ஈக்வடார் நாட்டு கடல் பகுதிக்கு அருகே குவிந்துள்ள 200க்கும் அதிகமான சீன மீன்பிடி படகுகள்; உஷார் நிலையில் ஈக்வடார் கடற்படை !!

  • Tamil Defense
  • July 29, 2020
  • Comments Off on ஈக்வடார் நாட்டு கடல் பகுதிக்கு அருகே குவிந்துள்ள 200க்கும் அதிகமான சீன மீன்பிடி படகுகள்; உஷார் நிலையில் ஈக்வடார் கடற்படை !!

ஈக்வடார் நாட்டுக்கு சொந்தமான கலாபேகோஸ் தீவு மற்றும் அதனை சுற்றி 188 மைல் சுற்றளவு கொண்ட சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்கு மிக அருகாமையில் சர்வதேச கடல் பகுதியில் சுமார் 260 சீன மீன்பிடி படகுகள் குவிந்துள்ளன.

இது குறித்து ஈக்வடார் சுற்று சூழல் துறை அமைச்சர் யோலன்டா ககாபாட்ஸே கூறுகையில் சீன மீன்பிடி படகுகளின் ஆக்ரோஷமான மீன் பிடித்தல் அப்பகுதியில் சுற்றுச்சூழலை பாதிக்கவும், பாதுகாக்க பட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக அச்சம் தெரிவித்தார்.

மேலும் சுமார் 350மைல் சுற்றளவுக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தை விரிவாக்குவதன் மூலமாக சீன படகுகள் குவிந்துள்ள சர்வதேச கடல் பகுதியை ஈக்வடார் நாட்டின் கீழ் கொண்டு வர திட்டம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து ஈக்வடார் அதிபர் லெனினி மோரேனோ ட்விட்டரில் குறிப்பிட்ட கடல் பகுதி உலகின் மிக செழிப்பான கடல்வாழ் உயிரினங்கள் வாழ்விடங்களில் ஒன்றாகும் எனவும் அப்பகுதி ஒட்டுமொத்த உலகிற்கும் அத்தியாவசியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஈக்வடார் பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்வால்டோ ஜார்ரின் கூறுகையில் ஈக்வடார் கடற்படை உஷார்படுத்த பட்டு சீன படகுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் போல் மறுபடியும் நடக்காமல் தடுக்க முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த 2017ஆம் ஆண்டு சுமார் 300 சீன மீன்படி படகுகள் ஆக்ரோஷமான மீன்பிடித்தலில் ஈடுபட்ட போது ஈக்வடார் கடற்படை ஒரு சீன கப்பலை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தது அந்த கப்பலில் மட்டுமே சுமார் 300டன்கள் அளவுக்கு மீன்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.