பிரம்மோஸ் இந்தியா-இரஷ்யா இணைந்து மேம்படுத்திய ஒரு சூப்பர் சோனிக் க்ரூஸ் ஏவுகணை ஆகும்.மாக் 3 வேகத்தில் 300கிமீ வரை செல்லக்கூடியது ஆகும்.
நிலம்,நீர் மற்றும் ஆகாயம் என முப்பரிமாணங்களிலும் இதை ஏவ முடியும்.நீர்மூழ்கியிலும் இதைஏவ முடியும்.அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
தரை இலக்குகளை மிகத் துல்லியமாக அழிக்கவும்,எதிரி கப்பல்களை அழிக்கவும் பிரம்மோஸ் பயன்படுத்தப்படும்.
பிரம்மோசால் மேலே சென்ற சில நொடிகளிலேயே கிடைமட்டமாக செல்ல முடியும்.இதன் மூலம் மலைப் பகுதிகளுக்கு பின்புறம் உள்ள இலக்குகளை கூட தாக்க முடியும்.மேலும் எதிரியின் விமானம் தாங்கி கப்பலை அழிக்கும் திறனும் பிரம்மோசிற்கு உண்டு.இந்திய-இரஷ்ய இணைந்த உழைப்பிற்கு கிடைத்த அதிஅற்புத பலன் தான் பிரம்மோஸ்.மேலும் நமது அறிவியலாளர்கள் பிரம்மோசின் திறனை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றனர்.
தற்போது டிஆர்டிஓ உள்நாட்டிலேயே active X-band mono-pulse RF சீக்கரை மேம்படுத்தியுள்ளது.தற்போது பிரம்மோசில் உள்ள ரஷ்ய தயாரிப்பு சீக்கருக்கு பதிலாக இதை பயன்படுத்த உள்ளது டிஆர்டிஓ.ஏற்கனவே நமது சீக்கரை பயன்படுத்தி பிரம்மோஸ் இரு முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் 300கிமீ தாக்கும் தொலைவு தற்போது 450கிமீ ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது.விரைவில் 600கிமீ இலக்கை தாக்கும் அளவுக்கு மாற்றியமைக்கப்படும்.
மேலும் 2 வருடத்திற்குள் பிரம்மோசின் வேகம் மாக் 3ல் இருந்து மாக் 5ஆக மாற்றப்பட உள்ளது.மேலும் தாக்கும் தொலைவு 800ஆக அதிகரிக்கப்படும் என பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் இயக்குநர் டாக்.சுதிர் அவர்கள் கூறியுள்ளார்.
தற்போது பிரம்மோசில் 60% இந்திய பாகங்கள் உள்ளன.இவற்றை 80% ஆக உயர்த்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆரம்ப கட்டத்தில் பிரம்மோஸ் இலக்கை 25மீ ஆர துல்லியத்துடன் தாக்கியது.அதாவது இலக்கை சுற்றி 25மீக்குள் தாக்கும்.அது பிறகு 10மீ ஆக குறைக்கப்பட்டு தற்போது கிட்டத்தட்ட மிகத்துல்லியத்துடன் தாக்கும்.
பிரம்மோசை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் வெற்றிகரமாக இன்னும் ஏற்றுமதி செய்யப்படவில்லை.பல நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணை பெற முயற்சி செய்து வருகின்றன.
பிரம்மோஸ் 2 அதாவது ஹைப்பர் சோனிக் ஏவுகணை மேம்பாடு தற்போது நடைபெற்று வருகிறது.இந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணைக்கு டிஆர்டிஓ மேம்படுத்தி வரும் scramjet engine பொருத்தப்படும்.இது மாக் 10 வேகத்தில் செல்லும்.