உயிர்கள் வாழ தகுதியற்ற இடத்தை ஏன் இந்திய வீரர்கள் காவல் காக்கின்றனர் !!???

  • Tamil Defense
  • August 23, 2020
  • Comments Off on உயிர்கள் வாழ தகுதியற்ற இடத்தை ஏன் இந்திய வீரர்கள் காவல் காக்கின்றனர் !!???

உயிர்கள் வாழத்தகுதியற்ற ஒரு இடத்தை ஏன் இவ்வளவு உயிர்சேதத்திற்கு பிறகு இந்திய இராணுவம் காவல் காக்கிறது என்ற கேள்வியும் சேர்ந்து எழுகிறது.

தனித்து இருக்க வேண்டிய 20,000 அடி உயரத்தில உள்ள சியாச்சின் கிளாசியர் உலகத்தின் உயரமான போர்முனையாக கருதப்படுகிறது.உலகின் அதிகம் இராணுவ மயமாக்கப்பட்ட இடங்களுள் சியாச்சினும் ஒன்று.

இயற்கை இடர்பாடுகள்,உடல்நல குறைபாடு முதல் பாகிஸ்தான் ஊடுருவல் பிரச்சனை என அனைத்து வித பிரச்சனைகளையும் தாங்கி ,கடந்து இந்திய இராணுவ வீரர்கள் சியாச்சினை கண்ணைப் போல பாதுகாத்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இது அனைத்தும் எளிதாக கிடைத்துவிடவில்லை அல்லது இன்று வரை எளிதாக மாறிவிடவில்லை.பயங்கர பொருள் செலவிலும் ,உயிர் சேதத்திலும் சியாச்சினை இந்திய இராணுவம் காவல் செய்கிறது.

சியாச்சினை பாதுகாக்க இந்திய அரசு நாளொன்றுக்கு 5 முதல் 7 கோடி ரூபாய்களை செலவிடுகிறது. மைனஸ் 60 டிகிரி
குளிர் வரை குறைந்து எலும்பை ஊடுருவி செல்ல வல்ல இடங்களில் கூட 3000க்கும் மேற்பட்ட வீரர்கள் பணி செய்கின்றனர்.

போரில் இந்திய இராணுவம் இழக்கும் வீரர்களை காட்டிலும் பல மடங்கு வீரர்களை இந்திய சியாச்சினில் இழந்துள்ளது.1984ல் முதலில் வீரர்களை களமிறக்கியது.2016ம் ஆண்டு வரையிலான தகவல் படி சுமார் 8000 வீரர்களை நாம் சியாச்சினில் இழந்துள்ளோம்.கார்கில் போரில் கூட நாம் 527 வீரர்களை இழந்தோம்.

எதிரிகளின் தோட்டாக்களை விட இங்கு இயற்கை கொடியது.இரக்கமே இல்லாத குளிர்,புதைபனி, ஹைபர்தெர்மியா , கொடூரமான காலநிலை,பனிச்சரிவு என வீரர்களின் எதிரிகளின் பட்டியல் நீள்கிறது.

சியாச்சின் அடிவார முகாமில் அடிப்படை பயிற்சி பெற்று மேலே முன்னனி நிலைகளுக்கு சென்று தனது பணியை முடித்து கீழே வரும் வீரர்கள் தங்களது எடைகளை 10கிகி வரை இழக்கின்றனர்.

ஏன் ? இவ்வளவு கடினத்திலும் நாம் சியாச்சினை பாதுகாக்கிறோம்?

1948 முதல் இந்தியா-பாக் போருக்கு பிறகு 1949ல் கராச்சி ஒப்பந்தம் படி போர்நிறுத்த கோடு ஏற்படுத்தப்பட்டது.இந்த ஒப்பந்தம் படி , ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த கோடு NJ 9842 என்ற இடம் வழியாக சென்று வடக்கு கிளாசியர் வரை செல்கிறது.அந்த பகுதிகள் குறித்து அப்போது யாருக்கும் அவ்வளவு விசயங்கள் தெரிந்திருக்கவில்லை.அதன் பிறகு 1972 சிம்லா ஒப்பந்தம் இந்த கோட்டை எல்லை கட்டுப்பாட்டு கோடாக ஆக்கியது.ஆனால் சியாச்சின் எல்லை (பிரச்சனை) அதில் விவாதிக்கப்பட்டிருக்கவில்லை.

சிம்லா ஒப்பந்தத்திற்கு பிறகே சியாச்சினை பாக் படைகள் பிடித்து வைத்திருப்பது இந்தியாவிற்கு தெரிந்திருந்தது.மேலும் அதிஉயர் போர் கருவிகள் வாங்கி முழு கிளாசியரையும் பாக் கட்டுப்பாட்டில் கொண்டு வர உள்ள திட்டத்தை இந்தியா அறிந்து கொண்டது.

பாகிஸ்தானியர்களை விரட்ட இரு பிளாட்டூன் இந்திய வீரர்களை சால்டாரோ ரிட்ஜ் வழியாக அனுப்பியது இராணுவம்.கிளாசியரை கைப்பற்றி முக்கிய பாக் நிலைகளையும் கைப்பற்றுவது தான் திட்டம்.அதே போலவே திட்டம் நிறைவேற்றப்பட்டது.(இது குறித்து ஏற்கனவே நமது இணையத்தில் எழுதி உள்ளேன்)

1984 முதல்இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல்டிஸ்தான் மற்றும் சீனா ஆக்கிரமிப்பு சாக்ஸ்கம் சமவெளியையும் பிரிக்கும் இடமாக சியாச்சின் உள்ளது.அது நமது கட்டுப்பாட்டில் உள்ளது.இதனால் இரு எதிரி நாட்டு இராணுவங்கள் அந்த பகுதியில் இணைந்து செயல்படுவது தடுக்கப்பட்டுள்ளது.போர் காலத்திலும் அதுவே.அதாவது அந்த இடம் இராணுவப் பார்வையில் மிகமுக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய இராணுவ வீரர்கள் தன்னுயிர் ஈந்து தூண்கள் போல சியாச்சினில் இருக்கும் வரை லாடாக் மற்றும் காஷ்மீரை இரு நாடுகளும் இணைந்து கைப்பற்ற முடியாது.

வீரர்களுக்கு வீரவணக்கம்