
மத்திய கிழக்கில் பதற்றங்களை குறைக்கும் வகையில் மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க சமாதான ஒப்பந்தம் நிறைவேறி உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையேயான சுமார் 72 ஆண்டு கால பகையுணர்வு நேற்றுடன் மறைந்துள்ளது.
இதன்படி இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே முழு அளவிலான அரசாங்க உறவுகள் துவங்கப்பட உள்ளது, மேலும் இரு நாடுகள் இடையே நேரடி விமான போக்குவரத்து சேவையும் தொடங்கப்பட உள்ளது.
மருத்துவம், பாதுகாப்பு, சுற்றுலா, எரிசக்தி, தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயலாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு, அபுதாபி பட்டத்து இளவரசர் மொஹம்மது பின் ஸாயத் அல் நஹ்யான் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இருநாட்டு உறவுகளும் மேம்படுவதோடு மட்டுமின்றி இருநாட்டு மக்களிடையேயும் நெருக்கம் அதிகரிக்கும் என கூறியுள்ளனர்.
கடந்த 1979ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் எகிப்து, பின்னர் கடந்த 1994ஆம் ஆண்டு ஜோர்டான் ஆகியவை சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு முழு அளவில் அரசாங்க உறவுகளை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்துள்ளது, விரைவில் சவுதி அரேபியா இந்த பட்டியலில் இணைந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை காரணம் ஏற்கனவே பலமான மறைமுக உறவுகள் இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா இடையே உள்ளது குறிப்பிடத்தக்கது.