ரபேல் முதல் மிக்-21 வரை; விமானப்படை விமானங்கள் குறித்த ஒரு பார்வை

ரபேல்:
கடந்த செப்டம்பர் 2016ல் சுமார் 58000 கோடிகள் செலவில் 36 ரபேல் விமானங்களும் அதனுடைய தொடர்புடைய ஆயுதங்கள் வாங்க பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.அதிநவீன ஆயுதங்களுடன் தற்போது ஐந்து ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன.கோல்டன் ஆரோஸ் எனப்படும் ஸ்குவாட்ரானில் இணைக்கப்பட்டு அம்பாலாவில் இருந்து இந்த விமானங்கள் தனது செயல்பாட்டை தொடங்க உள்ளன.28 ஒற்றை இருக்கை மற்றும் 8 இரட்டை இருக்கையுடைய விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன.ரபேல் ஒரு பலபணி போர்விமானம் ஆகும்.

சுகாய் சு-30எம்கேஐ:
தற்போது இந்திய விமானப்படை செயல்பாட்டில் உள்ள அதிநவீன விமானங்கள் இந்த சுகாய் விமானங்கள் தான்.இரஷ்யாவின் தொழில்நுட்ப பரிமாற்றம் பெற்று தற்போது இந்தியாவின் ஹால் நிறுவனம் இந்த விமானங்களை தயாரித்து வழங்குகிறது.கிட்டத்தட்ட 290 விமானங்கள் தற்போது இந்திய விமானப்படையில் செயல்பாட்டில் உள்ளது.கடந்த 2002 முதல் படையில் செயல்பாட்டில் உள்ளது.

மிராஜ் 2000:
தற்போதும் இந்திய விமானப்படை செயல்பாட்டில் உள்ள மிராஜ் விமானங்கள் ஆபத்தான சக்திமிக்க விமானங்கள் ஆகும்.1985 முதல் இந்திய விமானப்படை செயல்பாட்டில் உள்ளன இவை.ரபேல் விமானத்தயாரிப்பு நிறுவனமான டஸ்ஸால்ட் நிறுவத்தின் தயாரிப்பு தான் இந்த விமானமும்.தற்போது 50 விமானங்கள் இந்திய விமானப்படை செயல்பாட்டில் உள்ளன.கார்கில் போரின் போதும் சரி பாலக்கோட் தாக்குதலின் போதும் சரி மிகச் சிறப்பாக செயல்பட்டன இந்த விமானங்கள்.

ஜாகுவார்:
பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இணைந்து தயாரித்த இந்த விமானங்கள் ஒரு சிறந்த தரைதாக்குதல் விமானங்கள் ஆகும்.இந்தியா தற்போது இந்த விமானங்களை அப்கிரேடு செய்து உபயோகித்து வருகின்றன.

மிக்-29
இரஷ்யத் தயாரிப்பு மிக்-29 விமானம் விமானப்படை மற்றும் கடற்படை என இரண்டிலுமே செயல்பாட்டில் உள்ளன.கிட்டத்தட்ட உலகின் பல முன்னனி  விமானப்படைகள் இந்த விமானத்தை செயல்பாட்டில் கொண்டுள்ளன.மிராஜ் 2000 விமானத்துடன் இணைந்து மிக்-29 விமானங்களும் கார்கில் போரில் கலந்துகொண்டன.

தேஜஸ்:
இந்தியாவின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் தேஜஸ் விமானங்களை தற்போது படையில் இணைக்கத் தொடங்கியுள்ளது  விமானப்படை.மிக்-21 விமானங்களுக்கு மாற்றாக தேஜஸ் விமான மேம்பாட்டை 1980களில் தொடங்கியது ஹால்.தற்போது முதல் ஸ்குவாட்ரான் பிளையிங் டேக்கர்ஸ் சூலூரில் இருந்து செயல்பட்டு வருகிறது.

மிக்-21:
கடந்த 60 வருடங்களாக உலகின் 60 நாடுகளுடன் விமானப்படையில் செயல்பட்டு வந்துள்ளது இந்த மிக்-21 விமானம்.1961 முதலே இந்திய விமானப்படையின் செயல்பாட்டில் உள்ளது மிக்-21.1971 போரில் ஆகச் சிறப்பாக செயல்பட்டது.தற்போது விமானப் படை சிறிய அளவில் மிக்-21 விமானங்களை இயக்கி வருகிறது.தேஜஸ் விமானங்கள் மிக்-21க்கு பதிலாக தற்போது படையில் இணைந்து வருகின்றன.