லான்ஸ் நாய்க் மோகன் நாத் கோஸ்வாமி எல்லையற்ற வீரம்

  • Tamil Defense
  • September 3, 2020
  • Comments Off on லான்ஸ் நாய்க் மோகன் நாத் கோஸ்வாமி எல்லையற்ற வீரம்

லான்ஸ் நாய்க் மோகன்நாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரத்தையும்,புகழையும் ,தைரியத்தயும் கொண்ட வீரவரலாறு.காஷ்மீரின் நடைபெற்ற மூன்று முக்கிய தீவிரவாத எதிர்ப்பு ஆபரேசன்களிலுமே தன்னார்வமாக இணைந்தவர். சாவின் முகத்தை நேருக்கு நேராக நின்று பார்த்து சிரித்தவர். சாவை தன்னை ஆக்கிரமிக்க அனுமதித்தது அவரே அன்றி வேறெதுவுமில்லை.

லான்ஸ் நாய்க் மோகன் அவர்கள் இந்திய இராணுவத்தின் பாராச்சூட் ரெஜிமென்டை சார்ந்த வீரர் ஆவார்.செப்டம்பர் 2015ல் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாத எதிர்ப்பு ஆபரேசனில் வீரமரணம் அடைந்த  மோகன் நாத் அவர்களுக்கு அமைதி காலத்தில் வழங்கப்படும் உயரிய விருதான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.

இந்தியாவின் உத்ரகண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தில் உள்ள அழுகு நிறைந்த இந்திரா நகர் கிராமத்தில் பிறந்தார் லான்ஸ் நாய்க் மோகன் அவர்கள்.லான்ஸ் நாய்க் மோகன் அவர்களின் தந்தையும் ஒரு இராணுவ வீரரே ஆவார்.அஸ்ஸாம் ரைபிள்சில் பணியாற்றிய அவரது தந்தை இறந்த பொழுது லான்ஸ் நாய்க் கோஸ்வாமி வெறும் சிறு வயது இளைஞனே.

2002ல் தன்னார்வமாக கமாண்டாே பிரிவில் இணைந்தார் மோகன் அவர்கள்.காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு ஆபரேசன்களில் தன்னார்வமாக முன்னின்று போராடுபவர் என அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.

2002ல் பாரா கமாண்டாே படையில் தன்னார்வத்துடன் இணைந்த அவர் அவரது குழுவில் மிகச் சிறந்த வீரர்.உலகின் சிறந்த படை கமாண்டாே வீரர்களுக்கு சிறிதும் சளைத்தவர் அல்ல என இராணுவத்தின் வடக்கு பிரிவு செய்தி பிரிவு தலைமை புகழாரம் சூட்டியது.

அவர் வீரமரணம் அடைவதற்கு முன் 11 நாட்களில் நடைபெற்ற மூன்று என்கௌன்டர்களிலுமே கலந்து கொண்டார்.அந்த மூன்று ஆபரேசன்களில் மொத்தம் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.மற்றும் ஒரு தீவிரவாதி உயிருடன் பிடிக்கப்பட்டான்.

முதல் ஆபரேசன்

2015 ஆகஸ்டு 23ல் ஹேன்ட்வாராவின் குர்முர் பகுதியில் முதல் ஆபரேசன் நடந்தது.வீரமுடம் தனது வீரர்களுடன் லான்ஸ் நாய்க் மோகன் அவர்கள் போரிட்டார். அந்த ஆபரேசனில் பாக்கைச் சேர்ந்த மூன்று முக்கிய லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.லான்ஸ் நாய்க் கோஸ்வாமி ஒரு தீவிரவாதியை வீழ்த்தினார்.மேலும் காயமடைந்த தனது சகா கேப்டன் மேக்ரா இடைவிடாத தோட்டக்கள் மழையிலும் சென்று மீட்டார்.

