இந்தியாவின் அணு ஆயுத கொள்கை பாகிஸ்தானிடம் இருந்து சீனாவை நோக்கி திரும்புகிறது !!
1 min read

இந்தியாவின் அணு ஆயுத கொள்கை பாகிஸ்தானிடம் இருந்து சீனாவை நோக்கி திரும்புகிறது !!

புல்லடிட்டின் ஆஃப் அட்டாமிக் சயின்டிஸ்ட்ஸ் எனும் அமைப்பு சமீபத்தில் பிரசுரித்த ஆய்வு கட்டுரை ஒன்றில் இந்தியாவின் அணு ஆயுத கொள்கை பாகிஸ்தானிடம் இருந்து சீனாவை நோக்கி நகர்வதாக தெரிய வந்துள்ளது என புலனாகிறது.

இதுகுறித்து இந்த ஆய்வை மேற்கொண்ட ஹான்ஸ் எம் கிறிஸ்டென்ஸன் மற்றும் மேட் கோர்டா ஆகியோர் பேசுகையில் காலம் காலமாக பாகிஸ்தானை பிரதானபடுத்திய இந்திய அணு ஆயுத கொள்கை தற்போது சீனாவை நோக்கி நகர்வதாக தெரிவித்துள்ளனர், அதன் ஒரு பகுதி தான் பெய்ஜிங் வரை சென்று தாக்கும் இந்திய ஏவுகணைகள் எனவும் கூறினர்.

ஹான்ஸ் எம் கொண்டு கிறிஸ்டென்ஸன் அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் அணுசக்தி தகவல் திட்டத்தின் இயக்குனராக உள்ளார், மேலும் மேட் கோர்டா மேற்குறிப்பிட்ட திட்டத்தில் பணியாற்றுகிறார்.

இவர்கள் கூறுகையில் இந்தியாவின் அணு ஆயுத தளவாட நவீனப்படுத்துதல் சீனாவை மையப்படுத்தியே உள்ளது எனவும், அடுத்த 10 வருடங்களில் இதன் காரணமாக இந்தியா பல்வேறு புதிய அணு ஆயுத திறன்களை பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியா தற்போது உலகில் முப்பரிமான அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஆறு நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது, தற்போதைய நிலையில் இந்தியா எட்டு விதமான அணு ஆயுத தாக்குதல் அமைப்புகளை கொண்டுள்ளது.

தற்போது இந்தியா 2 வகையான வான்வழி அணு ஆயுத தாக்குதல் அமைப்புகளையும், 4 வகையான நில அணு ஆயுத தாக்குதல் அமைப்புகளையும், 2 வகையான கடல்வழி அணு ஆயுத தாக்குதல் அமைப்புகளையும் கொண்டுள்ளது.

மேலும் கூடுதலாக 3 அணு ஆயுத தாக்குதல் அமைப்புகள் தயாராகி வருகின்றன, விரைவில் இவை செயல்பாட்டுக்கு வரும் அப்போது இந்தியா சுமார் 11 வகையான அணு ஆயுத தாக்குதல் அமைப்புகளை கொண்டிருக்கும் என அவர்கள் கூறினர்.

இந்திய விமானப்படையின் ரஃபேல், மிராஜ்2000 மற்றும் ஜாகுவார் ஆகிய விமானங்களில் இருந்து அணு ஆயுத தாக்குதல் நடத்த முடியும்.

இந்திய தரைப்படை அக்னி 5 ஏவுகணையை பிரதான அணு ஆயுத தாக்குதல் தளவாடமாக பயன்படுத்தி வருகிறது, இதன் தாக்குதல் வரம்பு 5000 கிலோமீட்டர்களுக்கும் அதிகமானது, சீன தலைநகர் பெய்ஜிங்கை இதனால் தாக்க முடியும்.

மேலும் அடுத்த தலைமுறை அக்னி 6 ஏவுகணை தயாரிப்பு கட்டத்தில் உள்ளது இது சுமார் 12000 கிலோமீட்டருக்கும் அதிகமான தாக்குதல் வரம்பை கொண்டது, பல அணு ஆயுதங்களை (3-10) இதனால் சுமக்க முடியும்.

இந்திய கடற்படை சுமார் 3,500 கிலோமீட்டர் சென்று தாக்கக்கூடிய கே4 ஏவுகணையை பயன்படுத்தி வருகிறது, மேலும் 5000 கிலோமீட்டர் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட மற்றொரு புதிய ஏவுகணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் இந்த மாற்றம் தானாகவே பாகிஸ்தானுக்கு பெரிய சிக்கலை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.