
கார்கில் போரில் அதிரடி நாயகனாக திகழ்ந்தவர் மனோஜ் குமார் பாண்டே.
இவர் 25 ஜூன் 1975 ஆம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் பிறந்தார். இவர் தன் தந்தைக்கு மூத்த மகன்.
இளம் வயதில் குத்துசண்டை மற்றும் உடல் கட்டமைப்பில் சிறந்து விளங்கியவர் மனோஜ் குமார். 1990 ஆம் ஆண்டின் சிறந்த NCC உறுப்பினருக்கான பரிசு பெற்றவர். 1992 ஆம் ஆண்டு இராணுவத்தின் கோர்கா படைப்பிரிவில் இணைந்தார். இராணுவத்தின் நேர்முக தேர்வில் தேர்வாளர் “ஏன் இராணுவத்தில் இணைகிறீர்கள்.?” என்று கேட்டனர், அதற்கு “நான் பரம் வீர் சக்ரா பதக்கம் வெல்ல வேண்டும்” என்று பதில் கூறியுள்ளார். 1997 ஆம் ஆண்டு கேப்டனாக பதவி உயர்ந்தார்.
1999 ஆம் ஆண்டு கார்கில் போர் தொடங்கியதும், Jubar top என்ற மலைப்பகுதியை பாக்கிஸ்தான் வீரர்கள் கைப்பற்றினர். Jubar top அமைந்திருக்கும் புவியியல் அமைப்பு, அந்த பகுதியை மிக முக்கியமானதாக கருத செய்தது. அந்த பகுதி மிக உயர்ந்தும், மற்ற பகுதிகள் தாழ்ந்தும் இருக்கும். எனவே அப்பகுதியை கைப்பற்றினால், சுற்றியுள்ள சில மைல்கள் பரப்பளவிலான பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அப்பகுதியை மீட்கும் நடவடிக்கையில் இராணுவம் கேப்டன் மனோஜ் குமாரை களம் இறக்கியது.கேப்டன் மனோஜ் குமார் தன் படையினருடன் இலக்கை நோக்கி நகர்ந்தனர். இறுதி இலக்கை கைப்பற்ற 3 நிலைகளை கைப்பற்றும் நிலைக்கு கேப்டன் மனோஜ் படையினர் தள்ளப்பட்டனர். முதல் இலக்கில் கனரக ஆயுதங்களுடன் 2 பாக்கிஸ்தான் வீரர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று கேப்டன் மனோஜ் குமார் ஒரு திட்டம் தீட்டினார்.
அத்திட்டத்தின்படி, அந்த இரண்டு வீரர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் அருகில் சென்று, அவர்களை வீழ்த்த வேண்டும். திட்டத்திற்கு தானே முன்வந்து களமிறங்கினார். இலக்கின் அருகே சென்று, அவர்களின் ஆயுதங்களை பறித்து, அவர்களை வீழ்த்தினார். முன்னிருந்த பீரங்கி போன்ற ஆயுதங்களை மனோஜ் உடன் சென்ற இந்தியா வீரர்கள் கைப்பற்றினர்.கேப்டன் மனோஜ் குமாரின் இத்தகைய வீர செயலால், உடனிருந்த வீரர்கள் ஊக்கம் பெற்றனர். கேப்டன் மனோஜ் இரண்டாம் இலக்கையும் வெற்றிகொண்டார். மூன்றாம் இலக்கை நோக்கி நகரும்பொழுது, அவர் தோள்பட்டை பகுதியில் தீவிர காயம் ஏற்பட்டது.
எனினும் அதிகபட்ச ஆற்றலை உபயோகித்து மூன்றாம் இலக்கையும் வென்று முன்னேறினர். இறுதி இலக்கை சென்றடையும் தருவாயில் மனோஜ் குமாரின் கன்னத்தில் எதிரியின் தோட்டா பாய்ந்து முகத்தை சிதைத்தது.
தன் பின் வந்த வீரர்களிடம் “அவர்களை விடாதீர்கள்” என்று கூறிவிட்டு இலக்கு கண்ணில் தெரியும் இடத்தில் மறைவாக அமர்ந்துவிட்டார். மனோஜுடன் இரண்டு வீரர்கள் மட்டுமே துணையாக இருந்தனர். மற்றவர்கள் இறுதி இலக்கை மீட்க முன்னேறி சென்றனர்.
இந்திய வீரர்கள் Jubar top பகுதியை மீட்பதை கண்ணார கண்டு, சிரித்துக்கொண்டே வீர மரணம் அடைந்தார்.
இறந்தபின்பு அவரின் வீரதீரம் காரணமாக இந்திய முப்படைகளின் மிக உயரிய விருதான “பரம் வீர் சக்ரா” வழங்கப்பட்டது. அதனை அவர் தந்தை பெற்றுக்கொண்டார்.
மனோஜ் குமார் பாண்டேயின் பொன்மொழிகள்:
“நான் பரம்வீர் சக்ரா வெல்ல வேண்டும்”
இராணுவ நேர்முக தேர்வில் மனோஜ் குமார் கூறியது.
“நான் செங்குருதி சிந்தும் முன் மரணம் வந்தால், அந்த மரணத்தையும் வெல்வேன்”.
போருக்கு செல்லும் முன் மனோஜ் குமார் சக வீரர்களிடம் கூறியது.
“அவர்களை (பாக்கிஸ்தான் வீரர்களை) விடாதீர்கள்”
முகத்தை குண்டு சிதைத்த நிலையில் மனோஜ் குமார் சக வீரர்களிடம் கூறியது.
“சில இலக்குகள் மிகவும் மதிப்புடையவை. அதில் தோற்றாலும் பெருமையே”
தனது டைரி யில் மனோஜ் குமார் குறிப்பிட்டுட்டுள்ளார்.
-இந்திய இராணுவச் செய்திகள்.