லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனத்தின் மூன்று வகையான தன்னாட்சி திறன் கொண்ட ஆளில்லா கடலடி வாகனங்கள் !!

  • Tamil Defense
  • July 19, 2020
  • Comments Off on லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனத்தின் மூன்று வகையான தன்னாட்சி திறன் கொண்ட ஆளில்லா கடலடி வாகனங்கள் !!

லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனம் கே9 வஜ்ரா, காட்டுபள்ளி கப்பல் கட்டும் தளத்தில் கப்பல் கட்டுமானம், எதிர்கால காலாட்படை சண்டை வாகன தயாரிப்பு பணிகளின் மூலமாக நாட்டின் பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்து வருகிறது.

இந்த நிலையில் மூன்று வகையான தன்னாட்சி திறன் கொண்ட ஆளில்லா கடலடி வாகனங்களை தயாரித்துள்ளது, இவற்றை இந்திய அரசு வாங்குமா என்பதற்கு தற்போது பதில் இல்லை.

அந்த மூன்று தன்னாட்சி திறன் கொண்ட ஆளில்லா கடலடி வாகனங்களை பற்றி பார்க்கலாம்.

1) AUV அதம்யா :

இதனை நீர்மூழ்கிகளிலிருந்து நீரடிகணைகளை போன்றே ஏவ முடியும், இதனை கடற்படையின் தேவைக்கேற்ப மாற்றி பயன்படுத்தி கொள்ள முடியும் எனவும் கூறப்படுகிறது.

இது 582.5 செமீ நீளமும், 533மிமீ சுற்றளவும், 1 டன் எடையும் கொண்டது. இதனால் தொடர்ந்து 8 மணி நேரம் வரை கடலடியில் இயங்க முடியும், 500மீட்டர் ஆழம் வரையும் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அதிகப்பட்ச வேகம் 6 நாட்ஸ் ஆகும்.

2) AUV AMOGH:

இதனை லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனம் இத்தாலியின் M/S EDGELAB நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்து தயாரித்துள்ளது, இதில் அதிநவீன சென்சார்கள், இதர கருவிகள் உள்ளன. இதனை கண்காணிப்பு, கடலடி ஆய்வு போன்றவற்றிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

இது 570செமீ நீளமும், 700மிமீ சுற்றளவும், 1 டன் எடையும் கொண்டது, இதனால் தொடர்ந்து 22 மணிநேரம் வரை கடலடியில் 5 நாட்ஸ் வேகத்தில் 1கிமீ ஆழம் வரையிலும் சென்று இயங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

3) AUV MAYA:

இது மேற்குறிப்பிட்ட இரண்டு ட்ரோன்களை விடவும் அளவில் சிறியதும், இயக்கத்தில் திறன் குறைந்ததுமாகும். இதனால் 4கிலோ எடை வரையிலான பொருட்களை சுமந்து கொண்டு 200மீட்டர் ஆழம் வரையிலும் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை கடலடி பணிகளுக்கு மேற்பார்வை வாகனமாகவும், ஆயுத சோதனைகளில் இலக்காகவும் இதர பணிகளுக்காகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இது கடலடியில் தொடர்ந்து 8 மணிநேரம் 3 நாட்ஸ் வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது, இது 234மிமீ சுற்றளவும், 174 செமீ நீளமும், 55 கிலோ எடையும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.