உலகிலேயே சக்திவாய்ந்த அமெரிக்க கடற்படையின் ஸம்வால்ட் ரக நாசகாரி போர்க்கப்பல்கள்; ஒரு பார்வை !!
அமெரிக்க கடற்படை உலகின் மிகப்பெரிய நாசகாரி போர்க்கப்பல்களை இயக்கி வருகிறது, இவை ஒவ்வொன்றும் சுமார் 15000 டன்களுக்கும் அதிகமான எடையை கொண்டவை.
மேலும் உலகிலேயே ஸ்டெல்த் திறனை அதிகமாக கொண்ட கப்பல்கள் இவையாகும், காரணம் இத்தனை பெரிய போர்க்கப்பல் ரேடாரில் ஒரு மீன்பிடி படகு போல தான் தெரியும்.
சுமார் 600அடி நீளம் கொண்ட கப்பல் வெறுமனே 50அடி நீளம் கொண்ட படகு போல தெரியும் என்பது கூடுதல் தகவல்.
இத்தகைய கப்பல்களில் வெறும் மூன்று மட்டுமே உள்ளன, அவையாவன;
1) யு.எஸ்.எஸ். ஸம்வால்ட்
2) யு.எஸ்.எஸ். மைக்கேல் மான்ஸூர்
3) யு.எஸ்.எஸ். லின்டன் பி ஜாண்சன்.
இவை மூன்றும் சான் டியகோ நகரில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் இருந்து இயங்குபவை ஆகும்.
இந்த வகை கப்பல்களில் சுமார் 32ஐ அமெரிக்க கடற்படைக்கு கட்ட முடிவு செய்திருந்த நிலையில், அதிக செலவீனம் காரணமாக மூன்றே கப்பல்களுடன் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியான அமெரிக்கா நிறுத்தி கொண்டது.
USSMichael Monsoor (DDG-1001)
அந்த அளவுக்கு நவீனத்துவம் இவற்றில் நிரம்பி உள்ளது, ஆகவே இந்த மூன்று கப்பல்களையும் திறம்பட பயன்படுத்தி கொள்ள அமெரிக்க கடற்படை திட்டமிட்டு வருகிறது.
முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரும் இன்னாள் கொள்முதல் அதிகாரியுமான ரயான் பெல்ஸ்கேம்பர் இதற்காக அமெரிக்க கடற்படைக்கு ஆலோசகராக உள்ளார்.
அவர் கூறுகையில் இந்த மூன்று கப்பல்களையும் ஒரே படையணியாக இயக்க வேண்டும், அதாவது மிகவும் சக்திவாய்ந்த கப்பல் எதிர்ப்பு நாசகாரி படையணி.
USS Lyndon B. Johnson(DDG-1002)
ஒவ்வொரு கப்பலிலும் தலா 80 ஏவுகணை ஏவு குழல்கள் இருக்கும், அவற்றில் பாதியை அதாவது 40 ஏவு குழல்களில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் நிரப்ப வேண்டும், ஆக மூன்று கப்பல்களையும் சேர்த்து சுமார் 120 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை இந்த படையணி தன்வசம் கொண்டிருக்கும்.
இது இப்படையணிக்கு ஒரு அபார சக்தியை அளிக்கிறது, அதாவது இந்த 3 கப்பல்களால் ஒரு மிகப்பெரிய எதிரி படையணியையே அழித்து நாசம் செய்ய முடியும்.
ஆனால் இவற்றிற்கு ஒரு மிகப்பெரிய பலவீனமும் உள்ளது அதாவது அதிக பட்ஜெட் காரணமாக இவற்றில் S அலைவரிசை ரேடார்கள் இல்லை மாறாக ஒரே ஒரு X அலைவரிசை ரேடார் மட்டுமே உள்ளது.
இதனால் இருவகை ரேடார்களை கொண்ட ஆர்லெய் பர்க் ரக நாசகாரி கப்பல்களை போன்று இந்த வகை கப்பல்களால் வான் வழி ஆபத்துகளை திறம்பட கையாள முடியாது.
ஆகவே இந்த மூன்று கப்பல்கள் கொண்ட படையணியுடன் எப்போதும் ஒரு ஆர்லெய் பர்க் ரக போர்க்கப்பலையும் இப்படையணியில் சேர்த்து இயக்க வேண்டும் என கூறுகிறார்.
இந்த வகை கப்பல்களில் டோமஹாவ்க், SM6 ஆகிய தொலைதூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளன, வான் பாதுகாப்புக்கு மேம்படுத்தபட்ட SEA SPARROW ஏவுகணைகளை கொண்டிருக்கும்.
மேலும் இரண்டு 155மிமீ பிரங்கிகள் உள்ளன இவற்றிற்கான குண்டுகள் நவீனத்துவம் வாயந்தவை, ஒரே ஒரு குண்டுடைய விலை மட்டுமே சுமார் 10லட்சம் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இரண்டு 30மிமீ நெருங்கிய பாதுகாப்பு துப்பாக்கிகள் உள்ளன,
இதைத்தவிர மின்காந்த ரெயில்கன்களையும் இணைக்க அமெரிக்க கடற்படை விரும்புகிறது என்பது கூடுதல் தகவல்.