இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சக்ரா நீர்மூழ்கி

  • Tamil Defense
  • July 12, 2020
  • Comments Off on இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சக்ரா நீர்மூழ்கி

2012 ஏப்ரல் 4, இந்திய கடற்படை சக்ரா நீர்மூழ்கியை தனது படையில் இணைத்தது.அகுலா 2 வகை அணுஆற்றல் நீர்மூழ்கியான சக்ராவை இரஷ்யாவிடம் இருந்து பத்து வருட குத்தகைக்கு இந்தியா பெற்றது..இரஷ்யாவுக்கு வெளியே ஆசியாவிலேயே மிகச் சக்திவாய்ந்த நீர்மூழ்கி சக்ரா தான்.சர்வதேச விதிகளின் படி ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு அணுஆயதங்கள் சம்பந்தமான தளவாடங்களை விற்க முடியாது.அதே போல் எந்த நாடும் வாங்க முடியாது.ஆனால் சர்வதேச விதிகளிலும் ஓட்டை உள்ளதை இந்தியா மற்றும் இரஷ்யா நன்கு உணர்ந்து குத்தகை என்ற பெயரில் சக்ராவை இந்தியா பெற்றுள்ளது.சர்வதேச விதிகளில் குத்தகை பற்றி எதும் குறிப்பிடப்படவில்லை.

இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா ஒரு மாபெரும் சக்தியாக மாறி வருகிறது மற்றும் ஒரு மாபெரும் கடற்படையை கட்டமைத்தும் வருகிறது.எந்த
பெரிய கடற்படைக்கும் ஒரு அணு சக்தி நீர்மூழ்கியை இயக்க வேண்டியது அவசியம் மற்றும் அது அந்த பெரிய கடற்படைக்கு மகத்தான ஆற்றலை அளிக்கிறது.

இந்தியா 900$ மில்லியன் செலவில் தான் இந்த நீர்மூழ்கியை குத்தகைக்கு எடுத்துள்ளது.2022வரை இந்தியக் கடற்படையில் இருக்கும்.அகுலா நீர்மூழ்கி கட்டப்பட்டிருக்கும் போதே பணமின்மையால் இரஷ்யாவிற்கு இந்தியா தான் பணம் கொடுத்து கட்டுமானத்தை முடித்தது.நீர்மூழ்கியின் விலை 1.5பில்லியன் டாலர்கள் தான்.இந்தியா ஏற்கனவே 900மில்லியன் டாலர்கள் கொடுத்துள்ளது.இனி வரும் காலங்களில் பத்து வருடத்திற்கு 300மில்லியன் டாலர் என இருபது வருடத்திற்கு இந்தியா பணம் கொடுத்து நீர்மூழ்கியை அதன் வாழ்நாள் வரை தனது கடற்படையில் வைத்திருக்கும் என தகவல் கூறுகிறது.900$+300$+300$=1.5$ பில்லியன் டாலர்கள் வருகிறது.இது கப்பலின் மொத்த தொகை.மேலும் நீர்மூழ்கி இந்தியத் தேவைக்காகவே கட்டப்பட்டுள்ளது.அதாவது இரஷ்யாவின் 650 mm டர்பிடோ குழாய்களுக்கு பதிலாக இந்தியாவின் 533 mm டர்பிடோ குழாய்கள் எட்டு வைத்து கட்டப்பட்டுள்ளது.மேலும் அனலாக் டிஸ்பிளேவிற்கு பதிலாக டிஜிட்டல் டிஸ்பிளே வைத்து கட்டப்பட்டுள்ளது.கப்பலில் இருந்து 40 டர்பிடோக்கள் அல்லது ஏவுகணைகளை ஏவ முடியும்.

இந்திய கடற்படை தன்னை ஒரு நீலநிறக் கடற்படையாக மாற்ற பெரும் முயற்சிகள் செய்து வருகிறது.எனவே இது போன்ற அணுஆற்றலில் இயங்கும் தாக்கும் நீர்மூழ்கிகள் தேவை.மேலும் இவற்றால் நீண்ட தூரம் செல்ல முடியும்.மேலும் தாக்கும் சக்தியும் அதிகம்.இந்தியாவிடம் அப்போது இந்த மாதிரி நீண்ட தூரம் செல்லும் நீர்மூழ்கிகள் இல்லை.

என்னதான் இந்தியா விமானம் தாங்கி கப்பல்களை இயக்கினாலும் எதிரிகளால் எளிதாக தாக்க கூடிய இலக்கு தான் விமானம் தாங்கி கப்பல்கள்.எனவே  அதை காக்க மட்டுமல்லாமல் அதை ஒரு சக்தி வாய்ந்த போர் இயந்திரமாக மாற்றுவது அதனுடன் வரும் டெஸ்ட்ராயர் போன்ற போர்கப்பல்களும் மற்றும் நீருக்கடியில் மறைந்து வரும் நீர்மூழ்கிகளுமே.அந்த வகையில் சக்ரா நமது விமானம் தாங்கி கப்பலுக்கு அளவற்ற சக்தியை தரும்.இந்தியாவிடம் அதிநவீன சென்சார்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்ட போர்க்கப்பல்கள் இருந்தாலும் நெடுந்தூரம் ஒரு விமானம் தாங்கி கப்பல் பயணிக்கும் போது அதற்கு பாதுகாப்பாக கண்டிப்பாக ஒரு நீர்மூழ்கி தேவை.அதை ஒரு அணுசக்தியுடைய தாக்கும் நீர்மூழ்கியால் தர முடியும்.

தற்போது இந்தியா சொந்தமாக அணு சக்தியுடைய நீர்மூழ்கியை தயாரிக்க முடியும்.அரிகந்த் படையில் இணைக்கப்பட்டுள்ளது.எனினும் அரிகந்த் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கி.ஆனால் சக்ரா அணுசக்தியுடைய தாக்கும் கப்பல்.இதை சண்டைக்கு உபயோகிக்க முடியும்.

நீர்மூழ்கியில் உணவு உள்ள வரை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் நீர்மூழ்கியால் நீண்ட கடற்பகுதியில் பயணம் செய்ய முடியும்.கிட்டத்தட்ட 10,000டன்கள் எடையுடையது.30 நாட் வேகத்தில் பயணிக்க கூடியது.மற்றும் 600மீ வரை நீருக்கடியில் செல்ல முடியும்.

மேலும் முக்கியமான விசயம் சக்ராவால் துளி சப்தமின்றி நீருக்கடியில் பயணிக்க முடியும்.கிட்டத்தட்ட 80 வீரர்கள் இந்த நீர்மூழ்கியை இயக்குகின்றனர்.

வெகு சில நாடுகளே அணுஆற்றலுடைய நீர்மூழ்கியை இயக்கும் ஆற்றல் பெற்றுள்ளன அவற்றுள் இந்தியாவும் ஒன்று.