மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்னன்

மேஜர் சந்தீப் அவர்கள் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு படையின் சிறப்பு அதிரடிப் படை வீரர் ஆவார்.2008 மும்பை தாக்குதலில் மிகச் சிறப்பான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது வீரமரணம் அடைந்தவர்.அவரது வீரம்,தைரியம் மற்றும் போர்ச்சூழலில் காட்டிய வேகம் காரணமாக அமைதிக் காலத்தில் இந்தியாவின் மிக உயரின விருதான அசோக விருது பெற்றார்.

கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் 15, மார்ச் 1977 ல் பிறந்தார் மேஜர்.அவரது அப்பா இஸ்ரோவில் அதிகாரி.வீட்டிற்கு ஒரே பிள்ளையான சந்தீப் பெங்களூரில் தன் ஆரம்பகால கல்வியை பயின்றார்.படிக்கும் காலத்திலேயே இராணுவத்தில் சேர ஆர்வம்.இராணுவ வீரர்கள் போல தான் முடி வெட்டி பள்ளிக்கு செல்வாராம்.

1995ல் பூனேவில் உள்ள என்டிஏவில் இணைந்தார்.அங்கு அவர் ஆஸ்கார் ஸ்குவாட்ரானில் இணைந்து பட்டம் பெற்றார்.அவரது நண்பர்கள் மேஜர் அவர்களை தன்னலமில்லா  பொதுநலம் கொண்ட அமைதியானவர் என நினைவு கூர்கின்றனர்.பயிற்சி முடித்து 7வது பீகார் ரெஜிமென்டில்  12 ஜீலை 1999ல் லெப்டினன்டாக பணியில் இணைந்தார்.மிகக் கடினமான பயிற்சியாக கருதப்படும் கடக் கமாண்டோ பயிற்சியில் ( பெகல்கமில் உள்ள இன்பான்ட்ரி பள்ளியில்) முதல் தரமாக வெற்றி பெற்று “பயிற்சியாளர் தரம் ” பெற்று பாராட்டுதல்கள் பெற்றார்.

காஷ்மீர் மற்றும் இராஜஸ்தானில் பல்வேறு பயங்கரவாத எதிர்ப்பு  நடவடிக்கைளில் ஈடுபட்ட பின்னர் தேசியப் பாதுகாப்பு படையில் இணைந்தார்.2007ல் தேவையான அனைத்து பயிற்சிகளையும் பெற்ற பின் தேசியப் பாதுகாப்பு படையின் சிறப்பு அதிரடிப் படையில் (SAG) இணைந்தார்.

கார்கில் போரின் போது மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.ஆறு வீரர்களுடன் சென்று எதிரிகளுக்கு வெறும் 200மீ முன்னே ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளார் இத்தனையும் கடும் துப்பாக்கிச் சூடுகளுக்கு இடையே செய்துள்ளார்.

Operation Black Tornado

மும்பை தாக்குதலின் போது மேஜர் அவர்களின் 51 Special Action Group (51 SAG) படை பிரிவு தாஜ் பேலசில் இருந்தவர்களை மீட்க அனுப்பிவைக்கப்பட்டது.தாஜ் பேலசில் அவரும் அவருடன் 10கமாண்டோ வீரர்களும் உள்ளே நுழைந்து ஆறாவது மாடி வரை சென்றனர்.ஆனால் மூன்றாவது மாடியில் தீவிரவாதிகள் இருக்க வாய்ப்புள்ளது என திரும்ப இறங்கினர்.சில பெண்கள் ஒரு அறையில் வைத்து அடைக்கப்பட்டு உள்ளே பூட்டியிருந்தது.உடைத்து உள்ளே நுழைய முற்பட்ட போது தீவிரவாதி சுட்டதில் மேஜரின் நண்பர் சுனில் யாதவ் அவர்கள் மீது குண்டடி பட்டது.நண்பரை மீட்க மற்றவீரர்களுக்கு கட்டளையிட்டு  அதே நேரம் தீவிரவாதி தப்பி மேல் மாடி செல்ல, மேஜர் தீவிரவாதிகளை விரட்டி மேலே சென்றார்.

“யாரும் மேலே வர வேண்டாம், நான் அவர்களை பார்த்துக் கொள்கிறேன்” இவை தான் மேஜரின் இறுதி வார்த்தைகள்.

மேலே சென்ற மேஜர் தீவிரவாதிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட  பின்பக்கமாக வந்த தீவிரவாதி மேஜரை சுட படுகாயமடைந்து பின்னர் வீரமரணம் அடைந்தார் மேஜர்.தீவரவாதிகளை வீழ்த்தியது,பயமில்லாமல் செயல்பட்டது,சக வீரரை மீ்ட்டது ,சிக்கியிருந்தவர்களை மீட்டு வீரத்துடன் செயல்பட்டமைக்காக இந்தியாவின் உயரிய விருதான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.

மேஜர் வாழ்க என்ற கோசத்துடன் ஆயிரக்கரணக்கானோர் சூழ அவரது திருவுடல்  இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.