அரசுப்பணி எனும் பளபளப்பான மாயை; ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள் குறித்த கட்டுரை !!

  • Tamil Defense
  • July 27, 2020
  • Comments Off on அரசுப்பணி எனும் பளபளப்பான மாயை; ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள் குறித்த கட்டுரை !!

பொதுவாக நமது நாட்டில் ராணுவ பணியின் தன்மை, அதில் உள்ள சிக்கல்கள், வீரர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை பற்றிய போதுமான விழிப்புணர்வு நாட்டு மக்களிடமோ, ஏன் ராணுவ வீரர்களிடமோ கூட இருப்பதில்லை, அதாவது தனக்கு தன்னை அறியாமல் ஏற்படும் பாதிப்பை பற்றிய புரிதல் கூட இருப்பதில்லை, ஆகவே இந்த கட்டுரை விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

இந்திய தரைப்படை நாட்டின் பரந்த பலதரப்பட்ட பல்வேறு காலநிலைகள் நிலவும் எல்லை பகுதிகளை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது, ஆகவே வருடத்தில் 2 மாதங்களுக்கும் குறைவான விடுமுறை காலகட்டம், குடும்பம் மற்றும் நண்பர்களை பிரிந்து நீண்ட காலம் இருத்தல், தொடர் சண்டைகள், சக வீரர்களின் மரணங்கள், குடும்ப பிரச்சினைகள் போன்ற பல காரணங்களால் ராணுவ வீரர்கள் மிக கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

இந்த பாதிப்புகள் மனதளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன, விரக்தி காரணமாக வீரர்கள் தற்கொலை செய்வது, சக வீரர்களுடன் நடக்கும் சிறு சிறு வாக்குவாதங்களில் கூட சக வீரரை சுட்டு விட்டு தானும் தற்கொலை செய்வது போன்ற பல நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் அரங்கேறி வருகின்றன.பெரும்பாலான ராணுவ வீரர்களின் நடத்தை அவர்களின் உளவியல் நலத்தை சார்ந்துள்ளது.

எல்லையோர பகுதிகளில், குறிப்பாக காஷ்மீர் எல்லையில் சிறு காவல் சாவடிகளில் எதிரி படைகளின் தாக்குதலுக்கு இடையே ஏறத்தாழ 24 மணி நேரம் முதல் சில நாட்கள் வரை ஒய்வின்றி பணியாற்றும் சூழல்கள் போன்றவை மனரீதியாக கடும் அழுத்தத்தை கொடுத்து மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன.

வெளியில் இருந்து பார்ப்பதற்கு ராணுவ வேலை அரசுப்பணி என்கிற பளபளப்பான தோற்றம் இருந்தாலும், அவர்களின் வாழ்க்கை மிகவும் கடினமானது, பல வீரர்கள் குடும்பத்தினரிடம் கூட தங்களது கஷ்டங்களை பகிர்ந்து கொள்வதில்லை.

பணியின் தன்மை காரணமாக வீரர்களுக்கு ஆறு வகையான மன பாதிப்புகள் ஏற்படுகின்றன, அவற்றை பற்றி பார்க்கலாம்.
1) PTSD – POST TRAUMATIC STRESS DISORDER,
2) BURNOUT,
3) COGNITIVE DISORDERS,
4) SUBSTANCE ABUSE, 5) PSHYCOSES,
6) MAJOR DEPRESSIVE DISORDER
ஆகியவை பாதிக்கின்றன.

1) PTSD என்பது உலகம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் பொதுவான மன பாதிப்பாகும், ஒரு சக வீரர் கண் முன் வெடிகுண்டு தாக்குதல் அல்லது ஸ்னைப்பர் தாக்குதலில் தலைசிதறி உயிரிழப்பது போன்ற கொடுர நிகழ்வுகள், அதே நேரத்தில் ஒரு எதிரி வீரனை மிக அருகில் இருந்து கழுத்தை நெரித்தோ அல்லது கழுத்தை அறுத்தோ கொல்கையில் அந்த வீரனுடைய இரத்தம், சதை ஆகியவற்றை தொட்டு உணர்வதால் ஏற்படும் மன பாதிப்பாகும்.

தொலைவில் இருந்து ஒருவரை கொல்வது எளிது ஆனால் தன் அருகில் இருக்கும் எதிரியை கொல்கையில் கண் காது, தொடுதல் போன்றவையால் பார்த்து கேட்டும் உணர வேண்டியுள்ளது இது மனதளவில் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தி விடும்.

2) BURNOUT – இது மிக நீண்ட காலத்திற்கு தொடர் மன அழுத்தத்திற்கு உள்ளாவதால் மன ரீதியாக உணர்ச்சி ரீதியாக மிகவும் சோர்வடைந்து உணர்வுகளை வெளிபடுத்த முடியாத மனநிலையை குறிப்பதாகும், இது தீவிரமடைந்தால் இந்த நிலையை அடையும் போது அடிக்கடி மி தீவிரமான மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும்.

3) COGNITIVE DISORDER – இது அடிப்படை அறிவாற்றலை கூட பாதிக்கும் மன பாதிப்பாகும், சரியான சிகிச்சை இல்லையெனில் சமுதாயத்துடன் இணைந்து மற்றவர்களை போல சாதாரணமாக வாழ முடியாத நிலையை உருவாக்கி விடும்.

அதாவது ஞாபக மறதி, புரிதலில் சிக்கல்கள், தெளிவின்மை, புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக பேச முடியாத நிலை போன்ற பாதிப்புகள் அடங்கும்.