இரண்டாவது ஆபரேசன்

அடுத்த இரண்டே நாட்களில் நடைபெற இருந்த அடுத்த என்கௌன்டரில் லான்ஸ் நாய்க் கோஸ்வாமி தன்னார்வமாக மீண்டும் இணைந்தார்.லிட்டெர் பன்சால் என இந்த ஆபரேசனுக்கு பெயரிடப்பட்டது.ஆகஸ்ட் 26 மற்றும் 27என இரு நாட்கள் தொடர்ந்து இந்த என்கௌன்டர் நடைபெற்றது.கோஸ்வாமி மற்றும் சக வீரர்கள் மேலும் 3 பாக் லஷ்கர் தீவிரவாதிகளை வீழ்த்தினர்.

26 ஆகஸ்டு , ஊடுவிய தீவிரவாதிகளை அழக்க 9வது பாரா படை அழைக்கப்பட்டது.அவர்கள் அந்த அழைப்பிற்காக காத்திருந்தனர்.மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வடக்கு காஷ்மீரில் ,உரி பகுதியில் உள்ள உயர்ந்த இடமான காசி நாக் காட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியிருந்தனர். அவர்களை தேடும் பணியில் இராணுவம் மற்றும் காஷ்மீர் காவல் துறையினர்  ஈடுபட்டிருந்தனர்.25ம் தேதியில் தீவிரவாதிகளை அந்த குழு சுற்றி வளைத்து நெருங்கியிருந்தது.துப்பாக்கிச்சூடு தொடங்கியது. ஒரு தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டான்.  மற்ற நான்கு தீவிரவாதிகள் மலையுச்சி நோக்கி ஓடினர்.அந்த நிலப்பகுதி நடந்து செல்லவே ஏற்றத்தக்க பகுதி அல்ல.மிக கடினமான பகுதி.ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் நன்கு பயிற்சி மட்டுமல்ல , அதிபயங்கர ஆயுதங்களையும் பெற்றிருந்தனர்.

சில நிமிடங்களுக்கு பிறகு, 9வது பாரா படையின் சிறிய குழு அந்த பகுதியில் வானூர்தி வழியாக இறக்கப்பட்டனர்.அதில் லா/நா கோஸ்வாமி அவர்களும் ஒருவர்.எப்போதும் போல அவர் தனது குழுவினைரை கவனமாக பார்த்துக் கொண்டார்.அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளதா எனவும், தேவையான /சரியான ஆயுதங்களை எடுத்து வந்துள்ளனரா என சோதனை செய்து அறிந்தார்.குழுவினரின் பாதுகாப்பில் அவர் எப்போதும் கவனமாக இருப்பார்.அவர் எப்போதும் அமைதியாகவும்,ஆனால் திடத்துடனும் இருப்பார்.

லா/நா கோஸ்வாமி அதிக உயரமானவரல்ல, ஒல்லியான தேகம் மற்றும் திடமான கால்களை கொண்டவர்.அவர் ஒரு சிறந்த மலையேறி.” அவர் அதிக பனிவு மற்றும் அதிக சக்தி கொண்ட மனிதர்” என அவரது கமாண்டிங் அதிகாரி ஒரு முறை குறிப்பிட்டார்.

தீவிரவாதிகளை கடைசியாக பார்த்த இடத்தில் அவரது குழு வான் வழியாக தரையிறக்கப்பட்டது.அந்த இடம் 9000அடி உயரமுள்ள மலைப்பகுதி.அந்த இடத்தை முழுவதும் இராணுவம் மற்றும் காவல்துறை சுற்றி வளைத்திருந்தது.

அந்தக் காட்டில் இராணுவம் ஒரு ரேடியோ அலையை  வழிமறித்தது.அது தீவிரவாதிகள் பாக்கில் உள்ள தனது தலைவர்களிடம் உரையாடும் உரையாடல்.தாங்கள் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுவிட்டதாக தீவிராதிகள் கூறியதை வழிமறித்து கேட்டது இராணுவம்.

