பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி மூலமாக 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட நினைக்கும் இந்தியா !!

  • Tamil Defense
  • August 4, 2020
  • Comments Off on பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி மூலமாக 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட நினைக்கும் இந்தியா !!

பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி மூலம் வருகிற 2025ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ருபாய் அளவுக்கு வருமானம் ஈட்ட இந்தியா இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த போகும் முக்கிய துறைகளில் ஒன்றாக பாதுகாப்பு தயாரிப்பு துறையை பார்க்கிறது.

இதன்படி “பாதுகாப்பு தளவாட தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி கொள்கை வரைவு 2020” (DEFENCE MANUFACTURING & EXPORT POLICY 2020) வரைவின்படி அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 35,000 கோடியை பாதுகாப்பு ஏற்றுமதியில் மட்டுமே பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது, இந்த 35,000 கோடி மொத்த இலக்கின் ஒரு பகுதியாகும்.

அடுத்த 5 ஆண்டுகளில் முப்படைகளும் சுமார் 130பில்லியன் (6லட்சத்து 50 ஆயிரம் கோடிகள்) அமெரிக்க டாலர்கள் அளவிலான பணத்தை செலவழிக்க உள்ளன.

இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு ஒரு அதிஉயர் திறன் வாய்ந்த, ஸ்திரதான, வலிமை மிக்க பாதுகாப்பு தயாரிப்பு தொழில்துறையை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன்மூலம் உள்நாட்டு தேவைகளில் தன்னிறைவு, ஏற்றுமதியிலும் சாதிப்பது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உயர்த்துவதில் பாதுகாப்பு தயாரிப்பு துறை மிக முக்கியமான பங்கு வகிக்கும் என நிதித்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.