சம்யுக்தா மின்னனு போர்முறை ரேடார்

  • Tamil Defense
  • July 12, 2020
  • Comments Off on சம்யுக்தா மின்னனு போர்முறை ரேடார்

சம்யுக்தா அமைப்பானது ஒரு நடமாடும் மின்னனு போர்முறை தொழில்நுட்ப அமைப்பாகும். இந்தியாவின் மிகப்பெரிய மின்னனு போர்முறை அமைப்பாக கருதப்படும் இது நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பாரத் டைனமிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் இந்திய தரைப்படையின் சிக்னல் கோர் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தயாரிப்பில் உருவானதாகும்.

இந்த அமைப்பை நேரடியாக போர்க்கள பகுதிகளுக்கே கொண்டு சென்று பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பானது பல்வேறு வகையான அலைவரிசைகளையும், மின்காந்த ஸ்பெக்ட்ரம்களையும் திறம்பட கையாளும் ஆற்றல் கொண்டது. இது மின்னனு ரீதியாக தகவல் திரட்டவும், எதிரியின் தகவல் தொடர்பை இடைமறித்து தகவல் திரட்டவும், மின்னனு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தவும் உதவக்கூடிய அமைப்பாகும்.

ஒவ்வொரு சம்யுக்தா அமைப்பும் 145 வாகனங்களை கொண்டிருக்கும், இவை மூன்று தகவல் தொடர்பு மற்றும் இரண்டு மற்றும் பிரிவுகளையும் கொண்டிருக்கும். இத்தகைய ஒரு அமைப்பால் சுமார் 70 முதல் 150கிலோமீட்டர் அளவிலான பரப்பை கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கண்காணிப்பு, பகுப்பாய்வு, இடைமறித்தல், திசை அறிதல், இருப்பிடம் கண்டுபிடித்தல், பட்டியலிடுதல், முதன்மைபடுத்துதல், ஜாம்மிங் போன்ற பணிகளையும் மேற்கொள்ள கூடியதாகும்.

இந்த அமைப்பானது எதிரிகளின் தகவல் தொடர்பையும், கண்காணிப்பு சிக்னல்களையும் முடக்கும் (ஜாம்மிங்) அதே நேரத்தில், நமது அமைப்புகளுக்கு எவ்வித பிரச்சினையும் வராமல் பாதுகாக்க கூடியது என்பது கூடுதல் சிறப்பாகும்.