கேப்டன் விக்ரம் பத்ரா-வீரத்தின் விளைநிலம்

  • Tamil Defense
  • July 7, 2020
  • Comments Off on கேப்டன் விக்ரம் பத்ரா-வீரத்தின் விளைநிலம்

அந்த 1999 ஜூன் மாதம் 19-வது இரவு விக்ரம் பத்ராவுக்கு மட்டுமல்ல,அனைத்து இந்தியருக்கும் மறக்க முடியாத தினமாக அமைந்தது! அந்த குளிர் இரவில், கார்கில் போர் தொடங்கி 5 வாரங்கள் ஆன சூழலில், டிராஸ் செக்டாரில் உள்ள சிகரம் 5140 என்ற மலைப்பகுதி, பாகிஸ்தானியரிடமிருந்து விக்ரம் தலைமை தாங்கிய 13 J&K ரைபில்ஸ் என்ற இந்திய படைப் பிரிவால், வெற்றிகரமாக மீட்கப்பட்டது. மலை யுத்த களத்தில் கிடைத்த ஓர் உன்னதமான வெற்றி அது!

இந்த கடினமான யுத்தத்தில் இந்தியத்தரப்பில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்பது ஆச்சரியத்தைத் தரும் செய்தி! இதற்கு முக்கியக் காரணம், பலம்பூர், ஹிமாசலத்தைச் சேர்ந்த விக்ரமின் மனதில் ஆழப் பதிந்திருந்த, இந்திய ராணுவப்பயிற்சி மையத்தில் முன்னிறுத்தப்படும்
“உன் தாய்த் திருநாட்டின் பாதுகாப்பும், மானமும், நலனும் எப்போதும் முதலில் பேணப்பட வேண்டும். அடுத்து, நீ வழி நடத்தும் படையினரின் மரியாதையும், நலனும், சுகமும் பேணப்பட வேண்டும். உன் நலனும், சுயபாதுகாப்பும் எப்போதும் இறுதியாகவே பேணப்பட வேண்டும்!”
என்ற அற்புதமான வாசகமே என்றால் அது மிகையாகாது. இந்த வெற்றியே, புலிக்குன்று (Tiger Hill) வீழ்வதற்கும், இந்தியா கார்கில் போரில் வெல்வதற்கும் முன்னோடியாய் அமைந்தது.

அடுத்து, 24 வயது நிரம்பிய விக்ரமின் கையில், சிகரம் 4875-ஐ பகைவரிடமிருந்து மீட்கும் பணி தரப்பட்டது. அச்சிகரம் 16000 அடி உயரத்தில், ஏறுவதற்கு மிகுந்த சிரமம் தரவல்ல, சற்றே செங்குத்தான அமைப்புடையது. மலையைச் சூழ்ந்திருந்த பனி மூட்டமும், இருட்டும், சற்று உடல் நலன் சரியில்லாத நிலையில் இருந்த விக்ரமுக்கும், அவனுடைய சகாக்களுக்கும் பெரும் சவாலாக அமைந்தன. ஷெர்ஷா என்ற சங்கேதப் பெயர் கொண்ட விக்ரமின் வருகையை அறிந்து கொண்ட பாகிஸ்தானியர் ஆக்ரோஷ எதிர்த் தாக்குதலில் இறங்கினர். விக்ரமும், அனுஜ் நய்யார் என்ற அவரது நம்பிக்கைக்குரிய மற்றொரு இளம் வீரரும், பகைவரின் தாக்குதலை முன்னின்று எதிர்கொண்டு, தங்கள் சக வீரர்களை ஊக்குவித்து, பகைவரின் பதுங்குக் குழிகளை அழித்து பாகிஸ்தானியரை பின் வாங்க வைத்தனர். வெற்றி மிக அருகில் இருந்தது!

