எதற்கும் தயார் மனப்பான்மையில் சீனாவுக்கு சவால் விடுக்கும் லடாக் ஸ்கவுட்ஸ் ரெஜிமென்ட் !!

  • Tamil Defense
  • July 8, 2020
  • Comments Off on எதற்கும் தயார் மனப்பான்மையில் சீனாவுக்கு சவால் விடுக்கும் லடாக் ஸ்கவுட்ஸ் ரெஜிமென்ட் !!

லடாக் ஸ்கவுடஸ் என்பது இந்திய தரைப்படையின் காலாட்படை ரெஜிமென்டுகளில் ஒன்றாகும்.

இந்தியாவின் இரு பெரும் எதிரிகளும் அணு ஆயுத பலம் கொண்ட நாடுகளுமான சீனா மற்றும் பாகிஸ்தான என இரண்டு வில்லன்களுடைய கண்களும் ஒருசேர உள்ள ஒரே பகுதி லடாக் ஆகும். இப்பகுதியை காப்பது தான் லடாக் ஸ்கவுட்ஸின் பிரதான பணி ஆகும்.

கடந்த 1948ஆம் ஆண்டு லடாக்கில் பாகிஸ்தானியர்கள் ஊடுருவி ஒரு புத்த கோயிலை சூறையாட முயன்ற போது லடாக் மக்கள் அவர்களை விரட்டி அடித்தனர்.

இதனை பற்றி அறிந்த ராணுவம் லடாக் இளைஞர்களை கொண்டு ஜம்மு காஷ்மீர் ரைஃபிள்ஸ் ரெஜிமென்ட்டின் கட்டுபாட்டில் இயங்கும் இரு பட்டாலியன்களை உருவாக்கியது.

இந்த பட்டாலியன்கள் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தோ சீன போரில் சுஷூல், பாங்காங், கல்வான், தவ்லத் பெக் ஒல்டி, ஹாட் ஸ்ப்ரிங் போன்ற பகுதிகளை சிறப்பாக செயல்பட்டு பாதுகாத்தன. இந்த போருக்கு பிந்தைய காலகட்டத்தில் இந்த இரண்டு பட்டாலியன்களும் ஸ்கவுட்ஸ் எனும் அந்தஸ்துடன் லடாக் ஸ்கவுட்ஸ் ஆக ஜம்மு காஷ்மீர் ரைஃபிள்ஸ் ரெஜிமென்ட்டின் கீழ் இயங்க தொடங்கின.

பின்னர் கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் பங்கேற்ற லடாக் ஸ்கவுட்ஸ் அசத்தலாக செயல்பட்டு பாகிஸ்தானியர்களை துவம்சம் செய்து தேசத்தின் எல்லைகளை காத்தது.

கார்கில் போருக்கு பின்னர் 2 பட்டாலியன்களை மட்டுமே கொண்டிருந்த லடாக் ஸ்கவுடஸ் 5 பட்டாலியன்கள் கொண்ட ஒரு தனி ரெஜிமென்ட் (ஒரு ரெஜிமென்ட் எனும் அந்தஸ்தை பெற குறைந்த பட்சம் 5 பட்டாலியன்கள் தேவை) ஆகவே உருமாற்றப்பட்டது.

இந்த ரெஜிமென்ட்டின் வீரர்கள் அனைவருமே லடாக்கியர்கள் ஆவர். அதிக உயரம் கொண்ட பகுதிகளில் வாழ்வதால் இயற்கையாகவே குறைந்த அளவு ஆக்ஸிஜனில் நன்கு மலையேறும் அளவுக்கு திடாகாத்திரமான உடலமைப்பை கொண்டவர்கள் ஆக உள்ளனர்.

மேலும் இவர்களின் வீரம் அளப்பரியது, மலையக போர்முறையில் நன்கு கைதேர்ந்தவர்கள் ஆவர். தற்போது கூட கிழக்கு லடாக்கில் இந்த ரெஜிமென்ட் பல இடங்களில் சீன ராணுவத்திற்கு எதிராக நிலை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.