இந்திய விமானப்படை அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பான நாசாம்ஸ் மீது ஆர்வம் இல்லை எனவும் மாறாக இந்திய உள்நாட்டு தயாரிப்பான பலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு போதும் என கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டில் இந்திய அரசு தலைநகர் தில்லிக்கு ஒரு வான் பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கு தேடலை தொடங்கிய போது அமெரிக்கா தனது நாசாம்ஸ் 2 அமைப்பை முன்வைத்தது. இந்த அமைப்பின் மதிப்பு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
ஆனால் இந்திய விமானப்படை நாசாம்ஸ் 2 அமைப்பை விட இந்திய தயாரிப்பான பலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு மீது அதிக நாட்டம் காட்டுகிறது, இதற்கு பிரதான காரணமாக அமெரிக்க நாசாம்ஸ் அமைப்பு வானூர்திகளை தாக்குவதற்கு மட்டுமே பயன்படும் எனவும் ஆனால் நமது அமைப்பு நமது பகுதிகளை தாக்க வரும் பலிஸ்டிக் ஏவுகணைகளை தடுக்க உதவும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் நமது அமைப்பில் எதிர்காலத்தில் தேவைக்கேற்ப மாற்றங்களை செய்து பயன்பாட்டு தன்மையை அதிகரித்து கொள்ள முடியும் எனவும் கூறப்படுகிறது.
ரஷ்யாவும் அமெரிக்காவுக்கும் இடையிலான அரசியலில் எஸ்400 மற்றும் நாசாம்ஸ்2 ஆகிய அமைப்புகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன, ஆகவே இரு நாடுகளும் தங்களது ஆயுத அமைப்புகளை போட்டி போட்டு கொண்டு வாங்க வைக்க முயற்சி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.