4) SUBSTANCE ABUSE – இது அதிகளவில் போதை பொருட்களை பயன்படுத்த தூண்டும் மன பாதிப்பாகும், அதிகளவில் மது உட்கொள்வது புகை பிடித்தல் மற்றும் இதர போதை பொருட்களை பயன்படுத்த தூண்டும், இது அவரகளின் உடலுக்கும் தீங்கு விளைவிப்பதோடு மட்டுமின்றி சுற்றி இருப்பவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அதாவது அதிகளவு போதை தன் நிலை மறந்து குற்றச்செயல்களில் ஈடுபடவும் தூண்டும் இத அத்தகைய மோசமான மன பாதிப்பு ஆகும்.

5) PSHYCOSIS
இது ஒருவரது முழு ஆளுமைத் தன்மையையும் பாதிக்கக்கூடிய மிகக் கடுமையான மன நோய், எளிதாக சொன்னால் சைக்கோ, பைத்தியம் எனலாம்.

இத்தகைய பாதிப்பு இருந்தால் அவர்கள் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள், HALLUCINATIONS , DELUSIONS அதாவது மாயை மற்றும் மருட்சி, நடக்காத விஷயங்களை நடப்பதாக கற்பனை செய்து கொள்வது, யாரோ ஒருவர் பேசுவது போல தோன்றுவது எளிதாக கூறினால் 3 திரைபடத்தில் தனுஷ் சந்திக்கும் நிலை, இது தற்கொலைக்கு தூண்டும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று.

6) MAJOR DEPRESSIVE DISORDER – இதனை CLINICAL DEPRESSION எனவும் அழைப்பர், உடல்ரீதியான, மனரீதியான மற்றும் வாழ்விடங்கள் ரீதியான அழுத்தங்கள் காரணமாக ஏற்படும் மன பாதிப்பாகும், இது மூளை செயல்பாடுகளில் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தும், இவை மூளையின் NEURAL CIRCUIT அதாவது நரம்பியல் மண்டலங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் மன பாதிப்பாகும்.

இத்தகைய பாதிப்புகள் காரணமாக வீரர்களுக்கு உடலளவில் தூக்கமின்மை, உணவு உட்கொள்வதில் சிக்கல்கள், தலைவலி, வேகமாக மூச்சு வாங்குதல், வேகமாக இதயம் துடிப்பது போன்ற பாதிப்புகளும்,

மனதளவில் கெட்ட கனவுகள், கடந்த கால நியாபகங்கள், கோபம், அச்சம், பதட்டம், வாழ்க்கையில் நம்பிக்கையின்மை போன்ற பிரச்சினைகளும்,

போதை பொருட்கள் எடுத்து கொள்வது, மிரட்சி, கவனம் செலுத்துவதில் சிக்கல் போன்ற குணாதிசயங்களை பாதிக்கும் வகையிலான பிரச்சினைகளும் வீரர்களை பாதிக்கின்றன.

இத்தகைய பிரச்சினைகளால் தான் வீரர்கள் அதிகளவு மது அருந்துவது, புகை பிடித்தல் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள், இது குற்றச்செயல்கள் புரியவும் தூண்டுகிறது.

மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு பாதிப்பும் வீரர்களையும் அவர்களை சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கிறது, சில நேரங்களில் உயிரிழப்புகளில் போய் முடிகிறது.

இந்த பாதிப்புகள் ஒரு தனிப்பட்ட வீரர், அவரது குடும்பம், இந்த சமுகம் எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் பாதுகாப்பையும் பாதிக்கிறது, அதாவது உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமான வீரர்களை கொண்ட ராணுவம் நாட்டின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது ஆகும்.

உலகம் முழுதும் ராணுவ வீரர்கள் இத்தகயை உளவியல் பாதிப்புகளை சந்திக்கின்றனர், இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் முதலிடத்தில் உள்ளனர். அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் ராணுவத்தினரின் உளவியல் பாதிப்புகளை கையாள மிகப்பெரிய நிர்வாக அமைப்பு உள்ளது, ஆனால் இங்கு அப்படி இல்லை.

கடந்த 2011 முதல் 2018 வரை 900 இந்திய ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், மேலும் சக வீரர்களை கொல்வது, கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்வது போன்ற நிகழ்வுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவ உளவியல் நிபுணர்கள் அதிக சிரத்தையுடன் இத்தகைய பாதிப்புகளை கையாள வேண்டி உள்ளது, சில சமயங்களில் பாதிக்கப்பட்ட வீரர் மட்டுமின்றி அவரது குடும்பத்தினருக்கும் கவுன்சிலிங் அளிக்க வேண்டியதாகிறது.

பொதுவாக ராணுவ பணி என்பது அரசுப்பணி என்பதும், ஒரு வீரன் சாவதற்கு பிறந்தவன் என்பது போன்ற மனப்பான்மை இன்றைய சமுகத்தில் பெருகி வருவதை காண முடியும், எந்த பணியும் குறைந்தது அல்ல ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகையிலும் நாட்டிற்கு நன்மை பயக்கக்கூடியது.

ஆனால் அதே நேரத்தில் ராணுவ பணி என்பது பிற பணிகளுடன் ஒப்பிட முடியாதது, காரணம் ராணுவ பணியில் வீரர்கள் சந்திக்கும் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பிரச்சினைகள் வேறேந்த பணியிலும் இருப்பதில்லை.

ஆகவே ராணுவ வீரர்களையோ அல்லது அவர்களது பணியையோ பாராட்ட வேண்டியதில்லை ஆனால் இழிவுபடுத்துவதை இந்த சமுதாயம் தவிர்ப்பது நல்லது.

நான் மேற்கூறிய படி இந்த கட்டுரை பயனுள்ளதாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது என நம்புகிறேன், அப்படி நீங்கள் உணர்ந்தால் இதனை பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.