ரேடார் கண்காணிப்பு ஒப்பந்தத்தை நோக்கி நகரும் ஜப்பான் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் !!

  • Tamil Defense
  • July 14, 2020
  • Comments Off on ரேடார் கண்காணிப்பு ஒப்பந்தத்தை நோக்கி நகரும் ஜப்பான் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் !!

சில ஜப்பானிய ஊடகங்களில் ஃபிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ரேடார் கண்காணிப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன்படி தைவான் நாட்டுக்கு அருகில் உள்ள ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் பகுதி ஒன்றில் ஜப்பான் தனது ரேடார் மையத்தை அமைக்க விரும்புகிறது. இதன் மூலம் அப்பகுதியில் சீன விமானங்களின் நடமாட்டங்களை ஜப்பான் அறிந்து கொள்ள முடியும்.

அதே நேரத்தில் ஜப்பானின் ஒகினாவா பகுதியில் உள்ள ரேடார் மையத்தின் கண்காணிப்பு தகவல்கள் ஃபிலிப்பைன்ஸுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

இதை தவிர ஃபிலிப்பைன்ஸ் ஜப்பானுடைய மிட்ஷூபிஷி நிறுவனத்திடம் இருந்து 3 நகரா ரேடார்கள் மற்றும் 1 நகரும் ரேடார் அமைப்புகளை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது.
இது ஜப்பானுடைய முதல் ராணுவ தளவாட ஏற்றுமதி என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட ஜப்பானிய ரேடார் ஒன்று ககுயான் மாகாணத்திலும் இஸ்ரேலிய ரேடார் ஒன்று இலோகோஸ் நார்ட்டே பகுதியிலும் பொருத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஜப்பான் ஆஸ்திரேலியாவுக்கு பின்னர் முக்கியமான நட்பு நாடாக அந்த பிராந்தியத்தில் ஒத்துழைப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் ஜப்பானும் ஃபிலிப்பைன்ஸும் இணைந்து தைவானை தங்களது ரேடார் கண்காணிப்பு ஒப்பந்தத்தில் இணைத்து கொள்ள முயற்சிக்கலாம் என கூறப்படுகிறது.