
நடுவானிலேயே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் திறன் இன்றைய நவீன போர்முறையில் மிக முக்கியமான இடம் பிடிக்கிறது, இதனை IFR – In Flight Refuelling அல்லது AAR – Air to Air Refuelling என அழைப்பர்.
போர் விமானங்கள் நடுவானிலேயே எரிபொருள் நிரப்பி கொள்வதன் மூலமாக, வழக்கமாக எரிபொருள் நிரப்பி கொள்ள தளத்திற்கு திரும்பி செல்வது,
தரை இறங்கி எரி பொருள் நிரப்பி விட்டு, மேலெழுந்து திரும்பவும் போர் முனைக்கு வருவது போன்ற காலவிரயம் தவிர்க்கப்படும். இத்தகைய பிரச்சினைகளை டேங்கர் விமானங்கள் தவிர்க்கின்றன.
டேங்கர் விமானங்கள் எரிபொருள் நிரப்ப இருவகையான அமைப்புகளை பயன்படுத்துகின்றன,
1) Probe and Drogue system
2) Flying boom system
PROBE & DROGUE SYSTEM:
இதில் விமானத்தின் இறக்கைகளில் இருந்து இரு வளையும் தன்மை கொண்ட குழாய்கள் வெளிவந்து கூடை போன்ற அமைப்பிலான Drogue வழியாக எரிபொருள் நிரப்ப உதவும்.
ஆனால் இந்த குழாய்கள் வளையும் தன்மை கொண்ட காரணத்தால் காற்றில் ஆடியபடி இருக்கும் ஆகவே எரிபொருள் குழாயை இணைக்க சிறிது கஷ்டம். ஆனால் இந்த முறையை பயன்படுத்தி ஒரு நேரத்தில் இரு வானூர்திகளுக்கு எரிபொருள் நிரப்ப முடியும்.
FLYING BOOM SYSTEM:
டேங்கர் விமானத்தின் பின்பகுதியில் ஒரு நீண்ட கடினமான குழாய் (PIPE) போன்ற அமைப்பு இருக்கும், எரிபொருள் நிரப்புகையில் இது நீண்டு வெளியே வரும், இது காற்றில் ஆடாது ஆனால் ஒரு விமானத்திற்கு மட்டுமே எரிபொருள் நிரப்ப முடியும்.
சரி இனி இந்திய விமானப்படையின் டேங்கர் விமானங்களுக்கான தேடல் பற்றி பார்ப்போம், கடந்த 2006ஆம் ஆண்டிலேயே 6 டேங்கர் விமானங்களை வாங்க டெண்டர் விடப்பட்டது அதில் ஏர்பஸ் மற்றும் ரஷ்ய இல்யுஷின் நிறுவனங்கள் பங்கேற்றன, இந்திய விமானப்படை ஏர்பஸ் விமானத்தை தேர்வ செய்தது ஆனால் 2010வாக்கில் அதிக விலை காரணமாக இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் மீண்டும் 2012ஆம் ஆண்டில் டெண்டர் விடப்பட்டு மறுபடியும் ஏர்பஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் 2016ஆம் ஆண்டு விலையை காரணம் காட்டி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் மீண்டும் 2018ஆம் ஆண்டில் டெண்டர் விடப்பட்டது, இதில் இல்யுஷின், ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.
இதில் இல்யுஷின் விமானத்தில் PROBUE & DROGUE SYSTEM மட்டுமே உள்ளது, ஆனால் ஏர்பஸ் A330 MRTT மற்றும் போயிங் KC-46 PEGASUS விமானங்களில் PROBE & DROGUE மற்றும் FLYING BOOM ஆகிய இரு அமைப்புகளுமே உள்ளன.
ஆகவே இவற்றில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் அந்த அடிப்படையில் ஏர்பஸ் நிறுவனத்தின் A330 MRTT விமானமே சிறந்த தேர்வாக இருக்கும்.
ஏனெனில் இந்த விமானத்தின் எரிபொருள் கொள்ளளவு சுமார் 111 டன்கள் ஆகும், மேலும் கூடுதலாக 45 டன்கள் சரக்கும் கொண்டு செல்ல முடியும், ஆனால் போயிங் விமானத்தில் இது சற்று குறைவு.
PROBE & DROGUE மற்றும் FLYING BOOM ஆகிய இரு அமைப்புகளை கொண்ட விமானங்களே நமக்கு தேவை காரணம் ஒரே நேரத்தில் மூன்று வானூர்திகள் வரை எரிபொருள் நிரப்பி கொள்ளலாம்,
மேலும் பெரும்பாலான அமெரிக்க விமானங்கள் FLYING BOOM அமைப்பை பயன்படுத்தி கொள்ள வடிவமைக்கப்பட்டு உள்ளன, அந்த வகையில் நமது பி8ஐ மற்றும் சி17 ஆகிய விமானங்களுக்கு இது மிகவும் தேவைப்படும்.
அதை போலவே நமது நட்பு நாடுகளான அமெரிக்கா, இஸ்ரேல், சிங்கப்பூர், ஃபிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளும் அமெரிக்க தயாரிப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆகவே போர் பயிற்சிகள் அல்லது உண்மையான போர் காலத்தில் இணைந்து இயங்கும் சூழல்கள் ஏற்பட்டால் இத்தகைய டேங்கர் விமானங்கள் பெரும் உதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
மேலும் நமது விமானப்படை டேங்கர் விமானங்களில் ரேடார் இணைத்து AWACS விமானங்களாகவும் பயன்படுத்தி கொள்ள விரும்புகிறது அந்த வகையிலும் A330 MRTT விமானம் நல்ல தேர்வாக அமையும் காரணம் இஸ்ரேலின் உதவியோடு இதனை மாற்றியமைத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
தற்போது இந்திய விமானப்படைக்கு மத்திய அரசு மீண்டும் அதிக விலை போன்ற காரணங்களை சுட்டு காட்டுவதால் குத்தகைக்கு எடுக்கவும் யோசனை செய்து வருகிறது, ஆகவே பொறுமையுடன் காத்திருந்து பார்க்க வேண்டும்.