சுபேதார் ஜொகிந்தர் சிங்

1962 போரில் தவாங்கின் பம் லா-வில் சீன வீரர்களைஅடித்து துவம்சம் செய்து இந்தியாவின் மிக உயரிய இராணுவ விருது பெற்ற சுபேதார் ஜொகிந்தர் சிங் அவர்களின் வீரவரலாறு

1962ல் இந்தியா மற்றும் சீனாவிற்கிடையே நடைபெற்ற மாபெரும் தரைப் போர் இந்தியாவிற்கு சிறப்பான போராக அமையாவிட்டாலும் நமது வீரர்கள் ஒவ்வொருவரின் திறனையும் போரில் அவர்கள் காட்டிய வீரத்தையும் மறுக்க முடியாது.அவ்வாறு பல வீரர்கள் தாங்கள் வீடு திரும்பமாட்டோம் எனத் தெரிந்திருந்தும் ” இந்தியாவிற்காக இந்த இடத்தை காப்போம்” என போரிட்ட பலவீரதீர சாகச கதைகள் வரலாற்றில் உண்டு.

அதில் ஒருவர் தான் நமது சுபேதார் ஜொகிந்தர் அவர்கள்.23 அக்டோபர் 1962ல் பம் லா என்னும் ஆக்சில் டொங்பென் லா என்னுமிடத்தில் அவர் இரு முறை சீனத் தாக்குதலை தடுத்து நிறுத்தி முறியடித்தார்.பின்னர் அவர் சீனர்களால் பிடித்து செல்லப்பட்டு அங்கே வீரமரணம் அடைந்தார்.

அவரது வீரதீரம் மற்றும் தலைமைப்பண்பு காரணமாக அவருக்கு இராணுவத்தில் வழங்கப்படும் உயரிய விருதான பரம்வீர் சக்ரா வழங்கப்பட்டது.

வெறும் சொற்ப வீரர்களை கொண்டு சீனப் படையை வென்ற அவரது கதையை இங்கு ஒவ்வொருவரும் தெரிந்துகொண்டாக வேண்டும்.

சுபேதார் ஜொகிந்தர் சிங் ,26 செப் 1921ல் பஞ்சாபின் பரித்கோட் மாவட்டத்தில் மோகா என்னுமிடத்தில் உள்ள மஹ்லா கலன் என்ற கிராமத்தில் பிறந்தார்.அவர் தனது 16வது வயதில் 28 செப்டம்பர் 1936ல் இராணுவத்தின் முதல் சீக் ரெஜிமென்டில் சிபாயாக தனது இராணுவ வாழ்க்கையை தொடங்கினார்.பிரிட்டிஷ் இந்திய இராணுவம் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுடன் போரிட்ட போது பர்மா முனையில் போரிட்டார்.அங்கு அவர் பல பாராட்டுகளை பெற்றார்.சுதந்திரத்திற்கு பிறகு 1948ல் பாகிஸ்தான் போர் தொடுத்த போது அவர் ஸ்ரீநகரில் சீக் ரெஜிமென்டில் பணியாற்றினார்.

1962 போர்

1962 போரில் அதிர்ச்சிக்குள்ளாகும் வண்ணம் இந்திய இராணுவம் அடுத்தடுத்து தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது.கிட்டத்தட்ட அனைத்து போர்முனைகளிலும் இதே போல் செய்திகள் வந்து நாட்டை உலுக்கியது.இந்திய இராணுவத்தின் வடகிழக்கு முன்னனி படை தான அப்போது அங்கு எல்லை பாதுகாப்பு.அந்த படையும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது.அதற்கு காரணமும் இருந்தது.வீரர்களுக்கு தேவையான தளவாடங்கள் முதல் அனைத்து சப்ளைக்களும் அதற்கு கிடைக்கவே இல்லை.எல்லையில் போரிடும் வீரர்களிடேயே முறையான தகவல் தொடர்பு இல்லை.தளவாடங்கள் கொண்டு செல்ல முறையான சாலை வசதிகள் முதற்கொண்டு எதுவுமே இல்லை.சொல்லிக்கொள்ளும் படியாக இயந்திர துப்பாக்கிகளே கூட இல்லை.அரசு இதையெல்லாம் செய்ய தவறியிருந்தது.குறைகளை அடுக்கி கொண்டே போகலாம்.

