வைஸ் அட்மிரல் நீலகண்ட கிருஷ்ணன் !!

சுதந்திர இந்தியாவின் கடற்படையை செதுக்கியவர்களில் மிக முக்கியமானவர் வைஸ் அட்மிரல் நீலகண்ட கிருஷ்ணன்.

8 ஜூன் 1919ஆம் ஆண்டு இந்தியாவின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியின் நாகர்கோவில் நகரில் இவர் பிறந்தார்.

1935ஆம் வருடம் இந்திய மெர்கண்டைல் மரைன் பயிற்சியில் இணைந்தார் பின்னர் அங்கிருந்து 1937ஆம் வருடம் கடற்படை தேர்வெழுதி கடற்படையில் இணைந்த இருவரில் இவரும் ஒருவர், மற்றவர் முன்னாள் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஜல் கர்ஸெட்ஜி.

இப்படி இருக்கையில் 1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் வெடித்தது, அப்போது ராயல் இன்டியன் நேவியில் (பிரித்தானிய இந்திய கடற்படை) பணிபுரிந்து வந்த அவர் போர்க்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பல ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு கடல்பகுதிகளில் போரில் பங்கு பெற்றார், இதில் ஈரானிய கடற்பகுதியில் நடைபெற்ற போரில் சிறப்பாக செயல்பட்டதற்காக ராணி எலிசபெத் அவர்களிடம் இருந்து நேரடியாக DSC விருதை லன்டன் பக்கிங்ஹாம் அரண்மணையில் நடைபெற்ற விழாவில் பெற்றுக் கொண்டார், இந்த விருதை பெற்ற முதல் இந்திய கடற்படை பணியாளர் இவர் ஆவார்.

சுதந்திர பிரகடனம் செய்யப்பட்ட பிறகு சிறிது காலம் பாகிஸ்தானில் பணியாற்றினார், அதன் பின்னர் இந்திய பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட அவர் இந்தியா திரும்பி இந்திய கடற்படையில் தன்னை இணைத்து கொண்டார்.

பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று லெஃப்டினன்ட் கமாண்டர் பதவியை எட்டிய போது 1949ஆம் ஆண்டு பாதுகாப்பு திட்டமிடல் குழவில் தரைப்படையின் லெப்டினன்ட் கர்னல் சாம் மானெக்ஷா (பின்னாளில் ஃபீல்ட் மார்ஷல் மற்றும் தரைப்படை தளபதி) , விமானப்படையின் விங் கமாண்டர் ப்ரதாப் சந்திர லால் (பின்னாளில் ஏர் சீஃப் மார்ஷல் இந்திய விமானப்படை தளபதி) ஆகியோருடன் பணியாற்றினார்.

பின்னர் 1949 டிசம்பர் மாதம் ஆக்டிங் கமாண்டர் ஆக பதவி உயர்வு பெற்றார், அதன் பிறகு இங்கிலாந்தில் பல்வேறு கடற்படை படிப்புகளை முடித்தார். 1952ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் ராணியின் முடிசூட்டு விழாவை சிறப்பிகாகும் வகையில் பல்வேறு நாடுகளின் கடற்படைகள் இங்கிலாந்தில் அணிவகுப்பு நடத்தின அதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட கப்பலில் இவர் அதிகாரியாக இருந்தார்.

பின்னர் கமாண்டர் ஆக பதவி உயர்வு பெற்றார், 1956ஆம் வருடம் மத்திய அமைச்சரவை செயலகத்தில் ராணுவ பிரிவில் துணை செயலாளராக பணியமர்த்தப்பட்டார். அதன் பின்னர் 1959ஆம் வருடம் கேப்டன் ஆக பதவி உயர்வு பெற்று லியான்டர் ரக போர்க்கப்பலான ஐ.என்.எஸ். தில்லியின் தலைமை கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்று கொண்டார்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் 1961ல் மஹாராஷ்டிர மாநிலம் லோனாவாலாவில் உள்ள கடற்படை பொறியியல் கல்லூரியின் தலைமை கட்டளை அதிகாரியாக பொறுப்பு ஏற்று கொண்டார்.

