மலாக்கா ஜலசந்தி மூலம் இந்தியா சீனாவுக்கு எத்தகைய பாதிப்பை வரும் காலங்களில் உண்டு பண்ணலாம் – ஒர் அலசல் !!

  • Tamil Defense
  • July 10, 2020
  • Comments Off on மலாக்கா ஜலசந்தி மூலம் இந்தியா சீனாவுக்கு எத்தகைய பாதிப்பை வரும் காலங்களில் உண்டு பண்ணலாம் – ஒர் அலசல் !!

மிக நீண்ட காலமாகவே சீனா கடல்வழி போக்குவரத்தை தனது ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு நம்பியுள்ளது. இதில் மிக முக்கிய பங்கு வகிப்பது இந்தோனேசியா மற்றும் மலேசியா இடையில் உள்ள மலாக்கா ஜலசந்தி ஆகும்.

1990களுக்கு பிறகான காலகட்டத்தில் இதன் பயன்பாடும் முக்கியத்துவமும் ஒருசேர பன்மடங்கு அதிகரித்தது.

இந்த வழியாக தான் தற்போதும் வளைகுடா நாடுகள், அங்கோலா மற்றும் வெனிசுவேலா நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது.

தற்போது இந்தியா சீனா இடையே மோதல்கள் அதிகரிக்கும் போது மலாக்கா ஜலசந்தி சீனாவுக்கு மிகப்பெரிய சிக்கலாக மாறுகிறது, காரணம் இந்தியா தனது முன்னனி கப்பல்களை மலாக்கா ஜலசந்தியின் வாய்பகுதியில் குறுக்கே நிறுத்தினால் எந்த கப்பலும் உள்நுழையவோ அல்லது வெளிவரவோ முடியாது அத்தகைய ஒரு வலிமையான நிலையை இந்தியாவுக்கு இந்த ஜலசந்தி அளிக்கிறது.

மேலும் இதற்காகவே இந்தியா இந்த ஜலசந்திக்கு அருகில் உள்ள அந்தமான் தீவுகளில் தனது ராணுவ பலத்தை பன்மடங்கு அதிகரித்து வருகிறது.

இந்த ஆபத்துகளை சீனா மிக நன்றாக உணர்ந்துள்ளது, ஆகவே மலாக்கா ஜலசந்தியை தவிர்க்கும் வகையில் வேறு வழிகளை நாட தொடங்கி உள்ளது.

அந்த வகையில் தற்போது சீனாவுக்கு மூன்று வழிகள் உள்ளன.

1) க்வதர் – கஷ்கார்
2) மத்திய ஆசியா வழியாக ஐரோப்பா செல்லும் ரயில் பாதை
3) ஆர்ட்டிக் வழி பாதை

1) க்வதர் – கஷ்கார் வழி பாதை.

க்வதர் பாகிஸ்தானில் உள்ள துறைமுகம், இதனை சீன ஆக்கிரமிப்பில் உள்ள கஷ்கார் பகுதியுடன் இணைக்கும் வகையில் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் எனும் திட்டத்தை இரு நாடுகளும் செயல்படுத்தி வருகின்றன. சமீபத்தில் 7.2பில்லியன் டாலர்கள் மதிப்பில் இந்த வழித்தடத்தில் ஒரு ரயில் பாதை அமைக்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆகவே இது செயல்பாட்டுக்கு வந்தால் சீனா தனது பொருட்களை க்வதர் துறைமுகம் கொண்டு வந்து பின்னர் தரை மார்க்கமாக சீனாவுக்கு கொண்டு செல்ல முடியும்.

இந்தியா க்வதர் துறைமுகத்தை தாக்கும் வலிமையை கொண்டிருந்தாலும் இந்தியா சீனா இடையேயான பிரச்சினையில் தானாகவே சென்று பாகிஸ்தானையும் போரில் இணைய அழைப்பு விடுப்பதை போலாகும்.

அதை போல கடல் மார்க்கமாக தாக்காமல் துறைமுகத்துக்கான போக்குவரத்தை தடுத்தாலும் பாகிஸ்தான் கடற்படையின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய நிலை வரலாம். எப்படி பார்த்தாலும் சீனாவுக்கு இது சாதகமே.

2) மத்திய ஆசியா வழியாக ஐரோப்பாவுக்கு ரயில் பாதை:

இது பண்டை கால பட்டு சாலையின் இன்றைய நவீன வடிவமாகும், தற்போது இது முக்கியத்துவம் பெறவில்லை என்றாலும் வருங்காலங்களில் இதன் முக்கியத்துவமும் பயன்பாடும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாதையை சீனா ஐரோப்பாவுக்கான பிர்த்தியேக ஏற்றுமதி பாதையாக பயன்படுத்தி கொள்ள நினைக்கிறது.

3) ஆர்ட்டிக் கடல் வழி பாதை:

மூன்றாவதாக சீனா ரஷ்யாவிற்கு மேலே உள்ள ஆர்ட்டிக் கடல் பிரதேசம் வழியாக செல்லும் கடல் பாதையில் ஆர்வம் காட்டி வருகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு சீனா வெளியிட்டுள்ள ஆர்ட்டிக் கொள்கையில், ஆர்ட்டிக் பிரதேச நாடுகளுடன் இந்த கடல்வழி பாதையை மேம்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்து உள்ளது. இதனை துருவ பட்டு சாலை என சீனா அழைக்கிறது. கடந்த 2013ஆம் ஆண்டு இப்பாதை வழியாக சீனா தனது முதல் கப்பலை ஐரோப்பாவுக்கு அனுப்பி உள்ளது.

இப்பாதையை பயன்படுத்தும் வகையில் சீனா தனது முதல் பனி உடைப்பான் கப்பலை புகழ்பெற்ற ஃபின்லாந்து நிறுவனமான அகெர் ஆர்ட்டிக் உதவியுடன் தயாரித்தது. இந்த கப்பலுக்கு ஷு லாங் 2 என பெயர் சூட்டி உள்ளது. மேலும் பெரிய கப்பல்களை கட்ட சீனா திட்டமிட்டு உள்ளது.

இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது சீனா மலாக்கா ஜலசந்தியின் பயன்பாட்டை குறைக்க மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருவதை நம்மால் உணர முடியும்.

மேற்குறிப்பிட்ட திட்டங்களை சீனா முழுமையாக செயல்படுத்தினால் இந்தியா மலாக்கா ஜலசந்தியை முடக்கினாலும் சீனாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஒன்றும் இருக்க போவதில்லை என்பது தெளிவாகிறது.

ஆனால் இந்தியாவுக்கு மேலே செல்லும் க்வதர் கஷ்கார் பாதையை இந்தியா தனது விமானப்படையை வைத்து முடக்கலாம் ஆனால் அதற்கு எல லையோரம் மிக வலிமையான ராணுவ உள்கட்டமைப்பை காலம் தாழ்த்தாமல் தொடங்கி விரைவாக முடிக்க வேண்டும்.