
குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரத்தை சேர்ந்தவர் 18 வயதே நிரம்பிய ஹர்ஷ்வர்தன்சின்ஹ் ஸாலா.
இவர் 9 வயதாக இருக்கும் போதே தனது அறிவியல் திறனை பயன்படுத்த துவங்கி உள்ளார், 12 வயதில் ஏ ரோபாடிக்ஸ் எனும் நிறுவனத்தை தோற்றுவித்தார், 16 வயதில் இந்திய மற்றும் இஸ்ரேலிய பிரதமர்கள் முன்னிலையில் தனது கண்டுபிடிப்புகளை காண்பித்து பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
சிறுவயதில் சோஃபாவில் இருந்து கொண்டே மின்விசிறியையும் தொலைக்காட்சி பெட்டியையும் ஒருசேர இயக்கும் வகையிலான ரிமோட்டை வடிவமைத்தார். ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் வரை இணையத்தில் செலவழித்து அறிவுத்திறனை கூர்மைபடுத்தி கொண்டுள்ளார்.
அவர் கூறுகையில் 12 வயதிலேயே ஏறத்தாழ 42 திட்டங்களை முடித்துவிட்டேன், 8 ரோபோட்டுகள் , 5 வகையான ட்ரோன்களை உருவாக்கி உள்ளேன் என அவர் கூறினார்.
தற்போது இவர் உருவாக்கி உள்ள கண்ணிவெடி கண்டுபிடிப்பான் ட்ரோன்களை வாங்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது, இந்த ட்ரோனை கடின முயற்சிக்கு பின்னர் 4வது முறையில் உருவாக்கினார்.
முதலில் இதனை குஜராத் அரசு கண்காட்சியில் வைத்த போது அம்மாநில அரசு 5கோடி ருபாய்க்கான ஆர்டரை கொடுத்துள்ளது, பின்னர் மத்திய ரிசர்வ் காவல்படை இயக்குநர் பார்வையிட்டார் அவர்களும் ஆர்டர் கொடுத்துள்ளனர்.
பின்னர் இந்திய பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் ஆகியோர் பார்வையிட்டு, இவரை வெகுவாக பாராட்டி உள்ளனர்.
இதைத்தவிர வேறு சில ஆஃப்ரிக்க நாடுகளுடனும் பேச்சுவார்த்தையில் உள்ளதாக இளம் விஞ்ஞானி மற்றும் தொழிலதிபர் கூறுகிறார்.
இவரது ட்ரோன் தரையில் இருந்து மூன்றடி உயரத்தில் பறந்து கொண்டே நிலத்திற்கு அடியில் 8அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க வல்லது என்பது கூடுதல் தகவல் ஆகும்.