பிரிகேடியர் முகமது உஸ்மான்

உத்ரகண்டின் மாவ் மாவட்டத்தில் உள்ள பிபிபூர் கிராமத்தில் ஜமிலுன் பிபி மற்றும் முகமது பரூக் தம்பதியரின் மகனாய் இந்திய மண்ணில் உதித்தார் முகமது உஸ்மான்.வாரணாசியில் உள்ள ஹரிஷ் சந்திரபாய் பள்ளியில் தனது ஆரம்பகால படிப்பை படித்தார். வளரும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப கிணற்றில் மூழ்கிய சிறுவனை தனது 12 வயதிலேயே குதித்து காப்பாற்றினார்.

பின்காலத்தில் இராணுவத்தில் இணைய ஆர்வம் கொண்டார்.அப்போது ஆங்கிலேயே ஆட்சி நடைபெற்று கொண்டிருந்ததால் அதிகாரியாக ஒரு இந்தியர் படையில் இணைவது சிரமம்.மிகுந்த சிரமங்களுக்கிடையே ராயல் மிலிட்டரி அகாடமியில் இணைந்தார்.1932 ல் இணைந்து பயிற்சி பெற்ற பின்னர் இரண்டாம் லெப்டினன்டாக பிரிட்டிஷ்  இந்திய  இராணவத்தில் எதிலும் இணையாத தனிப்பிரிவாக இருந்த பிரிவில் ( Unattached) 1 பிப்ரவரி 1934ல் இணைந்தார்.அதன் பிறகு மார்ச் 12ல் காமிரோனியன்ஸ் என்ற பிரிவின் முதல் பட்டாலியனில்  இணைக்கப்பட்டார்.

அதன் பிறகு சரியாக ஒரு வருடம் கழித்து, அதாவது மார்ச் 19,1935ல் இராணுவத்தின் 10 பலூச் ரெஜிமென்டில் 5வது பட்டாலியனில் இணைக்கப்பட்டார்.அதே வருடத்தில் பிரிட்டிஷ் இந்திய இராணுவம் வடமேற்கு பகுதியில் நடத்திய முகமது கம்பெயின் போரில் பங்கேற்றார்.நவம்பர் 1935ல் உருது மொழி பெயர்ப்பில் முதல் வகுப்பில்
தேர்ச்சி பெற்றார்.

1936 ஏப்ரல் 30ல் லெப்டினன்டாகவும், அதன் பிறகு 31 ஆகஸ்டு 1941ல் கேப்டனாகவும் பதவி உயர்வு பெற்றார்.ஏப்ரல் 1944ல் தற்காலிக மேஜராக பதவி வகித்தார்.இக்காலத்தில் பர்மியப் போரில் பங்கேற்று  mentioned in dispatches விருது பெற்றார்.அதன் பிறகு ஏப்ரல் 1945 முதல் ஏப்ரல் 1946வரை  10 பலூச் ரெஜிமென்டின் 14வது பட்டாலியனின் கமாண்டராக பணியாற்றினார்.

இந்த சமயத்தில் தான் இந்தியா சுதந்திரம் பெற்றது.பொன் முதல் மாலை வரை இருநாடுகளுக்கும் பங்கு பிரிக்கப்பட்டது.அதே போல இராணுவமும் பிரிக்கப்பட்டது.உஸ்மானின் மொத்த பலூச் ரெஜிமென்டும் பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டது.

பாகிஸ்தானின் தலைவர் அலி ஜின்னா உங்களுக்கு தலைமை தளபதி பதவி தருகிறேன் , பாகிஸ்தானுக்கு வாருங்கள் என அழைத்தார்.உஸ்மான் சிறிது கூட யோசிக்காமல் அவர்களின் அழைப்பை தவிர்த்துவிட்டு இந்திய இராணுவத்தின் டோக்ரா ரெஜிமென்டிற்கு மாற்றலாகி சென்றார்.உஸ்மான் மட்டுமல்ல பல முஸ்லிம் இராணுவ அதிகாரிகள் பாகிஸ்தான் செல்ல மறுத்து இந்திய இராணுவத்திலேயே தொடர்ந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலைமையில் தான் 1947 இந்தியா பாகிஸ்தான் முதல் போர் தொடங்கியது.காஷ்மீரை கைப்பற்ற மறைமுகமாக பதான் என்னும் பழங்குடியினரை அனுப்பியது பாகிஸ்தான்.அதாவது காஷ்மீரை கைப்பற்றி பாகிஸ்தானுடன் இணைப்பது தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை.அப்போது 77 பாராசூட் பிரிகேடின் கமாண்டராக இருந்த உஸ்மான் அவர்களை , காஷ்மீரின் ஜாங்கரில் நிலை கொண்டிருந்த 50வது பாராசூட் பிரிகேடை வழிநடத்த அனுப்பியது இராணுவம்( டிசம்பர் 25,1947).

நமது படைகள் மிகக்குறைவாகவும், எதிரிகள் அதிகஅளவிலும் இருந்ததால் ஜாங்கரில் அவர்களை தடுத்து நிறுத்த முடியாமல் நமது இராணுவம் பின்வாங்கியது.மிர்பூர் மற்றும் கோட்லி சாலைகள் இணையும் மையப்பகுதியில் ஜாங்கர் இருந்ததால் அதை திரும்ப மீட்பது இந்தியப் படைகளுக்கு மிக முக்கியதாகும்.அந்த நாள் பிரிகேடியர் உஸ்மான் அதை திரும்ப மீட்டே ஆவேன் என உறுதி எடுத்தார். மூன்று மாதங்களில் அதை செய்தும் காட்டினார் ஆனால் அதற்கு அவர் அளித்த விலை அவரது உயிர்.

