் தொற்றிக் கொண்டது.மேஜர் வீரமரணம் அடைந்துபிறகும் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக வீரர்கள் அந்த காட்டுமிராண்டிகளுக்கு எதிராக போரிட்டனர்.

4வது குமான் வீரர்கள் அந்த போரில் காட்டிய அதீத வீரம் காரணமாக எதிரிகள் ஆறு மணி நேரமாக அந்த இடத்தை விட்டு முன்னேற முடியாமல் இருந்தனர்.இது மற்ற இந்தியப் படை அங்கு வர போதுமான நேரமாக இருந்தது.உடனடியாக அங்கு குமான் ரெஜிமென்டின் முதல் பட்டாலியன் வந்து சேர்ந்தது.ஆனால் அங்கு இருந்த மேஜரின் படை கடும் இழப்பை சந்தித்திருந்தது.மேஜர் சோம்நாத் சர்மாவுடன் ஒரு ஜேசிஓ மற்றும் டெல்டா கம்பெனியின் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்திருந்தனர்.

நமது பக்கம் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்த அதே வேளையில் எதிரிகள் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.அவர்களின் தலைவனும் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டான்.மேலும் அவர்கள் வந்த வழியெங்கும் வெற்றியை மட்டும் சந்தித்தித்து வெறியுடன் வந்திருந்தனர்.ஆனால் நமது வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.இந்த முக்கிய ஆறு மணி நேர தாமதம் நம் படைகளுக்கு மேலதிக படைகளை பட்கமிற்கு அனுப்பவும், மேலும் ஸ்ரீநகருக்கு வர உள்ள அனைத்து வழிகளையும் அடைக்கவும் சரியாக இருந்தது.அனைத்திற்கும் மேஜர் சோம்நாத் மற்றும் அவரது வீரம் நிறைந்த வீரர்களே காரணம்.அவர்கள் ஸ்ரீநகர் எதிரியின் கைகளில் விழுவதை தடுத்தனர்.மேலும் சொல்லப் போனால் மொத்த காஷ்மீர் சமவெளியையும் காத்துள்ளனர்.

அவரது தன்னலமற்ற , கூர்ந்த அற்பணிப்பு உணர்வு , அதிவீரம் மற்றும் பயமில்லாமல் எதிரிகளை சந்தித்த பண்பு காரணமாக வீரமரணத்திற்கு பிறகு அவருக்கு போர்க்காலத்தில் வழங்கப்படும் உயரிய விருதான பரம் வீர் சக்ரா வழங்கப்பட்டது.பரம் வீர் சக்ரா பெற்ற முதல் வீரர் அவரே.

மேஜர் சோம்நாத் போன்ற வீரர்கள் தினமும் பிறப்பதில்லை.அவரது உயர்ந்த தியாகம் இந்நாட்டு மக்களால் என்றென்றும் நினைவு கூறப்படும்.

நம் பக்கத்தின் சார்பார்க அவருக்கு வீரவணக்கம்

© இந்திய இராணுவச் செய்திகள்