
அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் மற்றும் யு.எஸ்.எஸ். ரோனால்ட் ரேகன் ஆகிய விமானந்தாங்கி கப்பல்கள் தங்களது தாக்குதல் படையணிகளுடன் தென்சீன கடல்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்க விமானப்படையின் 96ஆவது குண்டுவீச்சு படையணியின் பி52 தொலைதூர குண்டுவீச்சு விமானம் தென்சீன கடல்பகுதிக்கு சென்றுள்ளது.
லூய்ஸியானா மாகாணத்தில் உள்ள பார்க்ஸ்டேல் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் சுமார் 28 மணிநேரம் பயணித்து தென்சீன கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த அமெரிக்க விமானந்தாங்கி கப்பல்களின் போர் விமான படையணிகளுடன் பயிற்சி மேற்கொண்டது.
பின்னர் தனது பயிற்சி நடவடிக்கையை முடித்து கொண்டு ஃபிலிப்பைன்ஸ் அருகே உள்ள குவாம் தீவில் உள்ள ஆண்டர்ஸன் படை தளத்தில் தரை இறங்கியது.
இதுபற்றி 96ஆவது குண்டுவீச்சு படையணியின் கட்டளை அதிகாரி லெஃப்டினன்ட் கர்னல் கிறிஸ்டஃபர் டஃப் கூறுகையில் “இந்த நடவடிக்கை உலகின் எந்த பகுதிக்கும் சென்று தாக்குதல் நடத்தும் வலிமை இருப்மதை உணர்த்துவதாக இருக்கும்” என்றார்.