அதே வருடம் டிசம்பர் மாதம் இந்திய கடற்படை தளபதி ராம் தாஸ் அவர்களின் நேரடி உத்தரவின்படி ஐ.என்.எஸ் தில்லியை மீண்டும் கோவா மீட்பு போரில் வழிநடத்தினார். இந்த நடவடிக்கையின் போது 4 போர்த்தூக்கீசிய கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன.

பின்னர் 1963இல் ஆசியாவில் இருந்த ஒரே விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தின் தலைமை கட்டளை அதிகாரியாக பொறுப்பு ஏற்றார்.

பின்னர் பல்வேறு பயிற்சிகள்,ஆஃப்ரிக்க நாடான கானாவின் கடற்படைக்கு ஆலோசகர் போன்ற பணிகள், பதவி உயர்வுகள் பெற்று வைஸ் அட்மிரல் அந்தஸ்தை எட்டி மேற்க கடற்படை கட்டளையகம் பின்னர் கிழக்க கடற்படை கட்டளையகம் ஆகியவற்றின் தளபதியாக இருந்தார்.

இந்த நிலையில் 1971 டிசம்பர் மாதம் இந்திய பாகிஸ்தான் போர் வெடிக்கிறது, கிழக்கு கடற்படை தளபதியாக திறம்பட செயல்ப்பட்டார், நமது ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலை வழிநடத்தி வங்காளதேசத்தில் இருந்த பாகிஸ்தான் தளங்களை சீர்குலைத்தார். பின்னர் டாக்காவில் நடைபெற்ற சரணடைதல் நிகழ்வில் கலந்து கொண்டு பாக் கடற்படையின் சரணடைதலை இந்திய கடற்படை சார்பில் பாகிஸ்தானின் ரியர் அட்மிரல் மொஹம்மது ஷரீஃப் இடம் இருந்து ஏற்று கொண்டார்.

அப்போது ரியர் அட்மிரல் ஷரீஃப் இந்திய கடற்படை மிக அற்புதமாக போரிட்டு எங்களை முடக்கி போட்டது, போரில் இந்திய கடற்படையை முன்னின்று வழிநடத்திய உங்களிடமே நான் எனது படையினருடன் சரணடைகிறேன் என கூறி வைஸ் அட்மிரல் நீலகண்ட கிருஷ்ணன் அவர்களிடம் தனது துப்பாக்கியை ஒப்படைத்து சரணடைந்தார். இப்போரில் திறம்பட செயலாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அளித்து கவுரவிக்கப்பட்டது.

1973ஆம் ஆண்டு ஒய்வு பெற இருந்த அவருக்கு இரு ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கப்பட்ட போது அடுத்த கடற்படை தளபதியாக பொறுப்பு ஏற்கும் வாய்ப்பு இருந்தது, ஆனால் அவரது சகாவான அட்மிரல் ஜல் கர்ஸெட்ஜி கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில் 1973 முதல் 1976வரை கொச்சி கப்பல் கட்டுமான தளத்தின் தலைமை மேலாண்மை இயக்குனர் ஆக பணியாற்றி ஒய்வு பெற்றார்.

வைஸ் அட்மிரல் நீலகண்ட கிருஷ்ணன் தனது முறைப்பெண் சீதா அவர்களை திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு அர்ஜூன் மற்றும் சித்ரா எனும் இரு பிள்ளைகள் பிறந்தனர்.

சித்ரா அவர்கள் இயற்கை எய்திவிட்டார், அர்ஜூன் அமெரிக்காவில் கணிணி பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

வைஸ் அட்மிரல் கிருஷ்ணன் 1982ஆம் ஆண்டு பெங்களூரில் இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது 41வருட பணிக்காலத்தில் மூன்று போர்களில் பங்கு பெற்று, ஐ.என்.எஸ் தில்லி, ஐ.என்.எஸ் விக்ராந்த், ஐ.என்.எஸ் திர் ஆகிய கப்பல்கள் மற்றும் மேற்கு, கிழக்கு கடற்படை கட்டளையகங்களை வழிநடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.