1948ன் ஜனவரி முதல் பிப்ரவரி வரை பாக் படைகள் ஜாங்கர் மற்றும் நௌசேராவில் கடும் தாக்குதல்களை நடத்தின.பிரிகேடியர் தனது படையுடன் வெற்றிகரமாக அவற்றை முறியடித்தார்.ஜாங்கர் மற்றும் நௌசேராவை காப்பாற்றுவது / கைப்பற்றுவது இந்திய இராணுவத்தின் மிக முக்கிய பணியாகும்.இவையிரண்டும் அமைந்திருந்த நிலப்பரப்பு கைப்பற்றும் படைகளுக்கு சாதகமாகும்.

நௌசேராவை காக்கும் போது பிரிகேடியர் உஸ்மான் தன் படையை விட அதிக எதிரி படையை சந்திக்க வேண்டியிருந்தது.கவலை இல்லை வெற்றிகரமாக நௌசேராவை காப்பாற்றினார்.இதில் மட்டும் 1000 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட 1000பேர் காயமடைந்தனர்.இந்தியத் தரப்பில் 33 வீரர்கள் வீரமரணம் அடைந்திருந்தனர்.102 வீரர்கள் காயமடைந்திருந்தன.இதற்காக அவர் “நௌசேராவின் சிங்கம்” என பட்டம் பெற்றார்.

இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் பிரிகேடியர் உஸ்மானின் தலைக்கு 50,000ரூபாய் ( அப்போதயை மதிப்பிற்கு கோடிகளை தொடும்) அறிவித்தது.புகழுக்கும் வாழ்த்துக்கும் மயங்காத பிரிகேடியர் தினமும் தரையில் விரிக்கப்பட்ட பாயில் உறங்குவது வழக்கம். தினமும் தூங்கும் முன் அவர் கூறிய வார்த்தைகள் 1947ன் இறுதியில் தான் பறிகொடுத்த ஜாங்கரை மீட்காமல் நான் உறங்கப்போவதில்லை என்பது தான்.

அப்போதைய லெப்டினன்ட் ஜெனரல் கேஎம் கரியப்பா ( பின்னாளில் பீல்டு மார்சல்) அப்போது தான் மேற்கு கட்டளையக தலைமைப் பொறுப்பை ஏற்று இரண்டு முக்கிய நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார்.ஒன்று பூஞ்ச் நடவடிக்கை மற்றும் மற்றொன்று ஜாங்கரை மீட்டல்.1948 பிப்ரவரியின் கடைசி வாரத்தில் ஜாங்கரை மீட்கும் நடவடிக்கை தொடங்கியது.வடக்கு பகுதி வழியாக 19வது இன்பான்ட்ரி முன்னேற 50வது பாராசூட் பிரிகேடு நௌசேரா ஜாங்கர் பகுதியில் இருந்த மலைப் பிரதேசங்களை கைப்பற்றியது.

ஜாங்கர் பகுதியில் இருந்த எதிரிகள் விரட்டப்பட்டு ஜாங்கர் கைப்பற்றப்பட்டது.இந்தச் சமயத்தில் மே 1948ல் தான் பாக் தனது இராணுவத்தை களமிறக்கியது.பாக் இராணுவம் தொடர்ச்சியாக ஜாங்கர் மீது ஆர்டில்லரி தாக்குதலில் ஈடுபட்டது.எனினும் உஸ்மான் அவர்களின் சீரிய முயற்சியால் ஜாங்கர் முழுமையாக இந்தியக் கட்டுப்பாட்டில் வந்தது.கிட்டத்தட்ட இந்த நேரத்தில் தான் பாகிஸ்தானின் 25 பௌன்டர் மோர்ட்டார் ஷெல் விழுந்து பிரிகேடியர் முகமது உஸ்மான் அவர்கள் வீரமரணம் அடைந்தார்.ஜீலை 3, 1948ல் வீரமரணம் அடைந்த 12 நாள் கழித்து அவருக்கு 36வது பிறந்த தினம்.வெறும் 36 வயதில் நாட்டிற்காக அதிகபட்ச தியாகத்தை தழுவினார்.

அவரது கடைசி வார்த்தைகள் “நான் செல்கிறேன் ஆனால் நாம் போராடி மீட்ட பகுதிகள் எதிரிகளின் கையில் செல்ல விடாதீர்கள்” என்பது தான்.அவரது தேர்ந்த தலைமைப் பண்பு மற்றும் வீரத்திற்காக மகாவீர் சக்ரா பெற்றார்.

அன்று அவரது இறுதி சடங்கில் பிரதமர் நேரு உட்பட கேபினட் அமைச்சர்கள் பங்கேற்றனர்.போரில் உயிர்த்தியாகம் செய்த மிகப் பெரிய அதிகாரி இன்று வரை அவர் தான்.அவரது தியாகம் இன்று பல இளைஞர்கள் இராணுவத்தில் இணைய உந்துசக்தியாக விளங்குகிறது.

பிரிகேடியர் உஸ்மான் அவர்களுக்கு எந்தவித கெட்டபழக்கமும் இல்லை.நாடே எனது குடும்பம் தான் என நினைத்து அவர் திருமணம் ஏதும் செய்துகொள்ளவில்லை.தனது சம்பளத்தை பெரும்பாலும் ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு செலவிட்டார்.

புதுடெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா சுடுகாட்டில் அவரது திருவுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

2012ல் ஹரியானாவில்  இந்திய இராணுவம் அவரது பிறந்த நாளை வெகு விமர்சியாக கொண்டாடியது.

© இந்திய இராணுவச் செய்திகள்