“கேப்டன் விக்ரம் பத்ரா”

கார்கில் போர் என்றாலே விக்ரம் பத்ரா நினைவு அனைவரும் அறிந்த ஒன்று. கார்கில் போரில் இவரின் வீரிய செயல்களால் வேங்கை மலை (Tiger Hill ) உயர்மட்ட பகுதியில் இந்திய இராணுவம் மாபெரும் வெற்றி பெற்றது.
9 செப்டம்பர் 1974 ஆம் ஆண்டு ஹிமாச்சலப்பிரதேஷில் பிறந்த இவர், 1996ஆம் ஆண்டு இந்தியா இராணுவத்தில் லெப்டினன்ட்டாக இணைந்தார். பின்பு 13 ஜம்மு & காஷ்மீர் ரைபிள் படைப்பிரிவில் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார்.
1999 ஆம் ஆண்டு கார்கில் போர் தொடங்கி 5 நாட்களுக்குப்பின் பாக்கிஸ்தான் வீரர்களின் பிடியில் சிக்கிய Tiger Hill பகுதியை மீட்குமாறு விக்ரம் பத்ரா படையினருக்கு ஆணை வந்தது. இதை தொடர்ந்து, எவ்வாறு தாக்குதலை தொடங்குவது என்ற விவாதத்தில் தன் வாதத்தை முன்வைத்த விக்ரம், பாக்கிஸ்தான் வீரர்களை இடதுபுறம் இருந்து அதிர்ச்சியூட்டும் வண்ணம் தாக்குதலை தொடங்கலாம் என்றார். இதில் விருப்பமில்லாத மூத்த இராணுவ அதிகாரிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இளம் வீரரான விக்ரம், தான் வகுத்த வியூகத்தின் மூலம் படையை நகர்த்தி பாக்கிஸ்தான் வீரர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்தார்.
Tiger Hill பகுதியை மீட்டபின்பு “என் மனம் இன்னும் அதிகம் கேட்கிறது” (I want more) என்ற வாக்குமூலத்தை வெளியிட்டார்.
9 நாட்களுக்கு பிறகு, பாக்கிஸ்தான் வீரர்கள் பிடியில் சிக்கிய மற்றொரு பகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டபொழுது, அதிக பனிமூட்டம் காரணமாக நிலைமை மொத்தமாக மாறியது. திடீர் என எதிரிகளுடன் மிக அருகில் துப்பாக்கிசூடு தொடங்கியது. இந்த துப்பாக்கிசூட்டில் விக்ரம் 3 பாக்கிஸ்தான் வீரர்களை கொன்று, தானும் காயமுற்று வீரமரணம் அடைந்தார். உயிருக்கு போராடும் நிலையில் அவர் இறுதியாக கூறியது “துர்கா அன்னைக்கே வெற்றி” (“Jai Mata Di”). தன் காதலியுடன் திருமணம் நடக்கவிருந்த சில நாட்களுக்கு முன்னதாகவே வீரமரணம் அடைந்தார்.
கார்கில் போரில் 2 பகுதிகளை வெற்றிகரமாக மீட்டு, இறுதி மீட்பு நடவடிக்கையில் போராடி வீரமரணம் அடைந்த விக்ரம் பத்ராவிற்கு இந்தியா இராணுவத்தின் மிக உயரிய விருதான “பரம்வீர் சக்ரா” வழங்கப்பட்டது.
விக்ரம் பத்ரா நினைவாக அவரால் மீட்கப்பட்ட பகுதிக்கு “பத்ரா முனை” (Batra Top) என பெயர்சூட்டப்பட்டுள்ளது.

விக்ரம் பத்ராவின் பொன்மொழிகள்:

“நான் இந்திய கோடியை ஏற்றிவிட்டு வருவேன் அல்லது அதே கொடியால் சுற்றப்பட்டு வருவேன்”

போருக்கு செல்லும்முன் தன் பெற்றோர்களுக்கு விக்ரம் பத்ரா எழுதியது.

“என் மனம் இன்னும் அதிக வெற்றிகளை கேட்கிறது”

முதல் மீட்பு நடவடிக்கையில் வெற்றி பெற்றவுடன் கூறியது.

