பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன உதவியுடன் கட்டப்படும் அணை !!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய அணை கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்த அணை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கட்டப்பட உள்ளது, இதனை டயாமர் பாஷா அணை என அழைக்கின்றனர்.

இந்த அணைக்கட்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான கில்ஜீத் பல்டிஸ்தானில் பாயும் உள்ள சிந்து நதியின் குறுக்கே கட்டப்பட உள்ளது.

நாற்பது வருடங்களில் நான்கு பாகிஸ்தான் பிரதமர்கள் இந்த கட்டுமான பணிகளை துவங்கி வைத்தும் பணிகள் நடைபெறவில்லை ஆனால் இம்முறை சீன உதவியோடு பணிகள் துவங்கி உள்ளன.

1980ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் இந்த அணையை கட்ட உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றிடம் நிதி கேட்டும் பிரச்சினைக்குரிய பகுதி என்பதால் நிதி தர மறுத்து விட்டன.

இப்படி 50 வருடங்களாக நிதி திரட்ட பாகிஸ்தான் பாடுபட்ட நிலையில், 2018ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் பொதுமக்களிடம் நிதி திரட்ட அனுமதி வழங்கியது அப்போதும் போதுமான பணம் சேரவில்லை கடைசியாக சீனாவிடம் கையேந்தி நின்றது, இப்போது இந்த அணை சீன பாகிஸ்தான் பொருளாதார வழிதட திட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.

14 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்த அணை வருகிற 2028ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என கூறப்படுகிறது, அப்போது உலகிலேயே அதிக உயரத்தில் ரோடு ரோலர் வாகனங்களால் காங்கிரீட் இறுக்கப்பட்டு கட்டப்பட்ட அணை இதுவாக தான் இருக்கும். இதனை இம்ரான் கான் தேசிய பெருமித சின்னமாக காண்பித்து வருகிறார்.

ஆனால் இந்த திட்டத்திற்கு சுமார் 50 கிராமங்களின் மக்களும் இந்தியாவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த அணையால் 50 கிராமங்கள் முழுவதும் மூழ்கும் அபாயம் உள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.