தேஜஸ் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை

  • Tamil Defense
  • November 23, 2020
  • Comments Off on தேஜஸ் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை

இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள வான்-வான் தாக்கும் ஏவுகணையான அஸ்திராவை ,மற்றும் ஒரு சொந்த தயாரிப்பான தேஜஸ் விமானத்தில் இணைத்து சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதன் மூலம் தேஜசின் தாக்கும் சக்தி வலுப்படுத்தப்பட உள்ளது.

ஒலியை விட 4.5 மடங்கு வேகமாக செல்லும் கண்ணுக்கு எட்டுவதற்கும் அப்பால் உள்ள இலக்குகளை தாக்க வல்ல அஸ்திரா தேஜசில் இணைக்கப்பட்டு முதற்கட்ட தரைச் சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.அடுத்தபடியாக வான் பறப்பு சோதனைகள் இன்னும் சில மாதங்களுக்குள் நடைபெற உள்ளது.

அனைத்து காலநிலைக்கும் ஏற்ற இரவு பகல்களில் செயல்பட கூடிய அஸ்திரா 100கிமீ தூரம் வரை செல்லக்கூடியது.தற்போது விமானப்படையில் செயல்பாட்டில் உள்ள அதிக செலவு கொண்ட இரஷ்ய,பிரெஞ்சு மற்றும் இஸ்ரேலிய ஏவுகணைகளுக்கு மாற்றாக இந்திய விமானப்படையில் செயல்படும்.

மேலும் அடுத்த வருடத்தின் முதல் பாதியில் 160கிமீ வரை செல்லக்கூடிய அஸ்திரா மார்க் 2 ஏவுகணை சோதனை செய்யப்பட உள்ளது.அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.இது தவிர 350கிமீ வரை செல்லக்கூடிய அஸ்திரா மார்க் 3 ஏவுகணை மேம்பாடு நடைபெற்று வருவதாக டிஆர்டிஓ கூறியுள்ளது.

அஸ்திரா மார்க்1 ஏற்கனவே பல முறை சுகாய் விமானங்களில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு அதன் திறன் உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் முதல் கட்டமாக 288 அஸ்திரா ஏவுகணைகளை பெற பாதுகாப்பு அமைச்சகமும் அனுமதி வழங்கியுள்ளது.

தேஜசில் இணைத்து சோதனைகள் வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் பெரிய அளவில் அஸ்திரா ஏவுகணைகளை ஆர்டர் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.ஒரு ஏவுகணை 7.5கோடிகள் என்ற அளவில் பாரத் டைனமிக் நிறுவனம் இந்த ஏவுகணையை தயாரிக்கும்.