“எங்களை பற்றி கவலைகொள்ள வேண்டாம்,. தாங்கள் பத்திரமாக இருங்கள்”

நாட்டு மக்களுக்கு விக்ரம் பத்ரா கூறியது.
“துர்கை அன்னைக்கே வெற்றி”
உயிர் பிரியும் தருணத்தில் விக்ரம் பத்ரா கூறியது.

எதிரியின் குண்டு வெடிப்பில் கால்களில் காயமுற்ற தனது சகா ஒருவரை மீட்டெடுத்து வர, விக்ரம் பதுங்குக் குழியை விட்டு வெளியேறியபோது, அவருடன் இருந்த சுபேதார், தனக்குக் கட்டளை இடுமாறு மன்றாடியும், விக்ரம், “உனக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனக்கு வழி விட்டு விலகி நில்!” என்று கூறிவிட்டு ஓடியபோது, பகைவன் ஒருவனின் துப்பாக்கி ரவை விக்ரமின் மார்பை துளைத்தது.

யுத்த களத்தில் வீர மரணம் எய்திய விக்ரம் வெளிப்படுத்திய வீரத்திற்கும், மனத்திண்மைக்கும், மிகச் சிறந்த தலைமைப் பண்புக்கும் அவருக்கு, பின்னாளில் பரம்வீர் சக்ர விருது வழங்கப்பட்டது. அவரது சகா அனுஜ் நய்யாரும் அந்த யுத்தத்தின் முடிவில் வீர மரணம் அடைந்தார். அவருக்கு மஹாவீர் சக்ர விருது வழங்கப்பட்டது.

இளம் வயதிலேயே பேரும் புகழும் (வீர மரணமும்) அடைந்த விக்ரம், அனுஜ் போன்றவர்கள் தங்கள் பணியை தேசியக் கடமையாகவும், வரமாகவும் எண்ணுவதால் தான், நம்மைப் போன்றோர் பயமின்றி, சுகமாக வாழ முடிகிறது !!! விக்ரமின் தாயார் ஒரு IAS நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட “கேப்டன் விக்ரம் பத்ரா கார்கில் போரில் கைப்பற்றிய சிகரங்கள் யாவை ?” என்று கேட்கப்பட்டதை நினைவு கூர்ந்து, “தாய்நாட்டை அனைத்திற்கும் முன்னால் வைத்த ஒரு தவப்புதல்வனைப் பெற்றது எங்களுக்குக் கிட்டிய ஓர் அரிய பாக்கியம்!” என்று தன் பெரும் சோகத்திலும் பெருமிதம் கொள்கிறார்!

கார்கில் போரின்போது ராணுவத் தலைவராக இருந்த ஜெனரல் மாலிக், விக்ரமைப் பற்றி “இந்தப் பையன் கார்கில் போரிலிருந்து உயிரோடு மீண்டிருந்தால், சரியாக 15 வருடங்களில் என் பதவியை வகிக்க வேண்டியவன்!” என்று கூறியதை பார்க்கும்போது, விக்ரம் என்ற மாவீரனின், ஒரு தலைவனின் இழப்பின் தாக்கத்தை புரிந்து கொள்ள இயலும்!

விக்ரம் பத்ராவின் சிலை பலாம்பூரின் முக்கிய சந்திப்பை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நேர் எதிரே மற்றொரு சிப்பாயின் – மேஜர் சோம்நாத் ஷர்மாவின் — இந்தியாவின் முதல் பரம்வீர் சக்ர விருதை வென்றவரின் – சிலை காணப்படுகிறது. பலாம்பூரைச் சேர்ந்த அவர், 1947-இல் ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் அனுப்பிய கைக்கூலிகளை சிதற அடித்து முடிவில் வீர மரணம் எய்தியவர். அவ்விடத்தை பங்கிட்டுக் கொள்ள விக்ரமை விட ஓர் உன்னதமான ஆத்மா அவருக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை !!!

இந்திய இராணுவச் செய்திகள்