இரண்டாம் உலகப்போரில் மிகச்சிறப்பாக போரிட்டு உலக அளவில் இந்திய வீரர்கள் பாராட்டபட்ட நிலையில் இருந்த நமது வீரர்கள் இந்த தோல்விகளால் துன்பமடைந்தனர்.இராணுவ உயரதிகாரிகளிடையே குழப்பம்.உத்தரவுகள் முன்னனிக்கு செல்ல தாமதம்.பல இடங்களில் வீரர்கள் இருப்பதை கொண்டே போரிட்டனர்.கிட்டத்தட்ட அதே நிலையில் தான் சுபேதார் ஜொகிந்தர் சிங்கின் படைப் பிரிவும் போரிட்டது.

சுபேதார் ஜொகிந்தர் ஐபி மேடு (IB Ridge) மற்றும் இரட்டை மலை (twin peaks) என்ற இடங்களை காவல் காத்த 20 வீரர்கள் கொண்ட பிளாட்டூன் வீரர்களுக்கு தலைமை தாங்கினார்.

அந்த நேரத்தில் சீனப் படையின் குறிக்கோள் தவாங்கை கைப்பற்றுவது தான்.அதற்கு முன் அவர்கள் கைப்பற்ற நினைத்த இடம் இரட்டை மலைகள்.ஏனெனில் அந்த மலைகளில் இருந்து பல மைல் தூரம் வரை சீனர்களின் நடவடிக்கையை அங்கு நிலை கொண்டிருந்த நமது வீரர்களால் கண்காணிக்க முடிந்திருந்தது.எனவே தவாங்கை கைப்பற்றுவதற்கு முன்னர் இரட்டை மலையை கைப்பற்ற தனது முழு சக்தியுடன் சீனப்படை தயாரானது.23 அக்டோபரில் சீனப்படை மூன்று பகுதியில் இருந்தும் தாக்க தொடங்கியது.முதலில் பம் லா-வில் பணியில் இருந்தது அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் தான்.அவர்களால் சீனர்களின் படையை கட்டுப்படுத்த முடியாமல் போக கடைசியில் சுபேதார் ஜொகிந்தர் சிங் அவர்களிடம் காக்கும்  பொறுப்பு முடிந்தது.அவரும் தனது வீரர்களுடன் தயாராகவே இருந்தார்.

அந்த இரட்டை மலை மிக செங்குத்தானதாக இருந்தது.மேலும் சீனத்துருப்புகளுக்கு மேலே செல்வது மிக கடினமாக இருந்துள்ளது ஏனெனில் மேலே நமது வீரர்கள் கீழே வரும் சீன வீரர்களை தாக்க முடியும்.சுபேதார் ஜொகிந்தர் சிங் இதை நன்றாக பயன்படுத்தி கொண்டார்.இரு முறை சீனர்கள் பெரும் படையுடன்  தாக்க முயன்ற போதும் இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டார்.

அதிகாலை 5.30மணி.23 அக்டோபர் 1972 தவாங்கை கைப்பற்றும் நோக்கில் பம்லா பகுதியில் கடும் தாக்குதலை தொடங்கினர் சீனப் படையினர்.200 வீரர்கள் என்ற வீதத்தில் முன்னனி சீனப் பட்டாலியன் மூன்று முறை அலை அலையாக வந்து தாக்கினர்.சுபேதார் மற்றும் அவரது வீரர்கள் முதல் அலையை அடித்து துடைத்தெரிந்தனர்.கடும் உயிர்ச்சேதத்தை சந்தித்த சீனப் படையினர் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தி பின்வாங்கினர்.ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே மற்றுமொரு அலையாக சீனப்படையினர் தாக்க தொடங்கினர்.அதையும் அடித்து துடைத்தெரிந்தனர் நமது வீரர்கள்.ஆனால் நமது வீரர்களிடம் அதே நேரத்தில் வெடிபொருள்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

உடனே தனது கம்பெனி தலைமையகத்தை சுபேதார் தொடர்பு கொண்டு மேலதிக வெடிபொருள்களை அனுப்ப வேண்டினார்.ஆனால் அந்த நேரத்தில் சீனர்கள் நமது தொலைத் தொடர்பை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.இதனால் அவர்களுக்கு வெடிபொருள்கள் கிடைப்பது சிரமமாயிற்று.

