தென்சீன கடல் பகுதிக்கு தனது அதிநவீன பிரம்மாண்ட விமானந்தாங்கி கப்பலை நிரந்தரமாக அனுப்பும் முடிவில் இங்கிலாந்து; சீனாவுக்கு அடுத்த சவால் ??

  • Tamil Defense
  • July 15, 2020
  • Comments Off on தென்சீன கடல் பகுதிக்கு தனது அதிநவீன பிரம்மாண்ட விமானந்தாங்கி கப்பலை நிரந்தரமாக அனுப்பும் முடிவில் இங்கிலாந்து; சீனாவுக்கு அடுத்த சவால் ??

இங்கிலாந்து தலா 5.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இரண்டு பிரம்மாண்ட விமானந்தாங்கி கப்பல்களை கட்டி உள்ளது.

அதில் முதல் கப்பலான ஹெச்.எம்.எஸ். குயின் எலிஸபெத் விமானந்தாங்கி கப்பலை இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்திற்கு குறிப்பாக தென்சீன கடல்பகுதிக்கு நிரந்தரமாக அனுப்ப உள்ளதாக தெரிகிறது.

சீனாவின் அடாவடித்தனமும், ஹாங்காங்கில் அந்நாடு நிகழ்த்தி வரும் அடக்குமுறையும் இதற்கு மிக முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.

ஐரோப்பாவில் நேட்டோ படைகளுக்கு ஒரு விமானந்தாங்கி கப்பல் படையணியை இங்கிலாந்து தனது இரண்டாம் கப்பல் மூலம் அளிக்கும் அதே நேரத்தில் இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தில் தனது முதல் கப்பல் மூலமாக உலகளாவிய இருப்பை காட்ட விரும்புகிறது.

இந்த கப்பலில் 2 ஸ்க்வாட்ரன் F35 போர் விமானங்கள் நிறுத்தப்படும் என தெரிகிறது, ஒரு ஸ்க்வாட்ரன் இங்கிலாந்து விமானப்படையில் இருந்தும், மற்றொன்று அமெரிக்க மரைன் கோரில் இருந்தும் நிலைநிறுத்தப்பட உள்ளன.

இந்த கப்பல் தற்போது 2 டைப்45 நாசகாரி போர்க்கப்பல்கள், 2 டைப்23 ஃப்ரிகேட் போர்க்கப்பல்கள் மற்றும் 2 டேங்கர்களுடன் இயங்க உள்ளது. ஆனால் ஒரு விமானந்தாங்கி படையணியில் நீர்மூழ்கிகள் உள்ளிட்ட பல கப்பல்கள் அங்கம் வகித்தால் தான் அப்படையணி முழுமை பெறும்.

ஆகவே இங்கிலாந்து ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு இப்படையணியில் தங்களது நீர்மூழ்கிகள் உள்ளிட்ட கப்பல்களுடன் அங்கம் வகிக்க அழைப்பு விடுக்க உள்ளதாக தெரிகிறது.

ஆகவே நிச்சயமாக இப்படையணி உலகளாவிய இருப்பை இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தில் உணர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

இதை தவிர இப்பிராந்தியத்தில் F35 போர் விமானங்களை இயக்கும் நாடுகளுடனும் கூட்டு பயிற்சிகளில் ஈடுபட இங்கிலாந்து விரும்புகிறது.