அந்த நடக்க இயலாத,உயரமான,கரும் காட்டுப்பகுதியில் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்து வீரர்கள் தீவிரவாதிகளை தேடி முன்னேறினர்.அதற்கு ஒரு எல்லையற்ற பொறுமை மற்றும் கவனம் தேவை.ஆனால் வீரர்கள் இதற்காகவே பயிற்றுவிக்கப்பட்டவர்கள்.அந்த பகுதி முழுவதும் பெரிய கற்பாறைகள் நிறைந்திருந்தன.அதில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம்.வீரர்களை எந்த பக்கம் இருந்து வேனாலும் தீவிரவாதிகள் தாக்கலாம் என்ற நிலை.

ஆனால் நமது 9வது பாரா வீரர்ளுக்கு பிடித்தமான இடம் தான் அது.அந்த கற்பாறைகள் வீரர்களை தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலில் இருந்து காக்கும்.அமைதியாக தேடிக்கொண்டிருந்த வீரர்களின் கண்களில் காலடி தடங்கள் அகப்பட அது ஒரு பெரிய குகைப் பாறைக்கு இட்டுச் சென்றது.லா/நா கோஸ்வாமி வழிநடத்த வீரர்கள் அவர்களை நெருங்கினர்.தீடீரென தீவிரவாதிகள் வீரர்களை நோக்கி சுட,சற்றும் தாமதிக்காமல் வீரர்களும் துப்பாக்கி சத்தம் கேட்ட திசையை நோக்கி சுட்டனர். “Ek koh laga hai”, என லா/நா கோஸ்வாமி ரேடியோவில் தலைமையகத்திற்கு தகவல் கூறினார்.ஆம் ஒரு தீவிரவாதி சுடப்பட்டான்.

தீவிரவாதிகள் பதுங்கியிருந்த குகை அவர்களுக்கு நல்ல பாதுகாப்பாக அமைந்துவிட்டது.சுற்றிலும் பாறை மற்றும் மரங்கள்..அது வீரர்களுக்கு பெரும் சவாலாகவே அமைந்தது.துப்பாக்கி சத்தம் நின்றது.வீரர்கள் அந்த பாறையை சுற்றி தனது நிலைகளை வலுப்படுத்தினர்.தீவிரவாதிகள் வெளியேற வாய்ப்புள்ள அனைத்து வழிகளிலும் வீரர்கள் தங்களை நிலைகளை வலுப்படுத்தினர்.

ரேடியோ சத்தம் நின்றது.வீரர்கள் காத்திருந்தனர்.திடீரென துப்பாக்கி சத்தம் அந்த காட்டை ஆக்கிரமித்தது.இரவு படர்ந்தது.இரவை சாதகமாக்கி தப்பிக்க நினைத்த தீவிரவாதி வீரர்களை நோக்கி சுட்டுக் கொண்டே ஓடினான்.ஆனால் வீரர்கள் அவனை சுட்டுக் கொன்றனர்.

மேலும் தங்களது நிலைகளை வலுப்படுத்திய வீரர்கள் , காத்திருந்தனர்.  மழை இறங்க தொடங்கியது.காயம்பட்ட வீரர்கள் மருத்துவ உதவிகள் செய்து கொண்டனர்.அந்த காடே குளிரில் உறைந்தது.பனியும் படர்ந்தது.ஏற்கனவே மழையில் நனைந்த வீரர்கள் தற்போது பனியில் தோய்ந்தனர்.லா/நா கோஸ்வாமி மற்றும் சக வீரர்கள் நடு இரவில் சிறிது பூரி மற்றும் ஊறுகாய் கொண்ட சிற்றுணவை உண்டனர்.

அடுத்த நாள்,வீரர்கள் அனைத்து தொலை தொடர்பு சாதனைங்களையும் அணைத்துவிட்டு, வெறும் கைகளால் தகவல் பறிமாறிக் கொண்டனர்.குகையை நோக்கி முன்னேறினர் வீரர்கள். தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட, கடும் சண்டை தொடங்கியது.பாறைகளை துப்பாக்கி தோட்டங்கள் பதம் பார்த்தன. தீவிரவாதிகளும் குளிர்,பசியால் சக்தி இழந்துவிட்டிருந்தனர்.நான்கு நாட்கள் இந்த கடுமையான நிலப்பகுதில் நடந்து ஊடுருவியிருந்தனர்.மேலும் இப்போது அவர்கள் வீரர்களிடம் மாட்டிக் கொண்டனர்.

ஒரு தீவிரவாதி வேகமான வீரர்களை நோக்கி சுட அவனை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.தற்போது வீரர்கள் இரண்டு இரண்டு குழுக்களாக பிரிந்து அந்த குகை வாயிலை அடைந்தனர்.

இரு வீரர்கள் மிளகாய் கேன் ஸ்பிரேயுடன் குகை வாயில் நோக்கி செல்ல லா/நா கோஸ்வாமி குழு  அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியது.தற்போது மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது.

உள்ளே இருந்த ஒரு தீவிரவாதியையும் உயிரோடு பிடிக்க முயற்சித்தனர்.” உன் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடை நாங்கள் உன்னை கொல்ல மாட்டோம்.நீ தொடர்ந்து சண்டையிட விரும்பினால் அந்த குகையை விட்டு நீ உயிரோடு வரமாட்டாய் ” என அந்த தீவிரவாதியை எச்சரிக்கை செய்து சரணடைய கோரினர்.

குளிர், ஈரம்,பசி என துவண்டு போயிருந்த அந்த தீவிரவாதி சரணடைந்தான்.வீரர்கள் அவர்களிடம் கடைசியாக மீதமிருந்த உணவும் தண்ணீரும் அவனுக்கு அளித்தனர். வீரர்கள் வானூர்தியை வரவழைத்து தங்கள் தளத்திற்கு திரும்பினர்.

ஆபரேசன் சுட்சல்யார்

அடுத்த ஆறு நாட்களுக்கு பிறகு செப்டம்பர் 2 அன்று மீண்டும் தீவிரவாத  எதிர்ப்பு ஆபரேசனுக்கு 9வது பாரா படை வீரர்கள் அழைக்கப்பட்டனர்.அதே பகுதியில் நடைபெற இருந்த அந்த ஆபரேசனுக்கு லா/நா கோஸ்வாமி தயாரானார்.இராணுவம் அந்த பகுதியை ஏற்கனவே சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தது. குப்வாராவின் சோகல்வாரி கிராமத்தின் மலைச் சரிவில் தீவிரவாதிகள் நடமாட்டம் தென்படுவதாக அவர்களுக்கு தகவல் கிடைத்திருந்தது.

அந்த அந்தி பொழுதில் கிட்டத்தட்ட 100 கமாண்டோ வீரர்கள் வரை அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர்.லா/நா கோஸ்வாமி ,ஹவில்தார் மகேந்திர சிங் அவர்களுடன் இணைந்து கொண்டார்.

இது லா/நா கோஸ்வாமி அவர்களின் மூன்றாவது ஆபரேசன்.அவர் அப்போது தான் தனது சிறிய விடுமுறையைக் கழித்திருந்தார்.எனவே அவர் ஆபரேசனுக்கு செல்ல விரும்பினார்.அந்த இடத்தை அடைந்த வீரர்கள் அங்கு நிறைய தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என ஊகித்தனர்.அவர்கள் கண்முன்னே இருப்பது பெரிய மலைப் பகுதிகள்.சரிவான பகுதி.கீழே அடர்தியான காடு.அந்த காடு டியோடார்,சினார்,ஸ்புருஸ்,பிர்ச் மற்றும் ஜீனிப்பர் இடங்கள் வரை நீண்டது.குறுக்கும் நெடுக்குமாக நீண்ட சரிவான மலைப்பகுதி.