சுபேதார் இந்த முறை காயமடைந்திருந்தார்.அவரது தொடைப்பகுதி காயமுற்றது.ஆனால் அவர் தனது வீரர்களை விட்டு மருத்துவ வசதி பெற மறுத்துவிட்டு அங்கேயே இருந்தார்.அவர்கள் அந்த இரட்டை மலைப்பகுதியை சீனர்கள் கைப்பற்ற விரும்பவில்லை.திறம்பட அதை காத்தனர்.மூன்றாவது அலையாக சீனர்கள் தாக்க தொடங்கினர்.சிறிய இலகுரக துப்பாக்கியை அவரே இயக்கி சீன வீரர்களை சுட்டு வீழ்த்தினார்.
இம்முறை பெரிய அளவில் சீனர்களுக்கு இழப்பு ஏற்பட்டாலும் தொடர்ந்து முன்னேறி தாக்கினர்.வெடிபொருள்கள் முடிந்த நிலையில் அவருடன் மீதமிருந்த வீரர்கள் தங்கள் துப்பாக்கி முனையில் கத்திகளை பொருத்தி சீனர்களை தங்கள் நிலையை விட்டு முன்னே சென்று தாக்க தொடங்கினர்.விரைவிலேயே மேலதிக சீனப்படையினர் அவர்களை தாக்க தொடங்கினர்.இந்த மொத்த நடவடிக்கையிலுமே சுபேதார் மிகச் சிறப்பாக வீரமுடன் செயல்பட்டார்.

“ஜோ போர் சோ நிகல்” என்ற போர்க்குரலே தங்கள் கத்தியால் குத்தப்பட்ட சீனர்களுக்கு பெரும் பயத்தை கொடுத்தது.சுபேதாருடன் இருந்த வீரர்களும் பெரும்பாலும் வீரமரணம் அடைய படுகாயமுற்றிருந்த சுபேதாரை சீனர்கள் போர்க்கைதியாக பிடித்து சென்றனர்.

திபத் பகுதியில் உள்ள சீன போர்க்கைதிகள் கூடாரத்தில் அவர் தனது காயம் காரணமாக வீரமரணம் அடைந்தார்.அவரது தலைசிறந்த தலைமைப்பண்பு மற்றும் போரில் காட்டிய வீரம் காரணமாக அவருக்கு பரம்வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது.

சுபேதார் ஜொகிந்தர் அவர்களுக்கு பரம்வீர் சக்ரா விருது  அளிக்கப்பட்ட தகவல் சீன இராணுவத்தை சென்றடைந்தது.

அதன் பின் மரியாதை நிமித்தமாக சீன இராணுவப் படை அவரது அஸ்தியை முழு இராணுவ மரியாதையுடன் மே 17,1963ல் அவரது பட்டாலியனுக்கு அனுப்பியது.அவரது ஆஸ்தி அடங்கிய தாழி மீரட்டில் இருந்த சீக் ரெஜிமென்டிற்கு வந்தது.
அடுத்த நாள் குருத்வாராவில் சில சடங்கிற்கு பிறகு அவரது மனைவா குர்தியல் மற்றும் மகனிடம் அளிக்கப்பட்டது.

இந்திய இராணுவம் ஐபி ரிட்ஜில் அவருக்கு நினைவு மண்டபம் கட்டியுள்ளது.

வீரவணக்கம்.அனைவரும் கண்டிப்பாக பகிருங்கள்.இது அனைத்து தமிழர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு.