
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன உதவியுடன் பாகிஸ்தான் கட்டி வரும் அணைக்கு இந்தியா தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது, இத்தகைய செயல்பாடுகள் வரவேற்கத்தக்கது அல்ல என கூறியுள்ளது.
ஒவ்வொரு வாரமும் நடைபெறும் விளக்கத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஶ்ரீவாஸ்தவா ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் முழு பகுதியும் இந்தியாவுக்கு சொந்தமானது, இந்த கட்டுமான பணிக்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்.
சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ள இந்திய பகுதிகளில் பாகிஸ்தான் மேற்கொள்ளும் இத்தகைய கட்டுமான பணிகள் வரவேற்கதக்கது அல்ல என்றும் அவர் கூறினார்.
மேலும் இது குறித்து பாகிஸ்தான் மற்றும் சீன அரசுகளுக்கு ஏற்கனவே இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் ஆஃப்கன் சரக்கு வாகனங்கள் பாகிஸ்தான் (வாகா எல்லை) வழியாக இந்தியா வந்து சரக்குகளை இறக்கி செல்ல பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது பற்றி கேட்கப்பட்ட போது, அனுராக ஶ்ரீவாஸ்தவா அது கண்துடைப்பு என்றார்.
காரணம் இந்தியா வந்து தங்களது பொருட்களை இறக்கி செல்லும் ஆஃப்கன் வாகனங்கள் திரும்பி செல்கையில் இந்தியாவில் இருந்து சரக்குகளை ஏற்றி செல்ல பாகிஸ்தான் அனுமதிப்பது இல்லை, மிக நீண்ட தொலைவு வந்து சரக்கை இறக்கி விட்டு வெறுமனே திரும்பி செல்ல கட்டாயப்படுத்த படுகின்றனர் என்றார்.