இந்தியா அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்களை இயக்குவதில் உள்ள சிக்கல்கள் என்ன?

  • Tamil Defense
  • July 9, 2020
  • Comments Off on இந்தியா அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்களை இயக்குவதில் உள்ள சிக்கல்கள் என்ன?

தற்போது அமெரிக்கா மற்றும் ஃபிரானஸ் ஆகிய நாடுகள் தான் அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்களை இயக்கி வருகின்றன. இந்த இரு நாடுகளும் முறையே 11 மற்றும் 1 அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்களை இயக்கி வருகின்றன.

இந்தியா தனது கடற்படைக்கு இத்தகைய ஒரு விமானந்தாங்கி கப்பலை கட்டி பயன்படுத்தி கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன அவற்றை பற்றி பார்க்கலாம்.

65,000 டன்கள் எடை கொண்ட அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்களில் இ.சி.எம், இ.எஸ்.எம் மற்றும் ஈமால்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வந்துள்ளன இவை அனைத்துமே மின்சக்தியால் இயங்கும் தொழில்நுட்பங்கள் ஆகும். ஆகவே இத்தகைய தொழில்நுட்பங்களால் மின்சக்திக்கான தேவையும் அதிகரிக்கும்.

மேலும் இதை விட சிறிய விமானந்தாங்கி கப்பல்களால் சிறிய அளவிலான விமானங்களை மட்டுமே சுமக்க முடியும் மேலும் அணுசக்தியால் இயங்காத கப்பல்களால் மிக நீண்ட தொலைவுக்கு பயணிக்க முடியாது.

மேலும் இந்தியா சீனா ரஷ்யா ஆகிய நாடுகள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் மற்றும் கட்டுமானத்தில் உள்ள விமானந்தாங்கி கப்பல்கள் அனைத்திலுமே ஸ்கி ஜம்ப் எனப்படும் கட்டமைப்பு முன்பகுதியில் கருக்கும் இது விமானங்களை ஒன்று முழு அளவிலான எரிபொருளுடன் குறைந்த ஆயுதங்களுடன் பயணிக்க அனுமதிக்கிறது அல்லது குறைந்த அளவிலான எரிபொருளுடன் முழு அளவிலான ஆயுதங்களுடன் பயணிக்க அனுமதிக்கிறது, எப்படி பார்த்தாலும் விமானம் அதன் முழு திறனை பயன்படுத்தி கொள்ள முடியாது ஆகவே இத்தகயை கப்பல்களால் ஒரு நாட்டின் சக்தியை ஒரு பகுதியில் நிலைநாட்ட முடியாது.

இனி ஏன் அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்கள் தேவை என பார்க்கலாம்.

அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்களில் அளவற்ற மின்சாரம் தயாரிக்கப்படுவதால் ஈமால்ஸ் உள்ளிட்ட மின்சாரம் சார்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது எளிது, மேலும் இத்தகைய கப்பல்கள் சுமார் 25 ஆண்டுகள் எரிபொருள் நிரப்பாமல் இயங்கும் ஆற்றல் மிக்கவை ஆகும்.

ஆனால் இது சாதாரணமான விஷயம் அல்ல, ஒரு கப்பலுக்கு உள்ளே பயன்படுத்தும் வகையிலான சிறிய அணு உலையை கட்டமைப்பது மிகவும் கடினமான காரியம் ஆகும்.

இதற்கான உலோகங்கள் கதிர்வீச்சு உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில் இருக்க வேண்டும் அதனால் இதற்கான பொருட்செலவும் மிக அதிகமாகும். ஆனால் அரிஹந்த் உள்ளிட்ட அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிகளில் நாம் இதனை வெற்றிகரமாக செய்துள்ளோம்.

அதை போலவே நிலத்தில் சிவிலியின் அணு உலைகளில் கட்டுபாட்டு ராடுகள் புவி ஈர்ப்பு விசையின் சக்தியால் இயங்கும் வகையில் இருக்கும் ஆனால் கடலில் கப்பல் அதிகம் ஆடிக்கொண்டு இருக்கும் ஆதலால் இந்த ராடுகளை சரியாக இயக்கும் வகையில் கருவிகள் வேண்டும். இதுவே நீர்மூழ்கி கப்பலில் இந்த பிரச்சினைகள் இல்லை காரணம் அவை நீருக்கடியில் தான் இருக்கும்.

அதை போல நீராவியில் இருந்து தான் மின்சாரம் தயாரிக்கப்பட வேண்டும் அதற்கு உப்பு அதிகம் நிறைந்த கடல்நீரை வடிகட்டி சுத்தமான நீராக மாற்ற உப்புநீர் சுத்திகரிப்பு அமைப்பு ஒன்று தேவை அதுவும் நாம் ஏற்கனவே செய்துள்ளோம்.

இத்தகமை பிரமாண்ட அணுசக்தியால் இயங்கும் கப்பல்களை கையாளும் திறன் கொண்ட துறைமுகங்கள் மற்றும் கடற்படை தளங்கள் வேண்டும். காரணம் இந்த கப்பல்களை சிவிலியின் துறைமுகங்கள் மற்றும் கடற்படை தளங்களில் நிறுத்துகையில் அவற்றின் அணு உலைகள் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் ஆனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சிவிலியன் மின்சக்தி கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு அந்த மின்சாரம் திருப்பி விடப்படும் மீண்டும் புறப்படுகையில் மின்சாரம் கப்பலுக்கே திருப்பி விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இத்தகைய திறன் கொண்ட பல துறைமுகங்களும் தளங்களும் முதலில் கட்டமைக்கப்பட வேண்டும் இது அதிகம் பொருட்செலவு மிக்க விஷயம் ஆகும்.

மேலும் இத்தகைய கப்பல்களை பராமரிக்க அதிக அளவில் தகுதி வாய்ந்த பணியாளர்களை நல்ல ஊதியம் கொடுத்து பணியமர்த்த வேண்டும்.

கடைசியாக மேற்குறிப்பிட்ட இரண்டு விஷயங்களையும் நமது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களுக்காக நாம் உருவாக்கி வந்தாலும் அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்களுக்கு இவை போதாது என்பது குறிப்பிடத்தக்கது.

2030ஆம் ஆண்டு வாக்கில் இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா 1 அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பலை இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆகவே சீனாவை தள்ளி வைக்க நமக்கும் அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்கள் தேவை என்பதில் ஐயமில்லை.