
அமெரிக்க அரசு உய்குர் மக்களை சித்திரவதை செய்வதில் தொடர்புடைய 11 சீன நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
அதாவது அதிக அளவில் சிறையில் அடைப்பது, கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைப்பது, தனி ஒருவரின் அனுமதி இன்றி பயோமெட்ரிக் தரவுகளை சேகரிப்பது உள்ளிட்ட அடக்குமுறைகளை சீன அரசு உய்குர் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இந்த அடக்குமுறைகளில் தொடர்புடைய 11 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இதில் சாங்ஜி எஸ்குவெல் டெக்ஸ்டைல், ஹெஃபெய் பிட்லான்ட் இன்ஃபார்மேஷன் டெக்னாலஜி, ஹெஃபெய் மெய்லிங், ஹெஷியன் ஹாவோலின் ஹெயர் ஆக்சஸரிஸ், ஹெஷியன் டய்டா அப்பாரல், கே.டி.கே. குழுமம், சினர்ஜி டெக்ஸ்டைல், நான்சாங் ஒ ஃபிலிம் டெக் மற்றும் டான்யுவான் டெக்னாலஜி உள்ளிட்ட 9 நிறுவனங்கள் மீது கட்டாயப்படுத்தி உய்குர் மக்களை வேலை செய்ய வைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
அதை போல் ஸின்ஜியாங் சில்க் ரோடு மற்றும் பெய்ஜிங் லியுஹே உள்ளிட்ட நிறுவனங்கள் ஜெனட்டிக் பரிசோதனைகளை மேற்கொண்டு உய்குர் மக்களை அடையாளம் காண சீன அரசுக்கு உதவி செய்யும் காரணத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ “உய்குர் மக்களை சீன அரசு நடத்தும் விதம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கறை” என விமர்சித்து உள்ளார்.