நல்ல பகல் பொழுதில் கூட தீவிரவாதிகள் எளிதில் மறைந்து கொள்ள இயலும் படியான இடம்.வீரர்கள் தங்களுக்கே உரித்தான அமைதியுடன் கூட எச்சரிக்கையுடன் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.இரவு சூழ்ந்தது.

இரவு 8மணி அளவில் ,காட்டின் உட்பகுதியில் கமாண்டோ வீரர்கள் சத்தத்தை கேட்டனர்.அது அவர்களுக்கு 100மீ முன்புறத்தில் இருந்து வந்தது.

“Movement,” என ரேடியோ அதிர்ந்தது.

உடனே ஒரு கமாண்டோ வீரர்களை நோக்கி  “Tham! (நில்லுங்க)” என கூறினார்.

தீவிரவாதிகள் இராணுவத்தின் மீது கடுமையாக தாக்கினர்.மூன்று இராணுவ வீரர்கள் குண்டடி பட்டு கீழே விழுந்தனர்.லா/நா கோஸ்வாமி சற்றும் தாமதிக்காமல் முன்னே சென்று தீவிராவாதிகளை நோக்கி சுட்டவாறே காயம்பட்ட வீரரை மீட்டார்.அவர் தாக்கியதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான்.
தீவிரவாதிகளும் லா/நா கோஸ்வாமி நோக்கி சுட்டனர்.அதில் ஒரு குண்டு அவரது வலது கால் தொடையை துளைத்து சென்றது.அவர் திருப்பி தீவிரவாதிகளை நோக்கி சுடும் போது மேலும் ஒரு குண்டு அவரது  அடிவயிற்றை துளைத்து சென்றது.அவர் இரத்த வெள்ளத்தில் மிதந்தார்.துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்றது.கடைசியாக அதிகாலை 3மணிக்கு கடைசி தீவிரவாதியும் கொல்லப்பட்டான்.

அடுத்த சில நிமிடங்களிலேயே சக வீரர்கள் அவரை மலையில் இருந்து கீழே கொண்டு வந்து,அங்கு நின்றிருந்த ஆம்புலன்சில் ஏற்றினர். அவர் ஆம்புலன்சில் ஏற்றப்படுவதற்கு சில நொடிகளுக்கு முன் தான் அவர் கடைசி மூச்சை சுவாசித்திருந்தார்.

இரண்டு தீவிரவாதிகளை கொன்றதற்கும்,தன் உயிரை பொருட்படுத்தாமல் தனது இரு சகாக்கள் உயிரை காப்பாற்றியதற்கும் , மேலும் இரு தீவிரவாதிகளை கொல்ல உதவியதற்கும் அவருக்கு அமைதி காலத்தில் வழங்கப்படும் மிக உயரிய விருதான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.

லா/நா கோஸ்வாமியின் இறுதி வார்த்தகள் “பூமிகா” என்பதே.ஆம் அவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கிறார்.அவர் பூமிகாவை ஒரு மருத்துவராக்க கனவு கண்டிருந்தார்.அந்த ஆகஸ்ட் மாதத்தில் பூமிகாவின் பிறந்த நாளில் அவளை கடைசியாக பார்த்திருந்தார்.அடுத்த டிசம்பருக்கு அவரது மகளை கோவாவிற்கு சுற்றுலா அழைத்து செல்வதாக உறுதியளித்திருந்தார்.ஆனால் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே கோஸ்வாமி வீரமரணம் அடைந்துவிட்டார்.

அவரது மனைவி பாவனா கோஸ்வாமி ” நினைப்பதற்கு கடினம் ஆனால் பூமிக்கும்,சொர்கத்திற்கு நல்லவர்கள் தேவை.அதனால் தான் கடவுள் அவரை அழைத்துக் கொண்டார்” என கண்ணீர் மல்க அழுகிறார்.

அமைதியாய் உறங்குங்கள் வீரரே.