இந்தியாவின் இலகுரக டாங்கி தேவையை பூர்த்தி செய்ய கைகோர்க்கும் DRDO மற்றும் L & T !!

  • Tamil Defense
  • July 28, 2020
  • Comments Off on இந்தியாவின் இலகுரக டாங்கி தேவையை பூர்த்தி செய்ய கைகோர்க்கும் DRDO மற்றும் L & T !!

பல வருட காலமாக இந்தியா இலகு ரக டாங்கி ஒன்றை உருவாக்க முயற்சித்து வந்தாலும், சமீபத்தில் சீனாவுடனான எல்லை பிரச்சினை இதனை நன்கு உணர்த்தியது.

இந்த நிலையில் இந்தியாவின் இலகு ரக டாங்கிக்கான தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும், லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனமும் கைகோர்க்க உள்ளன.

இதன்படி நாம் ஏற்கனவே தென்கொரியாவிடம் இருந்து வாங்கிய கே9 வஜ்ரா வின் சேஸ்ஸியுடன் பெல்ஜியம் நாட்டு நிறுவனமான ஜான் காக்கரில் தயாரிப்பான எக்ஸ்.சி.8 105மிமீ துப்பாக்கியை இணைத்து புதிய இலகுரக டாங்கியை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் எடை சுமார் 35 டன்கள் ஆகும், கே9 உடைய 1000 குதிரை சக்தி திறன் கொண்ட என்ஜின், ஒரு டன்னுக்கு 28.5 குதிரை சக்தி திறன்களை அளிக்கும் ஆற்றல் கொண்டது.

மேலும் இதன் காக்கரில் துப்பாக்கி மலையக போர்முறைக்கு ஏற்ற வண்ணம் 42 டிகிரி கோணத்தில் சுட வல்லது, பெரும்பாலான 105மிமீ குண்டுகளை இதனால் சுட முடியும், மேலும் காக்கரில் நிறுவனத்தின் 105மிமீ டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும் சுட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

105மிமீ HE குண்டுகள் (AIR BURST) மூலமாக எதிரி காலாட்படையினர் மீதும் தாக்குதல் நடத்த முடியும், மேலும் அணு,உயிரி, வேதியியல் தாக்குதல்களின் போதும் திறம்பட செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனத்தின் ஹசீரா தொழிற்சாலையில் வரும் டிசம்பர் மாதம் கடைசி மற்றும் 100ஆவது கே9 வஜ்ரா பிரங்கியின் தயாரிப்பு பணிகள் நிறைவடையும்.

அதன் பிறகு இந்த புதிய டாங்கிளை அந்த தொழிற்சாலையில் தயாரிக்க முடியும், 1 வருடத்திற்கு இத்தகைய 100 டாங்கிகளை தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அரசு அனுமதி அளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.